July 18, 2016

அமெரிக்கா மீது சம்பந்தன் நம்பிக்கை!

ஐ.நா பேரவையில் நிறைவேற்றப்பப்பட்ட தீர்மானத்தை நிறைவேற்றுதல் மற்றும் அரசியல் தீர்வு தொடர்பான பேச்சுவார்த்தை என்பன தொடருமென்றும், பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பான அமெரிக்காவின் அக்கறையும் தொடருமென்றும் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கிடையிலான சந்திப்பொன்று வவுனியாவில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்றது. இதனையடுத்து இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது, அண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்க செயலாளர் நிஷா பிஷ்வால் மற்றும் அமெரிக்காவின் ஜனநாயகம் மற்றும் மனித உரிமை விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் டொம் மலினோக்ஸி ஆகியோருடனான சந்திப்பு குறித்து ஊடகவியலாளர்களால் வினவப்பட்டது. இதற்கு பதிலளிக்கும்போதே சம்பந்தன் மேற்குறித்தவாறு தெரிவித்தார்.

இச்சந்திப்பின்போது, யுத்த பாதிப்புக்கு உள்ளான வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக தெரிவித்த சம்பந்தன், அமெரிக்க பிரதிநிதிகளால் பல கேள்விகள் தொடுக்கப்பட்டதாகவும், அதற்கு காத்திரமான பதில்களை வழங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.

யுத்தக் குற்றம் மற்றும் மனித உரிமை மீறல் தொடர்பில் கடந்த வருடம் ஐ.நாவில் நிறைவேற்றிக்கொள்ளப்பட்ட தீர்மானம் தொடர்பில், அண்மையில் நடைபெற்று முடிந்த ஐ.நா பேரவையின் 32ஆவது அமர்விலும் வலியுறுத்தப்பட்டது. குறித்த பிரேரணை நிறைவேற்றத்தின் பிரதான பங்குதாரரான அமெரிக்கா, இதுகுறித்து உன்னிப்பாக கவனித்து வரும் நிலையில், அதன் ஒரு அங்கமாகவே நிஷா பிஷ்வாலின் இலங்கை விஜயம் அமைந்திருந்தது.

எனினும், உள்ளக விசாரணை பொறிமுறையின் கட்டமைப்பு குறித்து, இலங்கை அரசாங்கமே முடிவெடுக்க வேண்டுமென குறித்த பிரதிநிதிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment