July 15, 2016

வடக்கில் விடுவிக்கப்பட்ட காணிகளில் உடனடி மீள்குடியேற்றம் அவசியம் -நிஷா பிஷ்வால்!

வட மாகாணங்களில் பொதுமக்களின் பாவனைக்காக விடுவிக்கப்படும் உயர் பாதுகாப்பு வலயங்களிலுள்ள காணிகளில் மக்கள் இலகுவாக மீள்குடியமர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்க செயலாளர் நிஷா பிஷ்வால் வலியுறுத்தியுள்ளார்.


அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்க செயலாளர் நிஷா பிஷ்வால் மற்றும் அமெரிக்காவின் ஜனநாயகம் மற்றும் மனித உரிமை விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் டொம் மலினோக்ஸி ஆகியோரது இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் இறுதி தினத்தில் நேற்று (வியாழக்கிழமை) ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், பாதுகாப்பு வலயங்கள் விடுவிக்கப்பட்டு வருகின்றன. ஆனால் அங்கு மக்கள் உடனடியாக மீளகுடியமர்வதற்கான வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டும். குறிப்பாக அடிப்படை தேவைகளை நிறைவு செய்றவதுடன் பாடசாலைகள், வைத்தியசாலை, மின்சாரம் போன்ற வசதிகளும் வழங்கப்பட வேண்டும்.

அதேவேளை, விடுவிக்கப்படும் பகுதிகளில் மக்கள் எவ்வித தடையுமின்றி பிரவேசிப்பதற்கான அனுமதிகளும் வழங்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார். அத்துடன், இலங்கையில் பயங்கரவாத தடைச் சட்டம் தொடர்ந்தும் நீடிக்கப்படுவது தொடர்பில் அவர் கவலை வெளியிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment