August 29, 2016

இராணுவம் ஒதுங்கியிருக்கவேண்டும் மக்களுடன் இணைந்தால் பிரச்சினை ஏற்படும் - சீ.வி.விக்னேஷ்வரன்

தமிழ் மக்களுக்கு உண்டாக்கிய பாதிப்புகளுக்கான நஷ்டஈடாகவே, இராணுவம் தமிழ் மக்களுக்கு செய்கின்ற நன்மைகளை நாங்கள் பார்ப்போம். அதனை தாண்டி இராணுவம் தமிழ் மக்களுக்கு சேவை செய்கின்றது.
அதனை நாங்கள் மெச்சவேண்டும். நன்றியுடன் இருக்கவேண்டும். எனக் கேட்பது சரியானதல்ல என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ். குடாநாட்டுக்கு 2 நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டிருக்கும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, வலி வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து சொந்த நிலம் இல்லாத மக்களுக்கு கீரிமலை பகுதியில் வழங்கப்பட்ட மாற்று காணிகளையும் வீட்டுதிட்டத்தையும் நேற்று பார்வையிட்டார்.

இதன் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் மங்கள சமரவீர,

படையினர் வெளியேற்றப்படவேண்டும் என கோரிக்கை விடுக்கின்றவர்கள், படையினர் செய்கின்ற தவறுகளை மட்டுமே பேசிக் கொண்டிருக்காமல் அவர்கள் செய்கின்ற சேவைகளுக்கும் நன்றியுடையவர்களாக இருக்க வேண்டும் என கூறியிருந்தார்.

அமைச்சரின் இந்த கருத்து தொடர்பாக முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரனிடம் நேற்றைய தினம் ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு பதிலளித்துள்ளார்.

தொடர்ந்தும் வட மாகாண முதலமைச்சர் பதிலளிக்கையில்,

இராணுவம் மக்களுக்கு நன்மைகளை செய்யவேண்டிய அவசியம் இல்லை. இராணுவம் மக்களுடன் இணைந்து சேவை செய்யத் தொடங்கினால் அங்கே ஒழுக்கம் பாதிக்கப்படும்.

இராணுவம் என்பது நீதிபதிகளைபோல் ஒதுங்கியிருக்க வேண்டும். அதனை விடுத்து மக்களுடன் இணைந்து வேலை செய்யத் தொடங்கினால் பிரச்சினைகளே உண்டாகும்.

மேலும், இராணுவத்தில் இருந்து வெளியேற்றப்பட்டதற்குப் பின்னர் அவர்கள் எதாவது உதவிகளைச் செய்தால் அது வேறு விடயம். அதில் பிரச்சினை இல்லை, ஆனால் அதனை போரில் ஈடுபட்ட இராணுவம் செய்ய இயலாது.

அவை இரண்டையும் ஒரே விதமாக பார்க்கவும் முடியாது. மேலும் இராணுவம் மக்களுக்கு சேவை செய்கிறார்கள். என்பதை நல்லவிதமான பார்ப்பதற்கும் முடியாது.

இராணுவம் மக்களுக்கு பணத்தையோ உதவிகளையோ செய்தால் அதனை நாங்கள் வாங்கிக் கொள்கின்றோம். அது அவர்கள் தமிழ் மக்களுக்கு பலகாலமாக உண்டாக்கிய பாதிப்புகளுக்கான நஷ்டஈடாக மட்டுமே இருக்கும்.

அதனை நாங்கள் மெச்ச வேண்டும் என்றோ அதற்கு நாங்கள் நன்றியுடன் இருக்கவேண்டும் என்றோ எதிர்பார்க்க முடியாது என வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment