உணர்ச்சி வசப்பட்ட நிலையிலோ, அவசரப் பட்டோ இந்தப் பகுதியில் ஒரு வார்த்தை கூட எழுதுவதில்லை நான். எதையும் உன்னிப்பாகக் கவனித்த பிறகே, உண்மையை முழுவதுமாக உள்வாங்கிக் கொண்ட பிறகே, எழுதுகிறேன்.
இது குற்றவாளிகளை அம்பலப்படுத்துவதுடன், அவர்களைப் புண்படுத்தவும் செய்யும் - என்பதை நான் மறுக்கவில்லை. அவர்களைப் புண்படுத்தக் கூட முடியாது என்றால், வேறு எதற்காக நான் எழுத வேண்டும்?
அடக்கி வாசி....
அடக்கி எழுது.... என்று அலைபேசியிலும் மின்னஞ்சலிலும் அறிவுறுத்துகிற நண்பர்களுக்காகத்தான் இதைச் சொல்கிறேன்.
அடக்கி எழுது.... என்று அலைபேசியிலும் மின்னஞ்சலிலும் அறிவுறுத்துகிற நண்பர்களுக்காகத்தான் இதைச் சொல்கிறேன்.
மனசாட்சி இருப்பவர்கள், தங்களது குற்றங்களையும் தவறுகளையும் உணர்கிற நிலையில், அது தொடர்பான உண்மைகள் மனத்தை உறுத்துகிற நிலையில், மனம் வருந்தித் திருந்துவார்கள் - என்கிற நம்பிக்கையுடன்தான் எழுதுகிறேன் நான். எனது இந்த எதிர்பார்ப்பில் என்ன தவறிருக்கிறது?
செய்த தவறுகளை உணர்கிறபோது புண்படுகிற ஒரு மனம் தானே பண்பட முடியும்....!
தமிழக மண்ணில் பிறந்திருந்தாலென்ன.... வன்னி மண்ணில் பிறந்திருந்தாலென்ன....
துரோகம் செய்பவர் எவராக இருந்தாலும் அவரது துரோகத்தைச் சுட்டிக் காட்ட வேண்டியிருக்கிறது. அதைத் தவிர்த்துவிட்டு, வார்த்தைப் பாசாங்கு செய்ய என்னால் முடியாது. துரோகி - என்று சொல்லாமல், அவர்களை வேறெப்படி அழைக்க வேண்டுமென்று அவர்களிடமே போய் அனுமதி கேட்டுக் கொண்டிருக்க நான் நிஷா பிஸ்வால் இல்லை.
கிறுக்கு நாயிடம் போய், 'கழுத்தில் சுருக்குப் போட்டுப் பிடிக்கட்டுமா, சுருக்குப் போடாமல் பிடிக்கட்டுமா' என்று கேட்டுக் கொண்டிருப்பதெல்லாம், சாம் அங்கிள் போன்ற சப்பாணிச் சாணக்கியர்களுக்கே சாத்தியம். நமக்கெதற்கு அது?
ஈழத்துக்கு ஆறாயிரம் மைல் அப்பாலிருந்து கல்லம் மேக்ரே என்கிற மானுடன் கொடுத்திருக்கும் ஆதாரங்கள் - ஈழத்தில் நடந்தது இனப்படுகொலைதான் - என்பதை அடித்துச் சொல்ல முடிகிற அளவுக்கு வலுவானவை.
ஒரு சாமானியனால் கூட இதை உணரமுடிகிற நிலையில், 'நடந்தது இனப்படுகொலை - என்று என்னால் கருத முடியவில்லை' என்று சொல்பவர்கள் யாராயிருந்தாலும், அவர்களை அம்பலப்படுத்தியாக வேண்டும். தங்களது நிஜமான எஜமானர்களுக்கு அவர்கள் விசுவாசமாயிருப்பது குறித்து, எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை.
அதே சமயம், தமிழர் தரப்பின் குரலாக, பாதிக்கப்பட்ட மக்கள் தரப்புக் குரலாக, அவர்களின் குரலை அடையாளப்படுத்துவதை ஏற்க முடியாது.
இந்த அடிப்படையில்தான், அயோக்கிய அறிவாளிகளை விமர்சிக்கிறேன்.
'சொந்தச் சகோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டும்
சிந்தை மறந்தாரடி'
என்று பாரதி சொல்வது இவர்களையன்றி வேறெவரை?
