May 8, 2015

திருமலை கங்குவேலி பற்றி அதிகாரிகள் அசமந்தமாக மௌனம்!

திருகோணமலை மாவட்டத்தின் கங்குவேலி படுகாட்டுப் பகுதியில் சிங்கள குடியேற்றவாசிகளால் ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள காணிகள் தொடர்பினில் அதிகாரிகள் அசமந்தமாக உள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.


முன்னதாக ஆக்கிரமிப்பு விவகாரம் தொடர்பினில்  காணிக்கச்சேரி இடம்பெறும் என மூதூர் பிரதேச செயலகத்தினால் அறிவித்தல் வெளியிடப்பட்டிருந்தது.

பல வருட காலமாக தமிழ் விவசாயிகளுக்கு உரித்துடைய காணியில் அத்துமீறி விவசாய நடவடிக்கையில் சிங்கள விவசாயிகள் ஈடுபட்டு வந்தநிலையில் குறித்த விடயம் தொடர்பில் பல தடவை காவல் நிலையத்தினில்; தமிழ் விவசாயிகளினால் முறைப்பாடும் செய்யப்பட்டது. ஆனாலும் முறைப்பாடுகள் தட்டடிக்கழிக்கும் நிலைமையே காணப்பட்டு வந்தது.

இந்நிலையில் கடந்த மாதம் அத்துமீறும் சிங்கள விவசாயிகளின் செயற்பாட்டை நிறுத்தக் கோரி மூதூர் பிரதேசசெயலகத்திற்கு முன் பாதிக்கப்பட்ட தமிழ் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் மூதூர் பிரதேச செயலரினால், குறித்த காணி தொடர்பில் தமிழ், சிங்கள விவசாயிகளிடம் உறுதிகள் காணப்படுவதால் கடந்த 3 திகதி காணிக்கச்சேரி மேற்கொள்வதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் உறுதிமொழி வழங்கப்பட்டது.

அத்துடன் குறித்த காணிக்கச்சேரி இடம்பெறும் வரை தமிழ், சிங்கள விவசாயிகளை குறித்த வயல் காணிக்குள் உள்நுழைவதை தவிர்க்குமாறும் அவரால் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டது.

ஆனாலும் குறித்த திகதியில் எவ்வித காணிக்கச்சேரியும் அங்கு இடம்பெறவில்லையென தமிழ் விவசாயிகள் தரப்பினில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment