July 18, 2016

காணாமல் போனார் காரியாலயம் யாழ்ப்பாணத்தில்!

ஸ்ரீலங்காவில் காணாமல் போனோர் தொடர்பான காரியாலயம் மற்றும் காணாமல் போனோர் தொடர்பில் கருத்தறியும் நடவடிக்கை இன்று யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.


சட்டத்தரணி மனோரி முத்தெட்டுவேகம தலைமையிலான 11 பேர் அடங்கிய குழு இன்று காலை 9.30 முதல் யாழ்ப்பாணத்தில் பாதிக்கப்பட்ட மக்களிடம் இந்த கருத்தறியும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

மூன்று கட்டமாக மேற்கொள்ளப்படவுள்ள இந்த நடவடிக்கையில் முதல் கட்டமாக, காணாமல்போனவர்களின் உறவினர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் காணாமல் போனோர் தொடர்பான காரியாலயம் எவ்வாறு அமைய வேண்டும் என்பது தொடர்பில் ஆராயப்படவுள்ளது.

இரண்டாம் கட்டமாக மீள்குடியேற்றம் மற்றும் காணிப்பிரச்சினை தொடர்பாக பாதிக்கப்பட்டவர்களிடம் இன்று மாலை கலந்துரையாடப்படவுள்ளது.

நாளை திங்கட் கிழமை புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக மூன்றாம் கட்டமாக குறித்த குழுவினர் ஆராயப்படவுள்ளனர்.

வடக்கு, கிழக்கில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் சட்டத்தரணி மனோரி முத்தெட்டுவேகம தலைமையிலான 11 பேர் அடங்கிய குறித்த குழுவினர் இந்த நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளனர்.

ஸ்ரீலங்காவில் காணாமல் போனோர் தொடர்பான காரியாலயம் எவ்வாறு அமைய வேண்டும் என்பது தொடர்பில் மனித உரிமை அமைப்புக்கள் மற்றும் பொது அமைப்புக்களிடம் கருத்தறியும் செயற்பாடுகளை ஆரம்பித்த குறித்த குழுவினர் தற்போது பாதிக்கப்பட்டவர்களிடமும் கருத்துக்கைளை பெற்று வருகின்றனர்.

இந்த குழுவினரின் முதலாம் கட்ட நடவடிக்கை கொழும்பில் கடந்த 9 ஆம் திகதி முன்னெடுக்கப்பட்டதுடன், இதில் பல்வேறு அமைப்புக்களின் பிரதிநிதிகள், சட்டத்தரணிகள் ஆகியோர் கலந்துகொண்டு தமது கருத்துக்களை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment