August 8, 2016

'கிறுக்கிப் போட்ட காகிதங்கள்' கவிதை நூல் வெளியீட்டு விழா!

யாழ்ப்பாணம் நெல்லியடியில் இடம்பெற்ற ஜேர்மன் கண்ணன் கண்ணராசன் எழுதிய 'கிறுக்கிப் போட்ட காகிதங்கள்' கவிதை நூல் வெளியீட்டு விழா இடம்பெற்றது.
புலம்பெயர்ந்து ஜேர்மன் தேசத்தில் வசிக்கும் கவிஞர் கண்ணன் கண்ணராசன் எழுதிய 'கிறுக்கிப் போட்ட காகிதங்கள்' கவிதை நூலின் வெளியீட்டு விழாவானது 06.08.2016 சனிக்கிழமை, காலை 10.00 மணிக்கு கரவெட்டி தெற்கு பிரதேச சபை மண்டபத்தில் இடம்பெற்றது. நிகழ்வுக்கு ஒளி அரசி சஞ்சிகை இணையாசிரியர் பா.ஜெயிலா தலைமை தாங்கினார். நிகழ்ச்சிகளை யோ.புரட்சி நெறியாள்கை செய்து தொகுத்தளித்தார்.
விருந்தினர்கள் வரவேற்கப்பட்டதைத் தொடர்ந்து சுடரேற்றல் இடம்பெற்றது. தமிழ் மொழி வாழ்த்தினை மாணவிகள் லோஜினி, ரிதர்சனா, கிசானி ஆகியோர் இசைத்தனர். வரவேற்புரையினை கவிஞர் ஆ.முல்லைத்திவ்யன் வழங்கினார். தலைமையுரையினை பா.ஜெயிலா வழங்கினார். அறிமுக உரையினை கனடா வாழ் புலம்பெயர் படைப்பாளி மணிமேகலை கைலைவாசன் வழங்கினார்.
வாழ்த்துரைகளை சுடர் ஒளி, ஒளிஅரசி, புலமைச்சுடர் வெளியீடுகளின் பிரதம ஆலோசகர் இ.ஜனதன், கிழக்கு மாகாண கலாசார உத்தியோகத்தர் குணபாலா, வடமராட்சி கல்வி வலய ஆசிரிய ஆலோசகர் திருமதி ஆனந்தராணி ஆகியோர் வழங்கினர்.
நூலினை நூலாசிரியரின் பெற்றோர் திரு.திருமதி சின்னையா கனகாம்பிகை இணையர் வெளியிட்டு வைக்க முதற்பிரதியினை கனடா வாழ் புலம்பெயர் படைப்பாளி மணிமேகலை கைலைவாசன் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து சிறப்புப் பிரதிகள் வழங்கப்பட்டன.
நூலின் திறனாய்வுரையினை கவிஞர் முல்லைத்தீபன் வழங்கினார். பிரதம விருந்தினர் உரையினை, நிகழ்வின் பிரதம விருந்தினர் கோப்பாய் ஆசிரியர் கலாசாலை பிரதி அதிபர் ச.லலீசன் வழங்கினார்.
தொடர்ந்து  'தினமும் எம்மை திண்டாட வைப்பவை' எனும் தலைப்பில் கவியரங்கம் இடம்பெற்றது. இக்கவியரங்கில் கவிஞர்களான வே.முல்லைத்தீபன், கஜன், நெடுந்தீவு தனுஷ், பண்டத்தரிப்பு வினேஸ், நெடுந்தீவு அரவிந்த் ஆகியோர் பங்கேற்றனர். தொடர்ந்து நினைவுப் பரிசில்கள் நூலாசிரியரின் பெற்றோரினால் வழங்கப்பட்டது. நிறைவாக நன்றியுரையினை கவிஞர் கம்பிகளின் மொழி பிறேம் வழங்கினார்.
இந்த நிகழ்வுகள் ஒளிஅரசி சஞ்சிகை அனுசரனையுடன் இடம்பெற்றது.
ஈழத்தின் இலக்கியப் பரப்பில் இன்னுமொரு புதுவரவாக 'கிறுக்கிப் போட்ட காகிதங்கள்' கவிதை நூலும் தன்னை இணைத்துக்கொண்டது.

No comments:

Post a Comment