May 25, 2016

தொடரும் மனித உரிமை மீறல்களுக்கு பதில் என்ன ? பிரித்தானிய பிரதமர் வாயிலில் அணிதிரண்ட தமிழர்கள் !

நல்லாட்சி என்ற பெயரில் சிறிலங்கா அரசினால் மூடி மறைக்கப்படும், நீடிக்கும்
மனித உரிமை மீறல்களை அம்பலப்படுத்தும் நோக்கில் கவனயீர்ப்பு போராட்டமொன்று லண்டனில் இடம்பெற்றுள்ளது.

கடந்த ஞாயிறன்று (22-05-2016) பிரித்தானிய பிரதமரது வாயில் தளத்துக்கு முன்னால் இடம்பெற்றிருந்த இக்கவனயீர்ப்பு போராட்டத்தினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஒருங்கு செய்திருந்தது.

வெள்ளைவான் கடத்தல்கள், கைதுகள் என சிறிலங்காவில் நீடிக்கும் மனித உரிமை மீறல்களை அம்பலப்படுத்தி இடம்பெற்றிருந்த இக்கவனயீர்ப்பு போராட்டம், இதற்கான பதிலினை அனைத்துலக சமூகம் முன்வைக்க வேண்டுமெனக் கோரியிருந்தது.

பிரித்தானியா உட்பட பல்வேறு நாடுகள் சிறிலங்காவின் ஆட்சி மாற்றத்துக்கு நற்சான்றுதல் வழங்கியிருந்ததோடு, சிறிலங்கா தொடர்பிலான ஐ.நா மனித உரிமைச்சபைத் தீர்மானத்துக்கும் ஆதரவு வழங்கியிருந்தது.

இந்நிலையில், தமிழர் என்ற ஒரே காரணத்துக்காகவே தொடரும் மனித உரிமை மீறல்களை தடுப்பதிலும், நடந்தேறிய பாரிய மனித உரிமை மீறல்களுக்கான பொறுப்புக்கூறலில் இருந்து தவறும் சிறிலங்காவை பொறுப்புணர்த்துவதிலும் பிரித்தானியாவுக்கு கூடுதல் பங்கு உள்ளதாக இக்கவனயீர்ப்பு போராட்டம் முன்வைத்துள்ளது.

இதேவேளை சிறிலங்காவில் நிலவும் அசாதாரண நிலைமைகளை கவனத்தில் கொண்டு, பிரித்தானியாவில் இருந்து தமிழர் திருப்பி அனுப்பப்படுதல் நிறுத்தப்பட வேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

பெருந்திரளான மக்கள் கூடியிருந்த இக்கவனயீர்ப்பு போராட்டத்தின் நோக்கத்தினை உள்ளடக்கிய கோரிக்கை மனு, பிரித்தானிய பிரதமர் வாயில்தள அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடதக்கது.














No comments:

Post a Comment