July 30, 2016

தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு விரைந்து தீர்வு காண இணக்கம்!

தமிழக மீனவர்கள் உள்ளிட்ட இந்திய மீனவர்கள் சர்வதேச கடலில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வைக்காணும் வகையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.


இது குறித்து இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ், உயர்மட்ட கலந்துரையாடல் ஒன்றை நேற்று நடத்தியுள்ளார்.

புதுடில்லியில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலின்போது தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் ஒடிசா ஆகிய பிராந்தியங்களின் 13 பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

அரச தரப்பில் இருந்து பிரதமர் அலுவலக அதிகாரிகள், கரையோர பாதுகாப்பு அதிகாரிகள், இந்திய விவசாயத்துறை, பாதுகாப்பு, வெளியுறவுத்துறை மற்றும் இந்திய கடற்படை அதிகாரிகளும் இந்த கலந்துரையாடலில் பங்கேற்றனர்.

ஏற்கனவே கடந்த பெப்ரவரி மாதம் 5ம் திகதியன்று இடம்பெற்ற இந்திய இலங்கை கூட்டு ஆணைக்குழுவின் அமர்வின்போது இந்தப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டமைக்கு அமையவே நேற்றைய கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் இந்திய மீனவர்கள் வாழ்வாதார பிரச்சினையாக இதனை கருத்திற்கொண்டு விரைவில் தீர்வு ஒன்றை காண கலந்துரையாடலில் பங்கேற்ற அனைத்து தரப்பினரும் இணங்கியதாக இந்திய வெளியுறவுத்துறை பேச்சாளர் விகாஸ் ஸ்வரப் தெரிவித்துள்ளார்.

இதற்காக செயன்முறை மிக்க மீன்பிடி முறைகளை பயன்படுத்துவது என்றும் இணக்கம் வெளியிடப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment