ரயிலில் பயணம் செய்துகொண்டிருந்தபோது வெளியிலிருந்து வீசப்பட்ட கல் தாக்குதலுக்கு இலக்காகிய உதவிக் கல்விப் பணிப்பாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ரயிலின்மீது ஏறியப்பட்ட கல் தலையின் பின்புறத்தில் தாக்கியதால் படுகாயமடைந்து, அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.
வட மத்திய மாகாண கல்வியமைச்சில் கடமையாற்றும் உதவிக் கல்விப் பணிப்பாளரான கே.எல்.புஷ்பகுமார என்பவரே உயிரிழந்தவராவார். கடந்த 3ஆம் திகதி, தனது வேலையின் நிமித்தம் கொழும்புக்கு வந்த இவர் அதனை முடித்துக்கொண்டு கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து வவுனியா நோக்கிப் புறப்பட்ட எக்ஸ்பிரஸ் ரயிலில் அநுராதபுரம் நோக்கிப் பயணித்துள்ளார்.
அதன்போது, வனவாசல மற்றும் களனிப் பிரதேச ரயில் நிலையத்துக்கு அருகில் ரயில் மீது கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் காயமடைந்த உதவிக் கல்விப் பணிப்பாளர், ரயில் ஊழியர்களால் ராகம ரயில் நிலைய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.
ரயில் நிலைய அதிகாரிகள், அவரை வைத்தியசாலையில் அனுமதிக்க முயன்றபோது, அதனை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. பின்னர், அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment