August 24, 2016

கண்ணீரில் நனைந்த சித்தாண்டி!

மட்டக்களப்பு சித்தாண்டியில் இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட 57 பேரின் நினைவு நாள் இன்று புதன்கிழமை அனுஸ்ட்டிக்கப்பட்டது.


கடந்த 1990 ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் 15 ஆம் 18 ஆம் மற்றும் 22 ஆம் திகதிகளில் இராணுவத்தினரால் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது கைதுசெய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சுமார் 57 ற்கு மேற்பட்டவர்களின் உறவினர்களினால் இந்த நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு சித்தாண்டி ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலய முன்றலில் காலை 9 மணிக்கு இந்த நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட தங்களது உறவுகளை கண்டுபிடித்து தருமாறு வலியுறுத்தி விசேட வழிபாடுகளுடன் கூடிய பேரணி ஒன்றையும் இவர்கள் நடத்தியுள்ளனர்.

பல மக்கள் தம் உறவுகளை நினைத்து கண்ணீர் சிந்திய வண்ணமாக சென்றமையும் குறிப்பிடத் தக்கது…

மட்டக்களப்பு சித்தாண்டி முச்சந்திப்பிள்ளையார் ஆலயத்தில் இருந்து பேரணியாக வருகைதந்த காணாமல் போனவர்களின் உறவுகள் முருகன் கோயில் வீதியுடாக சித்தாண்டி ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தைச் சென்றடைந்து அங்கு காணாமல் போன தங்களது உறவுகள் மீள வரவேண்டும் என்றும் தங்களது குடும்பத்தின் வாழ்வில் ஒளி ஏற்றப்படவேண்டும் என்று பிரார்த்தணை செய்து சிட்டி விளக்குகளை ஏற்றி வழிபாட்டில் ஈடுபட்டனர்.

இந்த நிகழ்வில் காணாமல் போன உறவுகளில் ஒருவரான சிவலிங்கம் அரசம்மா என்பவர் 1990 ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற நான்கு சுற்றிவளைப்புக்களில் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட 57 பேரின் பெயர்விபரங்களை வாசித்துக்காட்டியதுடன் அவர்கள் குறித்த விபரங்களை நல்லிணக்க செயலனியிடம் ஒப்படைக்கவுள்ளதாகவும் கூறினார்.

காணாமல் போனோர் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வில் காணாமல் பேணவர்களின் உறவுகள் உட்பட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான கோவிந்தன் கருணாகரம், மா.நடராசா மற்றும் கந்திசேவா சங்கத்தின் தலைவர் அ.செல்வேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.









No comments:

Post a Comment