June 8, 2016

பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழரை விடுதலைக்கான கோட்டையை நோக்கிய வாகனப் பேரணியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி பங்கேற்பு!

ராஜிவ் வழக்கில் கால் நூற்றாண்டு காலமாக சிறையில் வாடி வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழரை விடுதலை செய்வதற்காக
வேலூரில் இருந்து சென்னை புனிதஜார்ஜ் கோட்டை நோக்கி ஜூன் 11-ந் தேதி இருசக்கர வாகனப் பேரணியை ஏழு தமிழர் விடுதலைக்கான கூட்டியக்கம் ஏற்பாடு செய்துள்ளது. இந்த வாகனப் பேரணியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியும் பங்கேற்கிறது.

7 தமிழரையும் விடுதலை செய்ய தமிழக அரசு முடிவெடுத்து மத்திய அரசிடம் கருத்து கோரியது. ஆனால் மத்திய அரசோ 7 தமிழர் விடுதலைக்கு எதிராக இருந்து வருகிறது.

இந்த நிலையில்தான் அரசியல் சாசனம் 161-வது பிரிவின் படி தமிழக அரசுக்கு உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி 7 தமிழரை விடுதலை செய்ய வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்த கோரிக்கையை நடைமுறைப்படுத்தும் வகையில் ஜூன் 11-ந் தேதியன்று ஏழு தமிழர் விடுதலைக்கான கூட்டியக்கம் சார்பில் இந்த மாபெரும் வாகனப்பேரணி நடைபெற உள்ளது.

கடந்த 25 ஆண்டுகாலமாக மனித உரிமைக்கான அறப்போரை முன்னெடுத்து நடத்தி வரும் அற்புதம் அம்மாள் அவர்கள் தலைமையிலான இந்த வாகனப் பேரணியில் தமிழர்கள் பெருந்திரளாக பங்கேற்று நீதிக்காக; 7 தமிழர் விடுதலைக்காக குரல் கொடுக்க வேண்டும் என்று அன்புடன் அழைக்கிறேன்.

இப்பேரணியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வேலூர், காஞ்சிபுரம் மற்றும் சென்னை மாவட்டங்களைச் சேர்ந்த அனைத்து நிலை நிர்வாகிகள், தொண்டர்கள் இரு சக்கர வாகனங்களில் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

பண்ருட்டி தி.வேல்முருகன்

தலைவர்

தமிழக வாழ்வுரிமைக் கட்சி

No comments:

Post a Comment