வலி.வடக்கில் மக்களுடைய காணிகளை விடுவிக்காத இராணுவம் அந்த காணிகளில் கிரிக்கெட் விளையாடி வருகின்றது. இராணுவத்தினர் கிரிக்கெட் விளையாடுவதற்கு எமது காணியா வேண்டும்? எமக்கு சொந்த நிலமிருந்தும் நாங்கள் அகதி முகாம்களில் ஓலைக்குடிசையில் வாழ்க்கை நடத்த, இரா ணுவம் எமது காணிகளில் கிரிக்கெட் விளையாடி மகிழ்கின்றது. இதுவா நல்லாட்சி? எனவும் அந்த மக்கள் தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
அண்மையில் ஜனாதிபதியால் விடுவிக்கப்பட்ட காங்கேசன்துறை நடேஸ்வரா கல்லூரிக்கு அருகாமையில் உள்ள இடத்திலேயே இவ்வாறு இராணுவத்தினரும் பொலிஸாரும் கிரிக்கெட் விளையாடி வருகின்றனர். இந்த இடம் சுமார் ஒரு ஏக்கர் அளவு காணப்படும் நிலையில் இதனை மைதானமாக்கி கிரிக் கெட் விளையாடி வருகின்றனர்.
நடேஸ்வரா கல்லூரியை சூழ இராணுவ காவலரண்கள், இராணுவத்தின் சிற்றுண்டிச்சாலை என பலதரப்பட்ட இராணுவ செயல்பாடுகள் தற்போதும் இயங்கி வரும் நிலையில், பொலிஸ் நிலையம் என இராணுவ நடமாட்டத்திற்கு மத்தியில் கல்லூரி செயற்பாடுகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்த நிலையிலே இராணுவம் இந்த கிரிகெட் விளையாட்டையும் ஆரம்பித்துள்ளது.
இந்த விளையாட்டு மைதானம் அமைந்துள்ள இடம் ஏற்கெனவே நடேஸ்வரா கல்லூரியின் விளையாட்டு மைதானமாக காணப்படுகின்ற நிலையில், அதனை மேலும் மக்களுடைய காணிகளுக்குள் விஸ்தரித்து விளையாட்டு மைதானம் முழுவதினையும் தாமே பயன்படுத்தி வருகின்றனர். இதற்கு அருகில் இராணுவ சிற்றுண்டிசாலையும் ஒன்று இயங்குகின்றது. இதுவும் மக்களுடைய காணிகளுக்கு உள்ளேயே அமைந்து ள்ளது.
தற்போது வலி.வடக்கில் 5 ஆயிரத்து நூறு ஏக்கர் இராணுவ வசம் இருக்கும் நிலையில், அவற்றை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் முன்பு காணப்பட்டதனை விட மந்த கதியிலேயே செல்வதாகவும், நடேஸ்வரா கல்லூரிக்கு அருகாமையில் உள்ள அனைத்து இடங்களும் விடுவிக்கப்படுவதன் மூலமே மாணவர்கள் சுதந்திரமான கல்வியை கற்க முடியும் எனவும் வலி.வடக்கு மீள்குடியேற்ற தலைவர் குணபாலசிங்கம் வலம்புரியிடம் தெரிவித்தார்.
மேலும் வலிகாமம் வடக்கு வயாவிளான் பிரதேசம் மக்களின் மீள்குடியேற்றத்திற்காக விடுவிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்திருக்கின்ற போதிலும் இங்குள்ள ஒட்டகப்புலம் என்ற இடத்தில் படையினர் நிரந்தரமாக இராணுவ முகாம் ஒன்றை அமைத்து அது நிறைவுறும் கட்டத்தை தற்போது எட்டியுள்ளது. நூற்றி ஐந்து குடும்பங்களுக்கு சொந்தமான மேற்படி 169 ஏக்கர் காணியை படையினர் சுவீகரிக்கும் நோக்கில் நிரந்தரமாக முட்கம்பி வேலிகளை அமைத்துள்ளதுடன் பாரிய வாயிற் துண்களையும் நிறுவி வருகின்றனர்.
கடந்த 26 வருடங்களாக உயர்பாதுகாப்பு வலயத்துக்குள் இருந்த வசாவிளான், கடந்த 2015ஆம் ஆண்டு மார்ச் மாதம் பகுதியளவில் விடுவிக்கப்பட்டிருந்தது. எனினும் ஒட்கப் புலம் பகுதி முழுமையாக இராணுவத்தின் வசம் இருந்து வருகின்றது.
இங்கு நிலை கொண்டுள்ள குறித்த இரு இராணுவ முகாம்களும் வீதியின் இருபக்கத்திலும் காணப்படுகின்றன. வீதி மக்களின் பாவனைக்கு விடுக்கப்பட்டுள்ளது. வசாவிளான் பகுதியில் பொதுமக்களின் பாவனைக்கு விடுக்கப்பட்டிருந்தாலும் முழுமையாக விடுக்கப்படாமல் இராணுவமயமாக்கப்பட்டுள்ளது.
ஒட்டகப்புலத்தில் வீதிக்கு முன்புறமாக தற்காலிக வீடு ஒன்று அமைக்கப்பட்டு, தமது காணியை துப்புரவு செய்யும் நடவடிக்கையில் சில குடும்பங்கள் ஈடுபட்டு வருகின்றன. இந்த இடத்திக்கு மிக அருகாமையில் நிலைகொண்டுள்ள 511ஆவது படையணி மற்றும் 07ஆவது விஜயபாகு படையணிகள் வழமை போன்ற தனது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அதிகரித்த இராணுவ நடமாட்டம் காரணமாக இராணுவத்தோடு அங்கிருப்பது அச்சத்தை ஏற்படுத்துவதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறான நிலையில் ஒவ்வொரு நாளும் வலி.வடக்கில் புதிய புதிய செயற்பாடுகளில் இராணுவம் ஈடுபட்டு வருவதாகவும், இதன் மூலம் அங்கு மீள்குடியேறும் மக்கள் உள ரீதியாக பாதிப்படைய செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது
No comments:
Post a Comment