May 30, 2016

கே.பி.யின் விசாரணை முடிவுகளில் திருப்தியில்லை - விஜித ஹேரத்!

விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச ஆயுத விநியோகஸ்தரான கே.பி. என்ற குமரன் பத்மநாதனை கைது செய்து நீதிமன்றத்தில்
ஆஜர்ப்படுத்துமாறு உத்தரவிட கோரி, மக்கள் விடுதலை முன்னணி தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு எடுப்பது என மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

இதனடிப்படையில், எதிர்வரும் ஜூலை மாதம் 25ஆம் திகதி மனுவை விசாரணைக்கு எடுப்பதாக மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன அறிவித்துள்ளார்.

நீதிமன்றத்தில் இன்று வாதங்களை முன்வைத்த அரச சட்டத்தரணி, சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதால், வழக்கை நடத்துவது தொடர்பில் சிக்கல் இல்லை என கூறியுள்ளார்.

எவ்வாறாயினும் கே.பி. மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளில் தமக்கு திருப்தியில்லை என மக்கள் விடுதலை முன்னணியின் பிரசார செயலாளர் விஜித ஹேரத் தனது சட்டத்தரணி ஊடாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இதனால், தமது மனுவை விசாரிப்பதற்காக திகதியை அறிவிக்குமாறும் சட்டத்தரணி கேட்டுக்கொண்டுள்ளார்.

முன்வைக்கப்பட்ட வாதங்களை கவனத்தில் எடுத்துக்கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்றம், மனுவை எதிர்வரும் ஜூலை 25 ஆம் திகதி விசாரணைக்கு எடுப்பதாக அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment