July 15, 2016

இலங்கையில் பயிற்சி பெற்று ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பில் இணைந்த தம்பதி! இந்திய புலனாய்வு பிரிவுகள் கவனம்!

இந்தியாவின் கேரளா மாநிலத்தில் இருந்து இலங்கை வந்து இங்கு இரண்டு மாதங்கள் இஸ்லாமிய போதனைகளை பெற்று ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பில் இணைந்து கொண்ட தம்பதி குறித்து இந்திய புலனாய்வு பிரிவுகள் கவனம் செலுத்தியுள்ளன.


பாத்திமா (நிமிஷா), ஈஷா (பேசோன் வின்சன்ட்) ஆகிய இவர்கள் இலங்கையில் உள்ள சலாபி என்ற இஸ்லாமிய போதனை வகுப்புகளில் கலந்து கொண்ட பின்னர், காணாமல் போயுள்ளதாகவும் இவர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பில் இணைந்து கொண்டுள்ளதாக தகவல்கள் கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது.

சன்னி முஸ்லிம் பிரிவின் வஹாப் பிரிவுக்குரிய சலாபி என்ற இஸ்லாமிய போதனைகள் நீர்கொழும்பு பிரதேசத்தில் சிறிய வீடொன்றை மையமாக கொண்டு நடத்தப்படுவதாக இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் செயலாளர் மௌலவி முபாரக் கூறியுள்ளதாக நியூ இந்திய எக்ஸ்பிரஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இலங்கை ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள மௌலவி முபாரக், இஸ்லாமிய மத போதனைகள் நடத்தும் நிலையம் ஒன்று இருப்பதாகவும் அதில் பயங்கரவாதத்தை தூண்டும் போதனைகள் நடத்தப்படுவதாக தகவல் இல்லை எனவும் கூறியுள்ளார்.

அத்துடன் எந்த வெளிநாட்டு மாணவர்களும் இந்த நிலையத்திற்கு வந்து இஸ்லாமிய போதனைகளை கற்றுக்கொள்ளவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும் காணாமல் போயுள்ளதாக கூறப்படும் தம்பதி தமிழகத்தில் இருந்து கேரளாவின் கொச்சின் பிரதேசத்திற்கு சென்று அங்கிருந்து இலங்கை சென்று சுமார் இரண்டு மாதங்கள் தங்கியுள்ளதாகவும் அவர்கள் தங்கியிருந்த காலப் பகுதி தொடர்பான மேலதிக தகவல் வெளியாகவில்லை எனவும் இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

இவர்கள் தொடர்பான தகவல்களை இலங்கை பொலிஸ் ஊடாக பெற்றுக்கொண்டதாக இந்திய ஊடகம் கூறியுள்ளது.

எனினும் அப்படியான தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை என பொலிஸ் ஊடகப் பணிப்பாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் சவுதி அரேபியா, பாகிஸ்தான், கட்டார் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வருகை தந்துள்ள போதகர்களின் கீழ் இஸ்லாமிய மதரசாக்களில் இஸ்லாமிய அடிப்படைவாதம் போதிக்கப்படுவதாக பல்வேறு அமைப்புகள் தொடர்ந்தும் தகவல்களை வெளியிட்டு வந்ததன.

எனினும் தற்போதைய அரசாங்கமோ, கடந்த அரசாங்கமோ இது தொடர்பாக எவ்வித கவனத்தையும் செலுத்தவில்லை எனவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இவ்வாறான சூழ்நிலையில், இலங்கையில் உள்ள பெரும்பாலான முஸ்லிம் பிரதேசங்களில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் கொள்கைகள் பிரலமாகி வருவதாக அரச புலனாய்வு பிரிவினர் கடந்த காலத்தில் தகவல் வெளியிட்டிருந்தனர்.

மேலும் இலங்கையில் உள்ள இஸ்லாமிய அடிப்படைவாதிகள் தொடர்பான தகவல்களை பரிமாறிக்கொள்ளுமாறு இந்திய புலனாய்வு பிரிவுகளும் கோரியிருந்தன.

எனினும் இலங்கை அரச தரப்பில் இதற்கு மந்த கதியிலான பதிலே வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனிடையே இலங்கை ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் இலக்காக மாறியுள்ளதாக சர்வதேச யுத்த மோதல்கள் சம்பந்தமான அமெரிக்காவின் ஆய்வு நிறுவனம் ஒன்று தகவல் வெளியிட்டிருந்தது.

பங்களாதேஷ், மாலைதீவு ஆகிய நாடுகளில் இருந்து சுற்றுலா விசாவை பெற்று இலங்கை வரும் இஸ்லாமிய இளைஞர்கள் இலங்கையில் தங்கியிருந்து மத ரீதியான தர்க்க பயிற்சிகளை பெற்று வருவதாகவும் இவர்கள் வந்து செல்லும் இடமாக இலங்கையை பயன்படுத்தி வருவதாகவும் அந்த நிறுவனம் குறிப்பிட்டிருந்தது.

No comments:

Post a Comment