May 6, 2015

காவாலித்தனமாக வீதியில் கூடி நின்றால் சட்டநடவடிக்கை - யாழ்ப்பாணப் பொலிசார் !


யாழ். மாவட்ட சிவில் பாதுகாப்பு குழு கூட்டம் இன்று யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
இந்தக் கலந்துரையாடலில் யாழ். மாவட்ட அரச அதிபர்  வேதநாயகன், வடமாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் லலித் ஜயசிங்க யாழ். மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் லக்ஸ்மன் ஜெயசேகர மற்றும் பிரதேச செயலர்கள்
சிவில் அமைப்பினர் ஏனைய அரச அதிகாரிகள் பிரதேச சபை தவிசாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது யாழ்.குடாநாட்டில் அதிகரித்துள்ள போதைப் பாவனை, வாள்வெட்டு, அடிதடிக் கலாசாரம்,மிருக பலியிடல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
மாலை நேரங்களில் தனியார் வகுப்புக்கள் நிறைவடைந்ததும் இளைஞர்கள் தேவையற்ற விதத்தில் வீதிகளில் கூடி நிற்க முடியாது என்றும், அதனை மீறி நிற்போருக்கு  எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொலிஸ்மா அதிபரினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் போக்குவரத்து பொலிஸாரை ஆறு மாதங்களுக்கு ஒருமுறை இடமாற்றம் செய்வதற்கும் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புக்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை பல்வேறு கருத்துப் பரிமாற்றங்களுடன் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் குற்றச் செயல்களை கட்டுப்படுத்த விசேட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று பொலிஸ் தரப்பு தெரிவித்தது.
அத்துடன் இங்கு இடம்பெறும் குற்றச் செயல்கள் குறித்து பொலிஸ் நிலையங்களில் தகவல் கொடுக்க அஞ்சுபவர்கள் பொலிஸாரால் தீங்கு இழைக்கப்படுவதாக கருதுபவர்கள் அதுபோன்ற சம்பவங்களை தன்னுடன் தொடர்புகொண்டு தெரிவிக்கமுடியும் என்று வடமாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்தார்.
இதற்கென அவர் தனது தொலைபேசி இலக்கத்தையும் குறிப்பிட்டு (0718591005) ஆங்கிலம் அல்லது சிங்கள மொழியில் தொடர்புகொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார் .

No comments:

Post a Comment