July 29, 2016

ஓமந்தையில் பேய்கள் வாழ்கின்றதெனில் மாங்குளத்திற்கு வாருங்கள்!

பொருளாதார மத்திய நிலையத்தினை அமைப்பதற்கு ஓமந்தையில் பேய்கள் வாழ்கின்றன என்றால் அதனை மாங்குளத்தில் அமைத்தால் என்ன? என வட மாகாண முதலைமைச்சர் க.வி விக்கினேஸ்வரன் கேட்டுள்ளார்.


கடந்த சில தினங்களுக்கு முன்னர் வடமாகாண முதலமைச்சருக்கும், வவுனியா மாவட்ட விவசாய அமைப்புக்கள் சார்ந்த பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்திப்பொன்று நடைபெற்றிருந்தது.

இதன்போது வடமாகாணத்திற்கான பொருளாதார மத்திய நிலையம் ஓமந்தையில் அமைக்கப்பட வேண்டும். என்பதே தீர்மானம். அதனை சிலர் நிராகரிக்கின்றார்கள். ஆதலால் ஓமந்தையில் அமைக்கப்படாவிட்டால் மாங்குளத்தில் அது அமைக்கப்படும். என முதலமைச்சர் கூறியதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்நிலையில் மேற்படி செய்தி தொடர்பாக முதலமைச்சரிடம் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே மேற்கண்டவாறு கூறியிருக்கின்றார்.

இவ்விடயம் தொடர்பாக மேலும் அவர் பதிலளிக்கையில்,

கடந்த சில தினங்களுக்கு முன்னதாக வவுனியா மாவட்டத்தில் உள்ள விவசாய அமைப்புக்கள் சார்ந்த பிரதிநிதிகள் என்னை சந்தித்திருந்தார்கள். அவர்களுடன் பேசிக் கொண்டிருக்கும்போது, வடமாகாணத்திற்கான பொருளாதார மத்திய நிலையத்தை ஓமந்தையில் அமைக்க கூடாது. அங்கே பேய்கள் வாழ்கின்றன. எனவே அங்கே மக்கள் வரப்போவதில்லை என மத்திய அரசாங்கத்தில் உள்ள அமைச்சர் ஒருவர் பேசியிருக்கின்றார்.

மேலும் ஓமந்தைக்கு அருகில் அல்லது ஓமந்தைக்கு வடக்கே இருக்கும் மாங்குளத்தில் அமைக்கலாம் எனவும் அவர்கள் பக்கத்தில் இருந்து பேசப்பட்டுள்ளதாக அறியக்கிடைக்கின்றது.

இந்த விடயத்தை வைத்துக் கொண்டு என்னை சந்தித்த விவசாய அமைப்புக்கள் சார்ந்த பிரதிநிதிகளிடம் சில கேள்விகளை எழுப்பியிருந்தேன்.

அதாவது ஓமந்தையில் பேய்கள் வாழ்கின்றன. மக்கள் வரமாட்டார்கள் என்றால் அவர்களுடைய எண்ணத்தின் படி ஓமந்தைக்கு அருகில் அல்லது வடக்கே இருக்கும் மாங்குளத்தில் அமைத்தால் என்ன என வினவினேன்.

அதற்கு என்னை சந்திக்க வந்திருந்த விவசாய அமைப்புக்கள் சார்ந்த பிரதிநிதிகள் மாங்குளத்தில் அமைத்தால் கூட பரவாயில்லை. என கூறியிருக்கின்றார்கள். இதுவே நடைபெற்றது.

இதற்கு மேலதிகமாக எதுவும் எனக்கு தெரியாது. என்பதுடன் பொருளாதார மத்திய நிலையம் உறுதியாக எங்கே அமையும் என்பது இப்போதைக்கு எனக்கும் தெரியாது. உங்களுக்கும் தெரியாது என முதலமைச்சர் பதிலளித்திருக்கின்றார்.

இதேவேளை வடமாகாணத்திற்கான பொருளாதார மத்திய நிலையம் ஓமந்தையிலா? தாண்டிக்குளத்திலா? என்ற போராட்டம் நிறைவடையாத நிலையில் ஓமந்தையும் வேண்டாம், தாண்டிக்குளமும் வேண்டாம், மாங்குளத்தில் அமையுங்கள் என்ற கோரிக்கையினை முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள விவசாய அமைப்புக்கள் தொடர்ச்சியாக முன்வைத்துக் கொண்டிருக்கின்றன.

மேலும் அவர்கள் தமது கோரிக்கையினை முதலமைச்சருக்கு கொடுக்கவும் தயாராகி வருவதாக தெரியவருகின்றமையும் இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.

No comments:

Post a Comment