May 25, 2016

அமைச்சுக்களை மீளப் பெற்றது ஏன்? வடமாகாண முதல்வர் விக்னேஸ்வரன் விளக்கம்!

வட மாகாண சுகாதார அமைச்சிடமிருந்து புனர்வாழ்வு மற்றும் மகளிர் விவகாரம் ஆகிய அமைச்சுகளை
மீளப் பெற்றுக்கொண்டமை குறித்து மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்கினேஸ்வரன் விளக்கமளித்துள்ளார்.

கடந்த மாதம் 26ம் திகதி வட மாகாண சபையின் அமைச்சரவைக் கூட்டம் இடம்பெற்றபோது சுகாதார அமைச்சிடம் வழங்கப்பட்டிருந்த புனர்வாழ்வு மற்றும் மகளிர் விவகாரம் ஆகிய அமைச்சுத் துறைகளை மீளப் பெற்றுக் கொள்வதாக முதலமைச்சர் கூறியிருந்தார்.

இந்நிலையிலே நேற்று முன்தினம் வட மாகாண ஆளுநர் முன்பாக முதலமைச்சர் இந்த அமைச்சுத் துறைகளைப் பொறுப்பேற்றிருந்தார். இப்பொறுப்பேற்கும் நிகழ்வையடுத்து முதலமைச்சர் கருத்து வெளியிடுகையில்,

குறித்த அமைச்சுத் துறைகளை எம்மால் நிர்வகிக்க முடியாத நிலையில் அதனை சுகாதார அமைச்சிடம் ஒப்படைத்திருந்தோம்.

எனினும் தற்போதுள்ள செயலாளர் மற்றும் அதிகாரிகள் இவ் அமைச்சுத்துறைகளில் நியமனம் பெற்றவர்களாக அதனை நான் மீளப்பெற்றுக் கொண்டேன்.

அத்துடன் முதலமைச்சர் நிதியம் அமைப்பதானது சாத்தியமாகக் கூடிய சூழ்நிலை உள்ள நிலையில் அதற்கு இத்துறைகள் முக்கியமாக தேவைப்படுவதாலும் காணி மற்றும் மீள்குடியேற்ற விடயத்தை நான் வைத்துக் கொண்டு புனர்வாழ்வை வேறு அமைச்சின் கீழ் ஒப்படைப்பது பொருத்தமற்றது.

இத்தகைய காரணங்களாலேயே நான் அமைச்சுத் துறைகளை மீளப்பெற்றுக் கொண்டேனே தவிர, வேறெந்த காரணங்களும் இல்லை.

அத்துடன் இவ் விடயம் தொடர்பில் ஊடகங்கள் சில வேறு காரணங்களை குறிப்பிடுகின்ற போதும் அவை எதுவும் உண்மையில்லை என்றார்.

வடமாகாண சபை தொடர்பாக விமர்சனங்களை முன்வைக்கவில்லை

நேற்று முன்தினம் ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே முதலமைச்சரிடம் கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வடமாகாண சபை தொடர்பாக நான் விமர்சனங்களை முன்வைக்கவில்லை எனத் தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் வடமாகாண ஆளுநர் வடமாகாண சபை தொடர்பாக கடுமையான விமர்சனங்களை முன்வைத்ததாக குற்றம் சாட்டி இது தொடர்பான கடுமையான விமர்சனத்தை தமிழ் அரசியல் கட்சிகளும் பாராளுமன்ற உறுப்பினர்களும் வெளிக்காட்டியிருந்தனர்.

இந்நிலையில் நேற்றுமுன்தினம் மேற்குறித்த அமைச்சரவை பொறுப்பேற்கும் நிகழ்வில் ஆளுநர் குறித்த ஊடகவியலாளர் சந்திப்பினுடைய ஒளிப்பட இறுவட்டை முதலமைச்சரிடம் ஒப்படைத்ததுடன் தாம் மாகாண சபைக்கும் மாகாண மக்களுக்கும் ஒத்துழைப்பு வழங்கவே முயற்சிப்பதாகவும் தெரிவித்தார் என்றார்.

No comments:

Post a Comment