August 29, 2016

இராணுவத்தினருக்கு நன்றிக்கடன் பட்டவர்களாம் தமிழர்கள்! - கூறுகிறார் மங்கள !

வடமாகாணத்தில் இருந்து இராணுவத்தினர் வெளியேற வேண்டும் என கேட்பவர்கள், படையினர் செய்த நல்ல விடயங்களை மனதில் வைத்து நன்றி உடையவர்களாக இருக்க வேண்டும் என்று வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.
வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, வலிகாமம் வடக்கில் சொந்த காணிகள் இல்லாத மக்களுக்கு கீரிமலை பகுதியில் வழங்கப்பட்டுள்ள மாற்று காணிகள் மற்றும் வீட்டுதிட்டங்களை நேற்றுமுன்தினம் நேரில் சென்று பார்வையிட்டார்.

 
குறித்த வீட்டுத்திட்டங்களைப் பார்வையிட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில், ‘தற்போதைய அரசாங்கம் வடக்கு மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு தேவையான பல முயற்சிகளை மேற்கொண்டிருக்கின்றது. போர் நடைபெற்ற காலத்தில் மக்களுடைய பல காணிகள் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டிருந்தன. அவற்றில் முடிந்தளவு காணிகள் மக்களிடமே மீள வழங்கப்பட்டுள்ளன. மிகுதி நிலங்களும் மக்களிடம் மீள கையளிக்கப்படும். இதேபோல் இலங்கையின் சகல பாகங்களிலும் இராணுவத்தின் பங்களிப்பு ஏதோ ஒரு அளவில் தேவைப்படுகின்றது. எனவே இராணுவத்தினருக்கு தேவையான நிலங்களை தவிர மற்றயவை

மக்களிடம் மீள கையளிக்கப்படும். அதன் ஊடாக இயல்பு வாழ்வை உருவாக்குவோம்.

இதேபோல் வடமாகாணத்தில் இருந்து இராணுவம் வெளியேற வேண்டும் என கேட்பவர்கள், படையினர் செய்கின்ற தவறுகளை மட்டுமே பேசிக்கொண்டிருக்க முடியாது. படையினர் இங்கிருக்கும் காலத்தில் மக்களின் நம்பிக்கையை வெல்லும் விதத்தில் பல விடயங்களை செய்கிறார்கள். அது குறித்தும் மக்கள் நன்றி உடையவர்களாக இருக்கவேண்டும். மேலும் நாட்டுக்குள் அனைத்து மக்களும் அனைத்து பிரதேசங்களிலும் சுதந்திரமாக வாழ்வதற்கும் அதேபோல் முன்னேற்றகரமான எதிர்காலத்திற்கு உரிமை கோருவதற்குமான அடிப்படைகளை நாம் உருவாக்குவோம்.’ என்றார்.

No comments:

Post a Comment