சிந்தை மறந்தாரடி'
என்று பாரதி சொல்வது இவர்களையன்றி வேறெவரை?
தமிழரின் தாய்மண்ணில் - கண்ணெதிரில் - நடந்த இனப்படுகொலையை அம்பலப்படுத்த அயோக்கிய அறிவாளிகள் எடுத்த நடவடிக்கை என்ன?
அதற்காகக் கிடைத்த வாய்ப்புகளை அவர்கள் எப்படிப் பயன்படுத்தினார்கள்? அதற்கான வாய்ப்புகள் எதையாவது அவர்களால் உருவாக்க முடிந்ததா?
இத்தகைய கேள்விகள் கேட்கப்படாமலேயே இருப்பதால்தான், அயோக்கிய அறிவாளிகள் தப்பிவிட முடிகிறது.
கொமன்வெல்த் மாநாட்டுக்காக கொழும்பு வந்த பிரித்தானிய பிரதமர் டேவிட் கேமரூன், தமிழரின் தாய்மண்ணுக்கு வருகை புரிந்ததை நம்மில் எவரும் மறந்துவிட முடியாது.
2009க்குப் பின், தமிழரின் வரலாற்றில் மிக முக்கியத் திருப்புமுனை கேமரூனின் வருகை! அவரது விஜயத்தின் மூலம், ஈழத்தில் இலங்கை நிகழ்த்திய வெறியாட்டங்களை, சர்வதேசத்தின் கவனத்துக்குக் கொண்டு செல்கிற வாய்ப்பு கிடைத்தது.
கமரூனால் கிடைத்த அந்த அரிய வாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்த, அறிவுப் பெட்டகங்களான சமந்தகர்கள் ஒரு துரும்பையாவது தூக்கி வைத்தார்களா?
பாதிக்கப்பட்ட மக்களைத் திரட்டியதிலும், அவர்களை கேமரூனின் முன் கொண்டுவந்து நிறுத்தியதிலும் சமந்தகர்களுக்கு பெயரளவுக்காவது தொடர்பிருந்ததா? மனசாட்சி இருந்தால், சமந்தகர்கள் இந்தக் கேள்விகளுக்கு பதில் சொல்லட்டும்!
டேவிட் கேமரூனுடனேயே வருவது வேறு...
அப்பாவித் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை அவரது கவனத்துக்குக் கொண்டுவருவது வேறு......
இந்த இரண்டில் சமந்தகர்கள் எதைச் செய்தார்கள் என்பதை உங்கள் நினைவுத்திறனுக்கும் முடிவுக்கும் விட்டுவிடுகிறேன்.
பாதிக்கப்பட்ட எங்கள் சகோதரிகள் பெருமளவில் திரண்டு நின்று, தங்களது வலியையும் வேதனையையும் கேமரூனுக்கு உணர்த்தியதைப் பார்த்து, ராஜபக்சவைக் காட்டிலும் அதிகக் கவலையில் ஆழ்ந்த அறிவாளிகள் யார் யார் என்பதைத் திரும்பிப்பார்க்கிற உரிமையையும் உங்களிடமே விட்டு விடுகிறேன்.
கமரூனின் வன்னி வருகையையடுத்து, தமிழர் தாயகத்தில் இடம்பெற்ற இன்னொரு குறிப்பிடத்தக்க சம்பவம் - தமிழினத்தின் நீதி தேவதை நவநீதம் பிள்ளையின் விஜயம். இலங்கையின் உருட்டல் மிரட்டலுக்கெல்லாம் அஞ்சாமல் வன்னிக்கு வந்தது அந்தக் கறுப்புப் புயல்.
பாதிக்கப்பட்ட எமது மக்களின் அவலக்குரலை நவ்விப் பிள்ளை நேரில் கேட்டுவிடக் கூடாது - என்று இலங்கை அரசு தலைகீழாக நின்றது.
செய்த குற்றங்கள் அம்பலமாகிவிடுமோ - என்று அஞ்சி நடுங்கியது. அந்தத் தாயை எங்கள் சகோதரிகள் நேரில் சந்தித்துவிடாதபடி தடுக்க அனைத்துவகையான கெடுபிடிகளையும் மேற்கொண்டது.
அவ்வளவு கெடுபிடிகளையும் மீறி, எங்கள் சகோதரிகள் அவரைச் சந்தித்ததிலும், தங்களது துயரைப் பகிர்ந்துகொண்டதிலும் சமந்தகர்களுக்குக் கொஞ்சமேனும் பங்கிருந்ததா?
