July 14, 2016

சிவில் நடவடிக்கைகளில் இராணுவத்தினர் தலையிடமுடியாது ; வட மாகாண சபை தீர்மானம்!

வட மாகாணத்தில் இடம்பெறும் சிவில் நடவடிக்கைகளில் இராணுவம் உட்பட அரச படையினர் தலையிடக்கூடாது என வலியுறுத்தி வட மாகாண சபையில் தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.


முல்லைத்தீவு மாவட்ட மீனவர்களின் பிரச்சனைகள் தொடர்பில் ஆராய்வதற்கு மத்திய அரசினால் நியமிக்கப்பட்ட குழுவிற்கு முல்லைத்தீவு மாவட்ட முப்படைகளின் கட்டளைத் தளபதியையும், கடற்படை அதிகாரிகளையும் நீக்குமாறு கோரி வடமாகாண சபையில் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு அமையவே இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது.

வட மாகாண சபையின் 56 ஆவது அமர்வு கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையின் கட்டிடத்தொகுதியில் இடம்பெற்றது.

இதன்போது வடமாகாண சபையின் ஆளும் கட்சியான தமிழ் தேசியக் 4ட்டமைப்பின் முல்லைத்தீவு மாவட்ட உறுப்பினர் துரைராசா ரவிகரனால் முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடரும் மீனவர் பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கான குழுவிலிருந்து படை அதிகாரிகளை நீக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கும் பிரேரணையொன்று முன்வைக்கப்பட்டது.

முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழிலாளர்கள் தொடர்பில் கடந்த ஜீன் மாதம் 10 ஆம் திகதி மத்திய கடற்தொழில் அமைச்சில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்ட முல்லைத்தீவு மாவட்ட படைகளின் கட்டளைத் தளபதி, முல்லைத்தீவு கரை வலைப்பாடுகளின் உரிமையாளர்களாக சிங்களவர்களே இருந்தார்கள் எனவும் அவர்களிடம் கூலித்தொழிலாளர்களாகவே தமிழ் மீனவர்கள் தொழில் செய்தார்கள் எனவும் குறிப்பிட்டதாக ரவிகரன் குற்றம்சாட்டினார்.

இந்த பிரேரணையை வழிமொழிந்த வடமாகாண சபை உறுப்பினர் கந்தையா சர்வேஸ்வரன் முல்லைத்தீவு மாத்திரமன்றி, வட மாகாணத்தின் சிவில் நடவடிக்கைகளில் ஸ்ரீலங்கா இராணுவம் உட்பட அரச படையினரின் தலையீடு இருக்கக்கூடாது என்ற கோரிக்கை இணைக்கப்பட வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

முல்லைத்தீவு மாவட்ட உறுப்பினர் துரைராசா ரவிகரனினால் முன்வைக்கப்பட்ட இந்தப் பிரேரணைக்கு எதிர்கட்சித் தலைவர் எஸ்.தவராசாவும் தனது முழுமையான ஆதரவை தெரியப்படுத்தியதற்கு அமைய பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment