August 29, 2016

வவுனியா நகரசபைக்கு தமிழர் அல்லாத ஒருவரை செயலாளராக நியமிக்க முயற்சி! சிவமோகன் எம்.பியும் துணைபோகின்றாரா?

வவுனியா நகரசபைக்கு தமிழர் அல்லாத ஒருவரை செயலாளராக நியமிக்க முயற்சிகள் இடம்பெற்று வருவதாக தெரியவருகிறது.


இதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன் அவர்களும் துணைபோகின்றாரா என்று சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ் மக்கள் செறிவாக வாழும் வவுனியா நகரசபையின் தற்போதைய செயலாளராக தமிழர் ஒருவரே உள்ளார்.

எனினும், அவரை அப்பதவியில் இருந்து வெளியேற்றி சிங்கள அல்லது முஸ்லிம் இனத்தை பிரதிநிதித்துவப்படும் நபர் ஒருவரை செயலாளராக நியமிக்க திரை மறையில் சில செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் விடுதிகளுடன் கூடிய மூன்று மாடிகளைக் கொண்ட சத்திரசிகிச்சை வைத்தியசாலை ஒன்றை வவுனியா போதனா வைத்தியசாலை அருகில் அமைப்பதற்காக நகரசபையிடம் அனுமதி கோரியிருந்தார்.

எனினும், அதன் கழிவகற்றல் முறை தொடர்பில் எழுந்த சர்ச்சையையடுத்து நகர அபிவிருத்தி அதிகாரசபையால் அதற்கான அனுமதி இதுவரை வழங்கப்படவில்லை.

முறையான கழிவகற்றல் முறையை பயன்படுத்தினால் மட்டுமே அனுமதி வழங்கப்படக் கூடிய நிலையில் உள்ளது.

இந்நிலையில் தமக்கான அனுமதி வழங்கப்படாமை குறித்து பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன் நகரசபை செயலாளர் மற்றும் நகர அபிவிருத்தி அதிகாரசபை உத்தியோகத்தர் ஆகியோருக்கு எதிராக லஞ்சம் பெற முயற்சித்ததாக குற்றம் சாட்டி லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்திருந்தார்.

இதேவேளை, தற்போதைய செயலாளர் பதவி விலகுமிடத்து குறித்த பதவிக்கு சிங்கள அல்லது முஸ்லிம் பிரமுகர் ஒருவரை நியமிக்க சில அதிகாரிகளும் வேறு சில அரசகட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களும் முயற்சி எடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

வைத்தியசாலை கட்டுவதற்கான அனுமதி கிடைக்காமையால் குறித்த இச் செயற்பாட்டுக்கு கூட்டமைப்பின் எம்.பியும் துணை போகின்றாரா என்ற சந்தேமும் எழுந்துள்ளது.

இதேவேளை, வவுனியா உள்ளூராட்சி உதவி ஆணையாளராக பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவரே நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment