May 6, 2015

கணவன் இல்லாத பெண்களிடம் யாழ் பிரதேசசெயலக உயரதிகாரி பாலியல் கேள்விகளை தொடுத்தார் !

யாழ்ப்பாணப் பிரதேச செயலக வாழ்வின் எழுச்சி தலைமைத்துவ முகாமையாளர் வாழ்வெழுச்சி பயனாளிகளுக்கான மீளாய்வின்போது பெண்களிடம் பாலியல் அர்த்தத்தில் வினாக்களைத் தொடுத்தார் என்றும் இதனால் தாங்கள் மன ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.


மேலும், இந்த மீளாய்வின் போது உண்மையாக வாழ்வெழுச்சி முத்திரை பெறவேண்டியவர்களான பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் மற்றும் கஸ்ட நிலையிலுள்ள குடும்பங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

இது தொடர்பாக யாழ். அரச அதிபர் மற்றும் வாழ்வெழுச்சி அதிகாரிகளுக்கு தெரியப்படுத்திய போதிலும் அவர்கள் நடவடிக்கை எடுக்காத காரணத்தால் மகளிர் விவகார பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணம் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட வாழ்வெழுச்சிப் பயனாளிகளுக்கான முத்திரை மீளாய்வு தற்போது நடைபெற்று வருகின்றது. இந்த மீளாய்வு நடவடிக்கையில் வாழ்வெழுச்சி தலைமைத்துவ முகாமையாளர், யாழ்ப்பாணம் உதவிப் பிரதேச செயலர் மற்றும் பிரதேச கிராம சேவையாளர்கள் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

மீளாய்வின்போது தலைமைத்துவ முகாமையாளர் கணவனை இழந்த பயனாளிகளிடம் பாலியல் சார்ந்த கேள்விகளைக் கேட்டார் என்றும் விதவைகள், கணவன் காணாமற்போனவர்கள், கணவனால் கைவிடப்பட்டவர்கள் மற்றும் வறுமை நிலையில் வாடும் குடும்பங்கள் போன்றோர் இந்த மீளாய்வின்போது முத்திரைப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் இரவு 8.30 மணிவரை மீளாய்வு இடம்பெறுகின்றது. உரிய நேர ஒழுங்கு பின்பற்றப்படாமையால் காலை வேளை குழந்தைகளுடன் மீளாய்வுக்குச் சென்றவர்கள் இரவு வரை காத்திருக்க நேர்ந்ததாகவும் அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment