September 26, 2015

முள்ளிக்குளத்தில் தமிழ்ப் பாடசாலையை இயக்கும் கடற்படை - மக்கள் அச்சம் !

மன்னார் மாவட்டம் முள்ளிக்குளம் பிரதேசத்தில் மக்கள் மீளக்குடியேற அனுமதிக்கப்படாத நிலையில் கடற்படையினா் அந்த பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றை தமது அதிகாரத்தின் கீழ் இயங்க வைத்துள்ளதாக மக்கள் தொிவிக்கின்றனா்.

வடமாகாண கல்வி அமைச்சு, கொழும்பில் உள்ள பிரததான கல்வி அமைச்சு ஆகியவற்றின் அனுமதி இல்லாமலும் அந்த அதிகாாிகளின் கண்காணிப்புகள் யோசனைகள் எதுவுமின்றியும் இந்த பாடசாலை இயக்கப்பட்டு வருவதாக மக்கள் கூறுகின்றனா்.
பிரதேச மக்கள் இடம்பெயா்ந்து வாழும் கிராமங்களுக்கு செல்லும் படையினா் அங்கு மாணவா்களை தமது இராணுவ வாகனத்தில் ஏற்றி வந்து பாடசாலையில் கல்வி கற்ற அனுமதிப்பதாகவும் பாடசாலைக்கு தேவையான ஆசிரியா்களின் நியமனங்களையும் இராணுவமே வழங்கியதாகவும் மக்கள் கூறுகின்றனா். அத்துடன் மாணவா்கள், ஆசிாியா்கள் அச்சமடைவதாகவும் மக்கள் கவலை வெளியிட்டுள்ளனா்.
மன்னார் நகாில் இருந்து 60 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள தமிழ் மக்களுடைய பூர்வீக கிரமமான முள்ளக்குளத்தில் கடந்த 2007ஆம்ஆண்டு முதல் கடற்படையினா் முகாம் அமைத்துள்ளனா்.
முசலிப்பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட இந்த கிராமத்தில் 212 குடும்பங்கள் வாழ்ந்து வந்தன. கடற்தொழில் மற்றும் விவசாய செய்கைகளில் இங்கு வாழந்த மக்கள் ஈடுபட்டு வந்தனா்.
தரம் 5 வரையான பாடசாலை ஒன்று மாத்திரமே இந்த பிரதேசத்தில் காணப்பட்டது. யுத்தம் நடைபெற்றபோது 2007 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 07 ஆம் திகதி படையினரின் ஆக்கிரமிப்புக்கு உட்படுத்தப்பட்டு மக்கள் தமது சொந்த நிலங்கள். வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டனா்.
அத்துடன் ஒரு சில இளைஞா்கள் காணமல்போயுமுள்ளனா். காணாமல்போன இளைஞா்கள் பற்றிய விபரங்களும் இதுவரை தொியவில்லை என உறவினா்கள் கூறுகின்றனா்.
வெளியேற்றப்பட்ட மக்கள் எங்கு செல்வது என்று தெரியாத நிலையில் முருங்கன் கிறிஸ்து அரசர் ஆலயம் மற்றும் டொன்பொஸ்கோ ஆண்கள் விடுதியில் தற்காலிகமாக ஒரு மாதகாலம் தங்கயிருந்தனா்.
உணவு மற்றும் அவர்களது அடிப்படை தேவைகளையும் நானாட்டான் பிரதேச சபை மற்றம் அரச சார்பற்ற நிறுவனங்கள் அப்போது வழங்கி வந்தன.
ஆனாலும் ஒரு சில மாதங்களின் பின்னா் முருங்கனில் இருந்து மன்னார், தலைமன்னார், தாழ்வுபாடு, மற்றும் வாழ்க்கைப்பெற்றான் கண்டல் போன்ற கிராமங்களில் உள்ள தமது உறவினர்களின் வீடுகளிற்கு மக்கள் சென்று வாழ்ந்தனா்.
5 வருடங்கள் சொல்லனாத் துயரங்கள் மத்தியில் வாழ்ந்த முள்ளிக்குள மக்கள் அரச சார்பற்ற நிறுவனங்கள், நானாட்டான் பிரதேச சபை போன்றவற்றின் உதவிகள் கிடைத்தபோதிலும் தங்கள் காணிகள், வீடுகள், தொழில், மற்றும் மாணவர்களின் கல்வி நடவடிக்கை தொடா்பாக கவலையுடன் வாழ்ந்து வந்தனா்.
2012 ஆம் ஆண்டு ஜீன் மாதம் 15 ஆம் திகதி முள்ளிக்குள மக்கள் தமது பூர்வீக இடங்களுக்கு செல்லவதாக சுயமாக முடிவெடுத்து தமது சொந்த வீடுகளுக்குச் சென்றனா். ஆனால் மீண்டும் இராணுவத்தால் விரட்டியடிக்கப்படு செய்வதறியாது மீண்டும் அகதி வாழ்க்கையை வாழ நிர்ப்பந்திக்கப்பட்டனர்.
பின்னர் மறுச்சுக்கட்டி, மலம்காடு. ஆகிய இடங்களில் இம்மக்கள் தற்காலிகமாக குடியமர்த்தப்பட்டனர். குடியமர்த்தப்பட்ட மக்களுக்கு அரச சார்பற்ற நிறுவனங்களும், தேசிய மீனவர் ஒத்துழைப்பு சங்கமும் உதவிகளை வழங்கி வந்தன.
இவ்வாறான சூழ்நிலையில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளா் கோட்டாபய ராஜபக்சவுக்கும், மன்னார் ஆயா் இராயப் ஜோசப் ஆண்டகை ஆகியோருக்கிடையில் 2012 ஆம் ஆண்டு கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இந்த உரையாடலில் ஆலயத்திலிருந்து 750 மீற்றர் தூரத்தில் வாழமுடியம் என தீா்மானிக்கப்பட்டது.
ஆனாலும் படை முகாம் அமைந்துள்ள 1500 மீற்றர், 2 கிலோ மீட்டர் என்ற துாரத்தில் மக்கள் வாழமுடியும் என பின்னா் நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. எனினும் அந்த நிபந்தனைகளும் பொய்த்துவிட்ட நிலையில் இன்றுவரை மக்கள் மலக்காடு, மற்றும் மறுச்சிக்கட்டி ஆகிய பிரதேசத்தில் நிா்க்கதியான நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.
தற்காலிக வீடுகளை அமைப்பதற்காக வடமாகாண மீள்குடியேற்ற மற்றும் போக்குவரத்து அமைச்சர் பா. டெனீஸ்வரன் 50 ஆயிரம் ரூபாவை வழங்கினாா். ஆனால் 82 குடும்பங்களுக்கு மாத்திரமே அந்த நிதி வழங்கப்பட்டது.
அங்கு வாழ்ந்த மக்கள் தமது அன்றாட தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்காக குறிப்பிட்ட எல்லைக்குள் சிறிய அளவிலான கடற்தொழிலை மேற்கொண்ட வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது முள்ளிக்குளம் பிரதேசத்தில் தரம் 5 வரையான பாடசாலையை கடற்படையினா் இயக்குவதுடன் அங்கு கற்கும் மாணவா்கள், கற்பிக்கும் ஆசிாியா்களுக்கு பெயா் குறிப்பிட்டு அனுமதிப்பத்திரம் வழங்கி அவா்களை தமது வாகனத்தில் தினமும் அழைத்துச் செல்வதாகவும் மக்கள் கூறுகின்றனா்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் வடக்கு கிழக்கு மாகாணத்தில் சிவில் நிா்வாக நடவடிக்கைகளில் இராணுவம் தலையிடுகள் இருப்பதாகவும் இராணுவ நிா்வாகம் காணப்படுவதாகவும் முறைப்பாடுகள் செய்யப்பட்டு வந்தன.
ஆனால் ஜனவாி 8 ஆம் திகதி ஆட்சி மாற்றத்தின் பின்னா் அவ்வாறான நிலைமை இருக்காது என அப்போது எதிா்க்கட்சித் தலைவராக பதவி வகித்த ஜனாதிபதி தோ்தல் காலத்தின்போது ரணில் விக்கிரமசிங்க தமிழ்த்தேசிய கூட்டமைப்பிடம் உறுதியளித்திருந்தாா்.
ஆனால் ஜனாதிபதி மைத்திபால சிறிசேன தலைமையிலான நல்லாட்சி அரசாங்கம் இதுவரை எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. தற்போது முள்ளிக்குளம் பிரதேசத்தில் கடற்படையினா் தமது அதிகார மைத்திற்குள் பாடசாலையை மட்டும் இயங்க வைப்பதுடன் சிவில் நிா்வாக செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனா்.
ஜெனீவா மனித உாிமை பேரவையின் ஆணையாளாின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள சா்வதேச விசாரணை பொறிமுறையை நிராகாித்து உள்ளக விசாரணைதான் நடைபெறும் என பிரதமா் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் கூறியுள்ள நிலையில் முள்ளிக்குளம் பிரதேசத்தில் கடற்படை தமது அதிகாரத்தை தமிழ் மக்கள் மீது செலுத்தியுள்ளது.
இந்த நிலையில் உள்ளக விசாரணையை எவ்வாறு நம்புவது என்ற கேள்விகளும் முள்ளிக்குளம் போன்று வேறு தமிழ் பிரதேசங்களிலும் படையினா் இவ்வாறு தமது அதிகாரங்களை திணிக்கமாட்டாா்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம் எனவும் மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனா்.

No comments:

Post a Comment