இந்தத் துரோகத்தைத் தாங்கிக் கொள்ள முடியாமல் எழுதினால், அடக்கி வாசி - என்று 'அன்பாக' மிரட்டுகிற என் நண்பர்களைப் பார்த்து உண்மையிலேயே பரிதாபப்படுகிறேன். பருப்பை வேண்டுமானால் பழைய செய்தித்தாளில் நீங்கள் பொட்டலம் கட்டித்தரலாம்... நெருப்பை எப்படி பொட்டலம் கட்டுவீர்கள்!
தமிழர் தாயகத்தில் 'மாபெரும்' வெற்றி பெறுகிற ஓர் அமைப்பின் தலைகள் களத்தில் நேரடியாக இறங்கியிருந்தால், படையினரின் அத்துமீறல்களால் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரிடமும் தனித்தனியே வாக்குமூலம் வாங்கி ஐ.நா.மனித உரிமைகள் ஆணையத்தில் சமர்ப்பித்திருக்க முடியுமா, முடியாதா?
'செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமையானும் கெடும்' என்கிற வள்ளுவத்தை நிரூபிக்கவே பிறந்தவர்களைப் போல் நடந்துகொண்டவர்கள் யார்?
பாதிக்கப்பட்ட மக்களின் அவலக்குரல் சர்வதேசத்தின் செவிகளில் ஒலிக்க வழிசெய்திருக்க வேண்டியவர்கள் - அதைச் செய்யாமல் - 'நடந்தது இனப்படுகொலை இல்லை' என்கிற பொய்யை உலகின் மூலை முடுக்கெல்லாம் பறந்து பறந்து விற்பனை செய்துகொண்டிருந்தார்களே... அதற்கு என்ன காரணம்?
இப்போது, ஐ.நா.மனித உரிமைகள் ஆணையத்தின் அறிக்கை பற்றிப் பேச வேண்டிய நேரத்தில், 'இலங்கையை இலங்கையே விசாரித்துக் கொள்ள முடியாது' என்கிற ஹுசெய்னின் தெளிவான வாதத்தை மக்களிடையே கொண்டுபோய்ச் சேர்க்க வேண்டிய நேரத்தில்,
அதைப் பேசாமல் - 'எங்கள் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தியது ஏன் என்பது கேள்விக்குறி' என்று உளறத் தொடங்கியிருக்கிறார்களே.... இதன் பின்னணி என்ன? யார் தூண்டுதலில் தொடங்கியிருக்கிறது இந்த நாடகம்?
இதைத்தான் கேட்கிறேன் நான்...
அடக்கி வாசி - என்கிறார்கள் நண்பர்கள்.
அடக்கி வாசி - என்கிறார்கள் நண்பர்கள்.
எம் இனத்தின் ஒரே பெருமிதமான எம் விடுதலைப் போர் வீரர்களின் மூச்சுக் காற்று ஒன்றுக்கு மட்டும் தான் எங்களை அடக்குகிற சக்தி இருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டால், நண்பர்கள் இப்படியெல்லாம் பேச மாட்டார்கள்.
2009க்குப் பிறகும், வெவ்வேறு வடிவங்களில் இனப்படுகொலை தொடர்வதை, சர்வதேச பத்திரிகையாளர்கள் அவ்வப்போது எடுத்துச் சொல்கிறார்கள்.
தாயகத்திலிருக்கும் தலக்கட்டுகளின் செவிகளில் மட்டும் அது ஏறவேயில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கேட்பதை விட, குற்றவாளிகளைக் காப்பாற்றுவது முக்கியம் என்று நினைத்தார்களோ என்னவோ... அறிதுயிலில் ஆழ்ந்திருந்தார்கள் அவர்கள்.
அப்படியொரு அநீதி தொடர்பான தீர்ப்புதான், யாழ்ப்பாண நீதிமன்றத்தால் இந்த வாரம் வழங்கப் பட்டிருக்கிறது. 2009க்குப் பின் நடந்த அந்தக் கொடுமையான சம்பவத்தை முதலில் விவரித்தாக வேண்டும்.
அந்தச் சம்பவம் நடந்தது விசுவமடுவில்!
பாதிக்கப்பட்டவர்கள், 2 தமிழ்ச் சகோதரிகள். ஒருவர், 2 குழந்தைகளின் தாய். வயது, 27. இன்னொருவர், 5 குழந்தைகளின் தாய். வயது, 36. இருவருமே இனப்படுகொலை நடந்த சமயத்தில் தங்கள் உறவுகளைப் பறிகொடுத்தவர்கள்.
2009 இடைப்பகுதியில், இடைத்தங்கல் முகாம் என்கிற முள்வேலி முகாம்களுக்கு அனுப்பப்பட்டவர்கள்.
2010 ஜூன் மாதம், மெனிக் பார்ம் என்கிற முள்வேலி முகாமிலிருந்து வெளியே வந்த அந்த இரண்டு சகோதரிகளும், தங்களது சொந்த ஊரான விசுவமடு போய்ச் சேர்ந்தார்கள்.
அங்கே அவர்களது சொந்த வீடுகள் சீரழிந்து கிடந்தன. பகல் நேரத்தில் அவற்றைச் சுத்தப்படுத்திச் சீரமைக்கும் வேலையில் அவர்கள் ஈடுபட்டிருந்ததை இராணுவச் சிப்பாய்கள் கவனித்தனர்.
அன்று இரவே, அவர்களது வீட்டுக்குள் இராணுவத்தைச் சேர்ந்த 4 பேர், அத்துமீறி நுழைந்தனர். அந்த அப்பாவிப் பெண்களை, கொடுமையான பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கிய பிறகுதான் அந்த மிருகங்கள் முகாமுக்குத் திரும்பின.
தங்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமை குறித்து புகார் கொடுக்க, அறிவும் தெளிவும் மிக்க அந்த மாதர்குல மாணிக்கங்கள் முடிவெடுத்ததுதான், இப்போது வந்துள்ள தீர்ப்புக்கு அடிப்படை.
அவர்களது புகாரை ஏற்க காவல்துறை மறுத்தது. வட கிழக்கில் இருப்பது, எந்த அதிகாரமும் இல்லாமல் மரப்பாச்சி பொம்மை மாதிரி இருக்கிற அதிகாரங்களற்ற ஒரு காவல்துறை தானே! இராணுவத்தினர் மீது புகார் கொடுக்க வேண்டுமென்றால், இராணுவ அதிகாரிகளிடம் தான் கொடுக்க வேண்டும் - என்று சொல்லிவிட்டது காவல்துறை.
நீதி பெற்றே தீர்வது - என்கிற ஓர்மத்துடன் இருந்த அந்தச் சகோதரிகள் இருவரும் இராணுவ முகாமுக்குச் சென்றனர். விஷயத்தைத் தெரிவித்தனர்.
இராணுவ அதிகாரிகள், அனைத்து வகையிலும் அவர்களை மிரட்டினர். ஒரு பெருந்தொகையைப் பெற்றுக்கொள்ளும்படியும், அதன்பின் இதுகுறித்து வெளியே பேச வேண்டாமென்றும் வற்புறுத்தினர்.
அந்தத் தொகையைப் பெற மறுத்த சகோதரிகள் இருவரும், தங்களது புகாரைப் பதிவு செய்தாக வேண்டும் என்று வலியுறுத்தினர். இவ்வளவுக்கும் பிறகுதான், காவல்துறை அவர்களது புகாரைப் பதிவு செய்தது.
2010 ஜூன் 14ம் தேதி, குற்றவாளிகளைக் கண்டறிய நடத்தப்பட்ட அடையாள அணிவகுப்பில், தங்களைச் சீரழித்த நான்கு மிருகங்களையும் விசுவமடு சகோதரிகள் அடையாளம் காட்டினர்.
சிறையில் அடைக்கப்பட்ட அந்த மிருகங்கள், 2010 நவம்பரில் பிணையில் வெளியே வந்தன. அவர்களில் ஒருவன் தலைமறைவாகிவிட, மற்ற மூவர் மீது வழக்கு நடந்தது.
அந்த வழக்கில்தான், குற்றவாளிகள் மூவருக்கும் 30 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை மற்றும் அபராதம் விதித்து யாழ்ப்பாணம் நீதித்துறை நடுவர் இளஞ்செழியன் தீர்ப்பு வழங்கியிருக்கிறார்.
