July 15, 2016

போதை சாக்லெட் விவகாரத்தில் எடுத்த நடவடிக்கை என்ன?: சென்னை கலெக்டருக்கு, மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்!

ஆர்.கே.நகர் சிறுவன் போதை சாக்லெட் சாப்பிட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட சம்பவத்திலும், போதை சாக்லெட் விவகாரத்திலும் எடுத்த நடவடிக்கை என்னென்ன? என்பது குறித்து சென்னை கலெக்டருக்கு, மனித உரிமை ஆணையம் ‘நோட்டீசு’ அனுப்பி உள்ளது.


தேசிய மனித உரிமைகள் ஆணையம் சார்பில் வெளியிடப்பட்டு உள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழகத்தில் சென்னையில் பல இடங்களிலும், விழுப்புரம் கந்தசாமி அவென்யூவில் உள்ள கிடங்கு ஒன்றில் இருந்தும் அதிக அளவில் போதைப்பொருட்கள் கலக்கப்பட்ட சாக்லெட்டுகள் கைப்பற்றியுள்ளதாக நாளிதழ்களில் செய்தி வெளியாகி உள்ளன. அதேபோல, கோவில்பட்டியில் உள்ள மயானம் ஒன்றில் அதிகமான போதை சாக்லெட்டுகள் கொட்டப்பட்டு உள்ள சம்பவமும் நடந்து உள்ளது.

இதையெல்லாம் மிஞ்சும் அளவுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு, சென்னை ஆர்.கே.நகரில் ஒரு கடையில் போதை சாக்லெட் வாங்கி சாப்பிட்ட பள்ளி சிறுவன் உடல் நலம் பாதித்து, ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருக்கிறான்.

எனவே இந்த சம்பவம் தொடர்பாக 4 வாரங்களில் உரிய விளக்கம் தருமாறு, சென்னை மாவட்ட கலெக்டருக்கு இந்த ஆணையம் விளக்கம் ‘நோட்டீசு’ அளிக்கிறது. இந்த சூழ்நிலையில் போதை சாக்லெட் விற்பனையை தடுக்க வேண்டியது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் விளக்கம் கேட்கப்படுகிறது.

பள்ளி சிறுவர்கள், இளைஞர்கள் உள்பட இன்றைய இளம் தலைமுறையினரின் வாழ்க்கை மற்றும் பாதுகாப்புக்கு போதை சாக்லெட்டுகள் கடும் சவாலாக அமையும் என்றும், உடல்நலத்தை பாதிக்கக்கூடிய இந்த சாக்லெட்டுகள் எளிதாக கிடைக்கிறது என்றும் அறியமுடிகிறது. அதற்கு கைப்பற்றப்பட்ட போதை சாக்லெட்டுகள் ஒரு உதாரணமாக அமைந்திருக்கிறது. எனவே இந்த விவகாரத்தில் இந்த ஆணையம் தீவிரமாகி உள்ளது.

No comments:

Post a Comment