July 14, 2016

பிரித்தானியாவின் புதிய பிரதமராகப் பதவியேற்றார் தெரசா மே!

பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன் நேற்று முறைப்படி பதவி விலகியதையடுத்து, அந்த நாட்டின் புதிய பிரதமராக, தெரசா மே பதவியேற்றார்.


ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா விலகக் கூடாது என்ற நிலைப்பாட்டில் இருந்த டேவிட் கமரூனுக்கு, பிரித்தானிய மக்கள் கருத்துக்கணிப்பில் ஆதரவு அளிக்கவில்லை.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவதற்கு ஆதரவாக பிரித்தானிய மக்கள் பெரும்பான்மையாக வாக்களித்ததால், தாம் பதவி விலகப் போவதாக டேவிட் கமரூன் உடனடியாகவே அறிவித்திருந்தார்.

இந்தநிலையில், புதிய பிரதமராக தெரசா மே, தெரிவு செய்யப்பட்டதையடுத்து, டேவிட் கமரூன் நேற்று தமது பதவி விலகல் கடிதத்தை பிரித்தானிய மகாராணியிடம் கையளித்தார்.

அதையடுத்து, பிரித்தானிய மகாராணியை சந்தித்த தெரசா மே, புதிய பிரதமராகப் பதவியேற்றுக் கொண்டார். பிரித்தானியாவின் இரண்டாவது பெண் பிரதமர் தெரசா மே என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய பிரதமராகப் பதவியேற்ற பின்னர் தெரசா மே தனது புதிய அமைச்சரவையை அறிவித்துள்ளார்.

இதன்படி, பிரித்தானியாவின் புதிய வெளிவிவகாரச் செயலராக பொரிஸ் ஜோன்சன் நியமிக்கப்பட்டுள்ளார். லண்டன் மாநகர முதல்வராக இருந்த இவர், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேற வேண்டும் என்று கடுமையான பரப்புரைகளை மேற்கொண்டவராவார்.

அதேவேளை, புதிய அமைச்சரவையில் அனைத்துலக வர்த்தக அமைச்சராக, சிறிலங்கா அரசாங்கத்துடன் நீண்டகாலமாகத் தொடர்புகளை வைத்துள்ள லியம் பொக்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



No comments:

Post a Comment