இளஞ்செழியனின் தீர்ப்பு வெளியானவுடனேயே, அதற்கு எதிராக தென்னிலங்கையின் சிங்கள இனவாதிகள் கிளர்ந்து எழுந்திருக்கிறார்கள். இளஞ்செழியன் தமிழர் என்பதாலேயே இப்படியொரு தீர்ப்பு வந்திருக்கிறது என்றும், இந்தத் தீர்ப்பு ஒருதலை பட்சமானது என்றும் வசை பாடத் தொடங்கி விட்டார்கள் அவர்கள்.
'போர்க்கதாநாயகர்களைக் காப்பாற்ற வேண்டும்' என்கிற மகிந்தவின் குரல், இவர்கள் வாயிலாக ஓங்கி ஒலிக்கிறது. என்ன செய்வது.... காட்டு மிருகங்களைக் காட்டிலும் கேவலமான பாலியல் வன்முறைகளில் ஈடுபட்டவர்களைத்தான், 'போர்க் கதாநாயகர்கள்' என்கிறது சிங்களச் சமூகம்!
விசுவமடு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சகோதரிகள் இருவரது மன உறுதி தான் இன்றைக்கு அவர்கள் நீதி பெறக் காரணமாக இருந்திருக்கிறது.
அஷ்ட திக்கு கஜங்கள் போன்று அந்தச் சகோதரிகளுக்கு உற்றதுணையாக உடனிருந்தவர்கள் 8 பெண்கள் அமைப்புகளை உள்ளடக்கிய WAN (Womens Action Network) என்கிற பேரமைப்பு. இந்த விஷயத்திலும், கூட்டமைப்புக்குப் பங்கில்லை என்பதே பரிதாபகரமான உண்மை.
(விசுவமடு சம்பவத்துக்கு நீதி கிடைத்ததைப் போன்றே, ஏனைய பாலியல் பலாத்காரப் புகார்களிலும் நீதி பெற்றாக வேண்டும் என்று முழு மூச்சுடன் வேலை செய்யும் WAN அமைப்புச் சகோதரிகள் ஒவ்வொருவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி!)
தமிழ்ச் சகோதரிகளின் மனோதிடத்தைச் சிதைக்க வேண்டும் என்கிற வக்கிர புத்தியுடன், 2009க்கு முன்பும் 2009க்குப் பின்பும், தொடர்ந்து மிருகங்களாகவே செயல்பட்டு வருகிற சிங்கள இராணுவப் பொறுக்கிகளைத்தான் 'கதாநாயகர்கள்' என்கிறது மகிந்த மிருகம்.
'அவர்களைக் காப்பாற்றுவதுதான் அரசின் முதல் கடமையாக இருக்க வேண்டும்' என்று போதிக்கிறது அது. 'எனது அரசு ஒருபோதும் படையினருக்குத் துரோகம் செய்யாது' என்று அவசர அவசரமாக, மகிந்த மிருகத்தை வழிமொழிகிறது ரணில் மிருகம்.
இதைப் பார்த்த பிறகும் கூட, 'தமிழ் மக்களுக்கு ஒருபோதும் துரோகம் செய்யமாட்டோம்' என்று அறிவிக்க சமந்தகர்கள் முன்வரவில்லை.
இலங்கை ஒன்றாகவே தான் இருக்க வேண்டுமென்பதற்காக தங்களின் சுய மரியாதையை வேண்டுமானால் அவர்கள் விட்டுக் கொடுக்கலாம். அதற்காக எம் சகோதரிகளின் சுய மரியாதையை விட்டுக் கொடுக்க அவர்கள் யார்?
தடுமாற்றத்திலேயே இருக்கிற சமந்தகர்களைப் பார்த்து நம்பிக்கையிழப்பு ஏற்படுகிற தருணத்திலெல்லாம், நவநீதம் பிள்ளை என்கிற நீதி தேவதையின் வார்த்தைகள் தான் ஒரு வரத்தைப் போல நம்பிக்கையளிக்கிறது நமக்கு......
"இந்தக் கொடும் குற்றங்களுக்கு யாராலும் எந்த அரசாலும் மன்னிப்பு கொடுக்க முடியாது"....
'நான் சட்டம் படித்தவன்' என்று உலகெங்கும் போய்த் தம்பட்டமடிக்கிற மேதாவிகள், பிள்ளையின் வார்த்தைகளைக் கேட்ட பிறகாவது அடக்கி வாசிக்கட்டும்!
புகழேந்தி தங்கராஜ்
No comments:
Post a Comment