May 24, 2016

கிளிநொச்சி அக்கராயன்குளத்தின் கீழான சிறுபோகம் முற்றாக அழிவடைந்துள்ள நிலையில், வயல் நிலங்கள் !

கிளிநொச்சி அக்கராயன்குளத்தின் கீழான சிறுபோகம் முற்றாக அழிவடைந்துள்ள நிலையில், வயல் நிலங்கள் மணல் நிலங்களாக மாறியுள்ளதாக அந்த மாவட்ட கமநல சேவைகள் திணைக்கள உதவி ஆணையாளர் இ. தயாரூபன் தெரிவித்தார்.

ஸ்ரீலங்காவில் தொடர்ச்சியாகப் பெய்துவரும் கடும் மழை காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தின் பெரிய நீர்ப்பாசன குளங்களில் ஒன்றான அக்கராயன் குளத்தின் கீழான சிறுபோக நெற்செய்கை முற்றுமுழுதாக அழிவடைந்துள்ளன.
2016 ஆம் ஆண்டுக்கான அக்கராயன் குளத்தின் கீழ் சிறுபோக நெற்செய்கை 2790 ஏக்கர் தீர்மானிக்கப்பட்டு, விதைப்பு மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில் கிளிநொச்சியில் பெய்து கடும் மழை காரணமாக, சிறுபோகச்செய்கை முற்றுமுழுதாக அழித்துள்ளன.
அக்கராயன் பிரதேசத்தில் உள்ள வயல் நிலங்கள் பெரும்பாலனவை மணல் நிலங்களாக காட்சியளிப்பதாகவும் அக்கராயன் கோணவில் வீதியிலுள்ள வயல் நிலங்கள் வீதி புனரமைப்புக்கு கொண்டுவரப்பட்ட கிறவல்களால் நிறைந்து காணப்படுவதாகவும் எமது ஐபிசி தமிழ் செய்தியாளர் தெரிவித்தார்.
நெற்செய்கையை பொறுத்தவரை சிறுபோக நெற்செய்கையே விவசாயிகளை நட்டத்தில் இருந்து காப்பாற்றி ஓரளவுக்கேனும் நம்பிக்கை அளித்து வருகின்றது.
இந்தநிலையில் தற்போது பெய்து கடும் கோடை மழையால் சிறுபோகமும் முற்றுமுழுதாக அழிவடைந்திருப்பது, விவசாயிகளை மிகப் பெரும் பாதிப்புக்கு உள்ளாக்கியுள்ளது.
விவசாயத்திற்காக பெற்ற வங்கி கடன்கள், தவணைக் கட்டண முறையில் பெற்ற உழவு இயந்திரம் மற்றும் அறுவடை இயந்திரங்களுக்கான கொடுப்பனவு என்பவற்றை எவ்வாறு செலுத்துவது என்ற கேள்விக்குறியுடன் விவசாயிகள் நிர்க்கதியான நிலையில் உள்ளனர்.
எனவே பாதிக்கப்பட்ட தமக்கு, நஷ்டஈட்டை பெற்றுக் கொள்வதற்கு, அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மேலும் வயல் நிலங்களில் காணப்படுகின்ற மணல் மற்றும் கிறவல்களை அகற்றவும் விவசாய, கமநல சேவைகள் திணைக்களங்கள் தங்களுக்கு உதவ வேண்டும் எனவும் விவசாய அமைப்புகள் கோரிக்கை விடுக்கின்றன.


No comments:

Post a Comment