October 9, 2015

கொடிய சிறப்பு முகாம் சிறையில் பட்டினி போராட்டம் நடத்திய 8 பேரும் கைது !

மூன்று தொடக்கம் ஒன்பது வருடங்கள் வரை எதுவித சரியான காரணங்களுமின்றி தமிழகத்தின் சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்கள் ஒன்பது பேர் தங்களை குடும்பங்களுடன்
வாழ்வதற்கான அனுமதி கோரி கடந்த 01.10.2015  அன்று தொடக்கம் பட்டினி போராட்டம் நடத்தி வந்தனர் .

த.மகேஷ்வரன், க.மகேஸ்வரன், பா.சிவேநேஸ்வரன், க.கிருஷ்ணமூர்த்தி, தா.உதயதாஸ், நா.பகீதரன், செ.யுகப்பிரியன், க.ராஜேந்திரன், சுபாஷ் (எ) விஜயகுமார் ஆகியோரே பட்டினி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.இதில் சுபாஷ் மற்றும் பகீதரன் ஆகிய இருவருக்கும்  உடல்நிலை பாதிக்கப்பட்டமையினால் இரண்டு நாட்களுக்கு முன்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். சுபாஷ் தொடர்ந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்க பகீதரன் வைத்தியசாலையில் இருந்து சிறப்பு முகாம் வந்து தொடர்ந்து பட்டினி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.

08.10.2015  நேற்றைய தினம், வைத்தியசாலையிலுள்ள சுபாஷ் தவிர்ந்த ஏனைய எட்டு  ஈழத்தமிழர்களும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் தற்கொலைக்கு முயற்சி செய்தார்கள் என்ற பொய்யான வழக்கினை பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் அனைவரும் சிறைக்கு சென்றாலும் சிறையிலும் பட்டினி போராட்டம் தொடர்வதாக எமது சிறப்பு செய்தியாளருக்கு தெரிவித்துள்ளனர்.

பிந்திய செய்தி: கைது செய்யப்பட்ட அனைவரும் திருச்சி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி முன் ஆஜர் படுத்தப்பட்டனர். அவர்கள் அனைவரையும் நீதிமன்ற காவலில் வைக்க மறுத்து விட்ட நீதிபதி அவர்கள் அனைவருக்கும் சிகிச்சையளிக்கும் படி உத்தரவிட்டுள்ளார்.

நீதிபதியின் உத்தரவிற்கு அமைய திருச்சி அரச பொது மருத்துவ மனையில் அனைவரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.மருத்துவமனையிலும் அவர்களின் பட்டினி போராட்டம் தொடர்வதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment