August 30, 2016

ஆனையிறவில் போருக்குப் பின் மீண்டும் உப்பு அறுவடை ஆரம்பம்!

ஆனையிறவு உப்பளத்தில் இறுதிக்கட்டப் போருக்குப் பின்னர் இன்று மீண்டும் உப்பு அறுவடை செய்யப்பட்டுள்ளது. ஆனையிறவு உப்பளத்திற்கான அலுவலக கட்டடத் தொகுதிக்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் ஆனையிறவு உப்பளத்தின் இயந்திர இயக்குநர்கள் மற்றும் சிற்றூழியர்களுக்கான நியமனக் கடிதங்களும் இன்று வழங்கப்பட்டன.


 
கடந்த 1937 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ஆனையிறவு உப்பளம், கடந்த 1990 ஆம் ஆண்டு காலப் பகுதியில் யுத்தத்தினால் சேதமடைந்த நிலையில், மீளவும் 2004 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இதன்பின்னர், கடந்த 2008 ஆம் ஆண்டு தொடர் யுத்தம் காரணமாக முற்றாக செயலிழந்த நிலையில், மீண்டும் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு இன்று ஆனையிறவு உப்பளத்தில் உப்பு அறுவடை செய்யப்பட்டுள்ளது.

இதன் கட்டுமானப் பணிகள் கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் நூறு மில்லியன் ரூபா செலவில் ஆரம்பிக்கப்பட்டிருந்ததுடன், மேலும் இருபத்தைந்து மில்லியன் ரூபா செலவில் கட்டடங்கள், களஞ்சியம் என்பன புனரமைப்பு செய்யப்பட்டன.

மீள்குடியேற்றத்திற்கு பின்னர், கண்ணிவெடி அகற்றப்படாமல், இராணுவத்தினரின் வசமிருந்த ஆணையிறவு உப்பளத்தில் தற்பொழுது உப்பு அறுவடை செய்யப்பட்டமை வரவேற்கத்தக்க விடயம் என கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சத்தியசீலன் குறிப்பிட்டார்.

கடந்த காலங்களில் சுமார் ஐம்பதாயிரம் மெற்றிக்தொன் உப்பு உற்பத்தி செய்யப்பட்ட போதிலும் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள அறுவடையில் முதற்கட்டமாக எண்ணாயிரம் மெற்றிக்தொன் உப்பை உற்பத்தி செய்ய முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த உப்பளத்தில் முன்னர், 650 பணியாளர்கள் பணியாற்றிருந்த நிலையில், தற்பொழுது 31 பணியாளர்களே வேலை செய்து வருகின்றனர்.

இந்த நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சத்தியசீலன், கண்டாவளைப் பிரதேச செயலாளர் முகுந்தன் மற்றும் மாந்தை உப்பளத்தில் தலைவர் ஆகியோர் பிரதம விருந்தினர்களாக கலந்துகொண்டு உப்பு அறுவடை செய்தல் மற்றும் அடிக்கல் நாட்டு விழா என்பவற்றில் பங்குகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.




No comments:

Post a Comment