August 23, 2016

முதல்வர் விக்னேஸ்வரனை ஓரம் கட்டுவதன் நோக்கம் என்ன?

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன் வழங்கிய ஆலோசனைகளை புறக்கணித்து அவசர அவசரமாக முதலீட்டாளர் சம்மேளனத்தை வடக்கு ஆளுநர் அங்குரார்ப்பணம் செய்யவேண்டிய அவசியம் என்ன? என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் கேள்வி எழுப்பியுள்ளார்.


முதலமைச்சரை ஓரங்கட்டி மஹிந்த ஆட்சியில் இருந்த ஆளுநரின் செயற்பாடுகளுக்கு ஒப்பான செயற்பாடுகளையே இந்த ஆளுநரும் மேற்கொள்ள முயல்கிறாரா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இவ்வாறான நிகழ்வுகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் கலந்து கொள்வது எதற்காக? எனவும் எனவும் கேள்வி எழுப்புகிறார்.

வட மாகாண முதலீட்டாளர் சம்மேளனம் ஆளுநர் தலைமையில் யாழ்ப்பாணத்தில் நேற்று அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.

இந்நிகழ்வில் தமிழ்த் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் 3 பேர் மட்டுமே கலந்து கொண்டனர். ஏனையோர் கலந்து கொள்ளாமைக்கான காரணம் என்ன என சிறீதரனிடம் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வடமாகாணத்தில் எவ்வாறான முதலீடுகளை மேற்கொள்ளலாம் என துறைசார் நிபுணர்களுடன் கலந்தாலோசித்து அவை தொடர்பான சரியான தகவல்களை அறிந்து கொண்டதன் பின்னர் நாம் இணைந்தே முதலீட்டாளர் சம்மேளனத்தை உருவாக்கலாம் என ஆளுநர் றெஜினோல்ட் கூரேவுக்கு கடிதம் எழுதியிருந்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் ஜனாதிபதியின் பிரதிநிதி என்ற வகையில் சில விடயங்களை மாகாண அரசுடன் கலந்துரையாடியே தீர்மானிக்க வேண்டும் எனவும் ஆளுநரிடம் முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன் பின்னரும் முதலமைச்சரை ஓரங்கட்டி மிக அவசர அவசரமாக முதலீட்டாளர் சம்மேளனத்தை அங்குரார்ப்பணம் செய்யவேண்டிய தேவை என்ன என கேள்வி எழுகிறது எனவும் சிறீதரன் தெரிவித்தார்.

தொழில்சார் வளர்ச்சி என்பது மக்களுடைய இயல்வு வாழ்க்கையிலும் தங்கியிருக்கின்றது. தொழில்துறையில் வளர்ச்சியடைந்த நாடுகளை எடுத்துக் கொண்டால் அங்கே மக்கள் இயல்பான வாழ்க்கையை வாழ்கிறார்கள்.

ஆனால் வடக்கில் இன்றும் பல்லாயிரம் மக்கள் தமது சொந்த இடங்களுக்குப் போக முடியாமல் உள்ளனர். ஆயிரக்கணக்கானவர்கள் காணாமல் போயுள்ளனர். பல நூற்றுக்கணக்கானோர் சிறைகளில் வாழ்கிறார்கள். இதனை விட கணவனை இழந்த பெண்கள், பெற்றோரை இழந்த சிறார்கள் என பல வகைப்பாட்டில் தமிழர்கள் அவலங்களோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

இவ்வாறான நிலையில் வட மாகாணத்தில் தொழில் வளர்ச்சியை ஏற்படுத்துகிறோம் என்ற போர்வையில் இருக்கும் கோவணத்தையும் இழுத்து எடுப்பதற்கு முயற்சிக்கிறார்கள்.

எங்களின் கடல்வளம், விவசாயம் போன்றன எங்கள் பொருளாதாரத்தின் முதுகெலுப்பான துறைகள். அவை இராணுவத்தால் முடக்கப்பட்டுள்ள நிலையில் தொழில் வளர்ச்சி குறித்து இவர்கள் பேசுவது வேடிக்கை.

இவ்வாறு ஆளுநர் தன்னிச்சையாக ஏற்பாடு செய்யும் நிகழ்வுகளில் எமது நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்வது வேதனையானது.

இவ்வாறானவர்கள் எப்படி? தமிழர்களுக்கு தீர்வினை பெற்று கொடுக்கப்போகிறார்கள்? என்ற கேள்வியும் எமக்குள் எழுகின்றது எனவும் சிறீதரன் தெரிவித்தார்.

மேலும் நல்லூர் திருவிழாவுக்கு வரும் புலம்பெயர் தமிழர்கள் எல்லோரும் முதலீட்டாளர்களா? கண்ணை மூடி கொண்டு நீங்கள் சொல்வதிலெல்லாம் அவர்கள் முதலிடுவார்களா? எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

No comments:

Post a Comment