June 22, 2016

ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா நிலைத்திருக்க வாக்களியுங்கள்’ - தமிழர்களுக்கு சிபோன் மக்டொனா அறைகூவல்!

வரும் 23.06.2016 வியாழக்கிழமை பிரித்தானியாவில் நடைபெறும் பொதுவாக்கெடுப்பில் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா நிலைத்திருப்பதற்கு ஆதரவாக வாக்களிக்குமாறு தமிழர்களுக்கு தொழிற்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிபோன் மக்டொனா அறைகூவல் விடுத்துள்ளார்.

இது குறித்து 20.06.2016 திங்கட்கிழமை அவர் வெளியிட்டிருக்கும் ஒவ்வொரு தமிழர்களுக்குமான பிரத்தியேகமான கடிதம் வருமாறு:
'அன்பான நண்பரே,
ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா தொடர்ந்தும் நிலைத்திருப்பதற்கு ஆதரவாக வாக்களியுங்கள்.

பிரிந்து போவதா அல்லது நிலைத்து மேம்படுவதா என்பதை பிரித்தானியா தீர்மானிக்கும் நிகழ்வாக வரும் வியாழக்கிழமை நடைபெறும் பொதுவாக்கெடுப்பு அமையப் போகின்றது. எம் எல்லோரையும் போன்று தமிழ்ச் சமூகத்திற்கும் முக்கியத்துவம் வாய்ந்த வாக்கெடுப்பாக இது அமையப் போகின்றது.
தெற்கு இலண்டனில் மிகப்பெரும் சமூகமாக விளங்கும் தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா நிலைத்திருப்பது உங்களின் நலன்களுக்கு எவ்வளவு முக்கியமானது என்பதை நான் அறிவேன்.
இவற்றின் வெளிப்படையான அம்சங்கள் கடந்த ஒரு வாரத்திற்குள் தெளிவாகப் புலப்பட்டிருக்கும் எனக் கருதலாம். வாக்கெடுப்பு நாளில் நைஜல் பராஜ் அவர்களும், அவரது இடதுசாரி மரபுவாதக் கட்சி நண்பர்களும் வெற்றி பெற்றால் நாம் எல்லோரும் எமது அரசியல் குரலை இழந்து விடுவோம்: இவர்களின் பரப்புரைகளுக்கு உலகளாவிய ரீதியில் ஆதரவு வழங்குபவர்களாக விளங்குபவர்கள் ரஸ்ய அதிபர் விலாடிமிர் புற்றின், வெளிநாட்டவர்களுக்கு எதிரானவராகத் திகழும் அமெரிக்க அதிபர் வேட்பாளராகும் வாய்ப்பைக் கொண்டுள்ள டொனால்ட் ரிறம்ப் போன்றவர்கள் என்பது கசப்பானது.

இவற்றை விட இவ்வாக்கெடுப்பில் பிரித்தானியாவில் உள்ள ஒவ்வொரு தமிழர்களினதும் கருத்து பதிவு செய்யப்பட வேண்டியதற்கான சமூகசார் தேவைகளும் இருக்கின்றன. ஏனைய உலக அமைப்புக்கள் முகத்தைத் திருப்பிக் கொண்ட பொழுது சிறீலங்கா மீது தடைகளைக் கொண்டு வந்த முக்கிய அமைப்பாக ஐரோப்பிய ஒன்றியம் திகழ்ந்தது. அத்தோடு சிறீலங்கா சார்ந்த விடயங்களில் பிரித்தானியாவின் வழிகாட்டல்களையே ஏனைய ஐரோப்பிய நாடுகள் எதிர்பார்த்து நின்றன. எனவே ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவதற்கு ஆதரவாக நாம் வாக்களிப்போமாக இருந்தால் இந்தச் செல்வாக்கு நீங்கி விடும்.

