June 4, 2016

யாழில் காதலில் பாதிக்கப்படும் மாணவர்கள் – பெற்றோர்களே எச்சரிக்கை!

கடந்த காலங்களாக குடாநாட்டின் செய்திகள், நேரடியாக சிலவற்றைப் பார்க்கும்போது பாடசாலை மாணவர்கள் சிறு வகுப்பிலேயே காதல் என்ற பெயரில் பாதிக்கப்பட்டுவருவதை காணமுடிகிறது.


இதில் பெரும்பாலும் பெற்றார், ஆசிரியர்களாக அல்லது வைத்தியத் துறையைச் சேர்ந்தவர்களாகவே இருப்பது கவலை தருகிறது. இவர்கள் சமூகத்திற்காக சேவை செய்வது ஒருபுறம் இருக்க குடும்பத்தை சரியாக வழிநடத்தத் தவறும் பட்சத்தில் இவ்வாறு நடைபெறுவது வேதனைக்குரியது.

இதற்கு ஆசிரியர்களாக இருக்கும் பெற்றார்கள் பாடசாலைகளில் தாம் கற்பிக்கும் மாணவர்களை கண்டித்து வழிநடத்தும் விதங்களில் வீடுகளிலும் தமது பிள்ளைகளையும் கண்டித்து நடாத்துவதுதான் இதற்கான காரணங்களில் ஒன்றாக இருக்கலாம்.

இதைவிட ஏனைய சக ஆசிரியர்களுடன் சமூக சீர்கேட்டு பிரச்சனைகளை கதைத்து அதை தமது பிள்ளையும் செய்துவிடக்கூடாது என்பதற்காக அவர்களை சிறுவயதிலேயே கண்டித்து அந்த தவறுகளை நீங்களும் செய்யக்கூடாது என்று தண்டித்து அதையே அவர்களையும் செய்து பார்க்க வைத்துவிடுகிறார்கள். இதைவிட தாம் ஆசிரியர் என்பதுடன் தனது பிள்ளை ஏனைய கூலித்தொழில் போன்ற குறைந்த தொழிலை செய்யும் பெற்றோருடைய பிள்ளைகள் அதிக புள்ளி பெற்றால் தமக்கு மதிப்பிருக்காது என்பதற்காக தமது பிள்ளைகளைக் கண்டித்து அவர்களை வக்கிர புத்திக்கு மாற்றிவிடுகிறார்கள்.

எனவே அவர்கள் சிறுவயதிலேயே இன்னொரு அன்பைப்பெற நினைப்பது உளவியல். அதைத்தான் பல சினிமாக்களும் கூறமுற்படுகின்றன. ஆனாலும் பாடசாலை ஆசிரியர்கள் பொதுவாக 2.30 மணிக்கே வீடுகளிற்கு செல்லக்கூடியதாக இருந்தும் இவ்வாறான தவறுகள் நடைபெறுவது குறையவே இல்லை. அரச துறைகளில் கடமையாற்றுபவர்கள் பெரும்பாலும் 4.30 மணிக்கே வீடு சென்றாலும் அவர்களுடைய பிள்ளைகள் வழிதவறுவது சற்றுக்குறைவாகவே உள்ளது.

பொதுவாக இவ்வாறான பிரச்சனைகள் பெற்றார்கள் இருவரும் வேலைக்குச் செல்லும் குடும்பங்களிலேயே அதிகம் காணமுடிகிறது.


 வைத்தியர்களைப் பொறுத்தவரையில் இதற்கு எதிர்மாறாக அதிக நேரங்களை அரச, தனியார் வைத்தியசாலைகளிலே கழிக்கவேண்டிய நியதியால் குடும்ப ஒழுங்குகள் சீரழிந்து வருவதை காணமுடிகிறது. ஒருபுறம் பணம் வருவது மட்டுமல்ல மறுபுறம் குடும்பங்களுக்கு அவப்பெயரும் ஏற்படுகின்றது.

சில வீடுகளில் பிள்ளைகளை அறையில் படிக்கவிட்டு நடு வீட்டில் இருந்து தொலைக்காட்சியில் நாடகங்களை பார்ப்பதால் இதைவிட அதிகபடியான சீரழிவிற்கு காரணமாக அமைகிறது. அத்துடன் தற்போதைய தொழிநுட்ப வளர்ச்சியில் பாடசாலை செல்லும் அநேகமான மாணவர்களிடம் ஸ்மார்ட் போன்கள் பாவனையில் உள்ளன. இது ஒன்றே போதும் சிறுவயதில் பாதைமாறிச் செல்ல…

என்னுடைய இந்த கருத்திற்குக் காரணம் ”கடந்த சில நாட்களுக்கு முன்பு 7 ஆம் ஆண்டு பாடசாலை மாணவிக்கும், 9 ஆம் ஆண்டு மாணவனுக்கும் காதல்” என்ற நேரடி கதையை கேட்டது, பிரபல பாடசாலை மாணவிகள் தவறான படங்கள் பார்த்து பிடிபட்ட கதை கேட்டது, முகப்புத்தகத்தில் தாங்கள் கணக்கை ஆரம்பித்து சக மாணவிகளுடன் படமெடுத்து போட்ட கதைகள் இவ்வாறான செய்திகளிற்குப் பின்னர் நான் சிந்தித்தவை… இது யாரையும் புண்படுத்த போட்ட கருத்தல்ல… சமூகத்தில் எனது அவதானிப்பு…

இது ஒரு தனிநபரின் முகநூல் கருத்துப் பகிர்வாக இருப்பினும் பெற்றோர்கள் உங்கள் மீது மிகவும் எச்சரிக்கையாக நடந்து பிள்ளைகளை அன்பாக நல்வழிப்படுத்துதல் என்பது அவசியமே…..!

No comments:

Post a Comment