August 28, 2016

ஓமந்தை சோதனை நிலையம் அமைந்துள்ள காணியை மீட்டுத்தாருங்கள்!

வவுனியா ஓமந்தையில் அமைந்துள்ள சோதனை நிலையம் அமைந்துள்ள காணியை மீட்டுத்தாருங்கள் என உரிமையாளர்களில் ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


ஓமந்தைச் சோதனை நிலையம் அமைந்துள்ள ஏ9 வீதியின் இருபுறங்களிலும் அமைந்துள்ள காணிகள் பலருக்குச் சொந்தமான தனியார் காணிகளாக காணப்படுகிறது.

அதற்கான காணிஆவணங்களும் அவர்களிடம் உண்டு. ஆனால் பல இடங்களிலும் இராணுவம் பிடித்துள்ள காணிகள் விடுவிக்கப்பட்டு வரும் நிலையில் ஓமந்தை சோதனை நிலையம் அமைந்துள்ள காணிகள் தொடர்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை.

இது தொடர்பில் காணி உரிமையாளர்களில் ஒருவரான செ.சிவபாதசுந்தரம் கருத்து தெரிவிக்கும் போது யுத்த காலத்தில் தாங்கள் இடம்பெயர்ந்து வவுனியாவின் பல பகுதிகளுக்கு சென்று விட்டதாகவும், அன்று தொடக்கம் இன்று வரை 22 வருடங்களாக வாடகை வீட்டிலும் நண்பர்கள் உறவினர்கள் வீடுகளிலும் வாழ்ந்து வருவதாகவும் தற்போது யுத்தம் நிறைவு பெற்று ஏழு ஆண்டுகள் கடந்த நிலையில் நல்லாட்சி அரசு ஒன்று ஏற்பட்டுள்ளது என சொல்லப்படுகின்ற சூழலில் தங்களுடைய சொந்த காணிகளை இனியாவது மீட்டுதாருங்கள் என கோரிக்கை விடுத்துள்ளார்.

ஓமந்தை சோதனை நிலையம் தங்களுடைய நான்கு ஏக்கர் காணியையும் உள்ளடங்கியே அமைக்கப்பட்டுள்ளது. தற்போது ஒமந்தை சோதனை நிலையத்தில் முன்னைய காலங்கள்போன்று சோதனை இடம்பெறுவது கிடையாது என்றும் குறிப்பிடும் சிவபாதசுந்தரம் இனியும் நாங்கள் சொந்த மாவட்டத்திற்குள் இடம்பெயர்ந்த மக்களாக வாழ முடியாதும்என்றும் தங்களது காணிகயை மீண்டும் தங்களுக்கு வழங்குவதற்கு உரிய அரசியல் மற்றும் அதிகாரிகள் மட்டத்தில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் தெரிவித்தார்.

இதுவரை காலமும் காணி ஆவணங்களுடன் பிரதேச செயலகம், மாவட்டச் செலயலகம், அரசில் தரப்புகள், என பலரையும் சந்தித்து காணியை மீட்டுத்தருமாறு கோரியும் பலன் கிடைக்கவில்லை என கவலை தெரிவிக்கும் அவர் தனது குடும்பத்தின் எதிர்காலம் கருதி நல்லாட்சி அரசு என்று சொல்லப்படுகின்ற இந்த ஆட்சியிலாவது காணியை மீட்டுத்தருமாறு கோரிக்கை விடுக்கின்றார்​.

No comments:

Post a Comment