ஏனைய ஐரோப்பிய நாடுகளில் இருந்து மக்கள் வந்து குடியேறுவதைத் தாம் எவ்வளவு தூரம் வெறுக்கின்றார்கள் என்பதை ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறுவதற்கு ஆதரவான பரப்புரைகளை முன்னெடுக்கும் பிரிவினர் அண்மைக் காலங்களில் தெளிவாக உணர்த்தியிருக்கின்றார்கள். தற்பொழுது ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா அங்கம் வகிப்பதால் நிலவும் நடமாட்டச் சுதந்திரத்தைப் பயன்படுத்திப் பிரித்தானியாவிற்கு வருகை தந்து இங்குள்ள பல்கலைக் கழகங்களிலும், கல்லூரிகளிலும் தமிழ் மாணவர்கள் கல்வி கற்கும் நிலை ஐரோப்பிய ஒன்றியத்;தை விட்டு பிரித்தானியா வெளியேறினால் இல்லாது போய்விடும். சகல விதமான குடிவரவுகளையும் எவ்வித வெட்கமும் இன்றி வெளியேற்றத்திற்கு ஆதரவான பிரிவினர் வெறுக்கும் நிலையில், ஐரோப்பிய குடிவரவாளர்களின் எண்ணிக்கை குறைவடைவதன் விளைவாக ஆசியக் குடிவரவாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.
இவை தவிர ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டுப் பிரித்தானியா வெளியேறுவதால் பொருளாதார ரீதியில் எதிர்மறையான பாதிப்புக்களும் ஏற்படும். இதனைப் பெரும்பாலான பொருளியல் நிபுணர்களும், வணிகர்களும் அறிந்திருப்பதால் அவர்கள் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா நிலைத்திருப்பதையே ஆதரிக்கின்றனர். ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரித்தானியா வெளியேறுவதால் ஏற்படப் போகும் பொருளாதாரச் சரிவு தமிழர்களின் தலைமையிலான வாணிபங்களைப் பாதித்து, ஏற்றுமதிகளுக்கான செலவீனத்தை அதிகரிக்கும் என்பதில் உண்மையான எந்த நிபுணர்களுக்கும் சந்தேகம் இருக்காது. புதிதாக அமுலுக்கு வரக்கூடிய ஆய (சுங்க) அறவீடுகள் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் உள்ள தமிழ் வணிகர்களைப் பாதிக்கும். பொருளாதார வீழ்ச்சியின் விளைவாக வரியிறுப்புக்கள் குறைவடைவதானது தேசிய சுகாதார சேவையையும் (மருத்துவமனைகள்), பாடசாலைகளையும் பாதிக்கும்.
அத்தோடு, ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறுவதற்கு வாக்களிப்பதானது பிரித்தானியாவை சிறுமைப்படுத்தி உலக அரங்கில் அதன் தகமைத்துவத்தைக் குறைக்கும் என்பதில் எவ்விதமான சந்தேகமும் வேண்டாம். இந்தியா, அமெரிக்கா, சீனா போன்ற அரசியல் ரீதியில் சக்திவாய்ந்த நாடுகள் நாம் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருப்பதையே விரும்புகின்றன. ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து நாம் வெளியேறும் பட்சத்தில் எமது நம்பகத்தன்மை பாதிப்புக்கு உள்ளாகி அதன் விளைவாக தனிமனித சுதந்திரங்களையும், மனித உரிமைகளையும் முன்னிலைப்படுத்துவதற்கான பிரித்தானியாவின் சக்தி இல்லாது போகும்.
வியாழக்கிழமை நடைபெறும் வாக்கெடுப்பில் ஒவ்வொரு தமிழர்களின் வாக்கும் பெறுமதி வாய்ந்தது என்பதை உணர்ந்து அன்று சில நிமிடங்களை ஒதுக்கி ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா நிலைத்திருப்பதற்கு ஆதரவாக நீங்கள் வாக்களிக்க வேண்டும்.
எமது எல்லோரின் எதிர்காலத்திற்கும் உங்கள் வாக்கு அத்தியாவசியமானதாகும்.
உங்கள் உண்மையுள்ள,
சிபோன் மக்டொனா,
மிச்சம் மற்றும் மோடன் தொகுதிகளுக்கான தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்.’

No comments:

Post a Comment