அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீரமுனை பகுதியில் இனந்தெரியாத நபர்களின் அச்சுறுத்தல் நடவடிக்கை காரணமாக அப்பகுதி மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
கடந்த சில நாட்களாக சீருடையில், ஆயுதங்களுடன் வரும் குறித்த நபர்கள் பெண்கள் மற்றும் இளைஞர்களை அச்சுறுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
இரவு நேரங்களிலும், அதிகாலை பொழுதிலும் குழுவாக வரும் இவர்கள் அச்சுறுத்தல் விடுக்கும் வகையிலான செயற்பாடுகளை மேற்கொள்வதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக வீரமுனை பிரதேச மக்கள் அச்சம் கலந்த சூழ்நிலையில் வாழ்வதாகவும், பாதுகாப்பு தரப்பினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேவேளை, கடந்த காலங்களில் வீரமுனை பிரதேசத்தில் பல்வேறு இனப்படுகொலை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதுடன், பொதுமக்களும் கிராமத்தை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இவ்வாறான நிலையில், தற்போது இப்பகுதியில் வாழும் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் மத்தியில் சகவாழ்வு கட்டியெழுப்பப்பட்டுவரும் நிலையில், அவற்றினை சீர்தகுலைக்கும் வகையில் இவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment