September 26, 2015

தமிழரின் தீர்வில் தடுமாறும் நியூயோர்க்கும் ஜெனிவாவும்-முகில்!

உலக நாடுகளில் ஒடுக்கப்படும் ஒரு இனத்தின் அடையாளங்கள் அல்லது அவ் இனத்தின் அடிமைபடுத்தப்பட்டதன் ஆதாரங்களை உலகின் உயரிய சபையாம் மனித உரிமைகள் விடயத்தின் ஆர்வம் காட்டும் உலக ஸ்தாபனம் ஒன்றியத்திடம் கையளிப்பது சர்வதேச சட்டங்களின் நடைமுறை.
அந்தவகையில் ஐ.நா. சபையின் தலைமைக் காரியாலயம் நியூயோர்க்கில் அமைந்துள்ளது.
ஐ.நாவின் மனித உரிமைக்கான செயற்பாட்டு மையமும் ஐ.நா. உரிமையின் ஆணையாளரும் அவரால் அதிகாரமளிக்கப்பட்ட திணைக்களங்களும் ஜெனிவாவில் உள்ளது.
ஐநாவின் பொதுச் செயலாளர் நியூயோர்க்கை தளமாகக் கொண்டே தனது கருமங்களை ஆற்றிக்கொள்கின்றது.
இப்படியாக பொதுவான நியதியின் அடிப்படையில் ஐ.நா. மனித உரிமை செயற்பாடுகளுக்கான அதிகாரங்கள் குவிந்தும் மறைந்தும் உள்ளது.
இந்த இடத்தில்தான் இலங்கையில் இடம்பெற்ற, இன்னமும் இடம்பெற்றுவருகின்ற திடமிடப்பட்ட இன அழிப்பு தோற்றுவிட்டதா என்கின்ற ஒரு ஐயப்பாடு பலரிடமும் பரவலாக உள்ளது.
காரணம் 140000க்கும் மேற்பட்ட மக்களை மணித்தியால இடைவெளியில் கொன்று குவித்த அரச இயந்திரத்தை கேள்விக்கு உட்படுத்தும் திராணி மனித உரிமைகள் பேசும் அதியுயர் மையங்கள் யாரிடமும் இல்லை.
இங்குதான் தமிழினத்தின் வேலைத்திட்டம் என்ன என்கின்ற வினாவும் ஐயமும் எழுகின்றது. 
காரணம் விடுதலைப் புலிகளது எழுச்சி இருந்துவந்த காலப்பகுதிக்கும் 2009இன் யுத்தத்திற்கு பின்னிட்ட காலப்பகுதிக்கும் இடையே எழுந்துள்ள ஒற்றுமை வேற்றுமைகளை சற்று ஆழமாக சிந்திக்க வேண்டியுள்ளது.
2009க்கு முற்பட்ட காலப்பகுதியில் தமிழர் தரப்பின் அங்கீகாரமாக விடுதலைப் புலிகள் உலகை வலம் வந்தமை யாவரும் அறிந்ததே. 2009க்கு பின்னிட்ட இன்றுவரையிலான நாடுகளில் விடுதலைப் புலிகள் வகித்த அந்த பங்கினை அல்லது அந்த இடத்தினை இன்றுவரை யாராலும் நிரப்பியதாக தெரியவில்லை.
கெரில்லா போராட்டமாக ஆரம்பித்த விடுதலைப் புலிகள் அமைப்பாலே இராஜதந்திர நகர்வுகளை வெற்றிகொள்ள முடிந்ததாயின் ஏன் இன்று வியாக்கியானும் கூறும் தமிழர்களால் சர்வதேச இராஜதந்திரங்களை வெல்ல முடியவில்லை.
ஒருவேளை இக்கருத்துக்கூட விதண்டாவாதமாக அமையலாம். காரணம் இன்று சர்வதேசத்தில் எவ்வளவோ சாதித்துவிட்டோம். இவர்கள் கூறுவது போல் நாம் எதனைச் சாதிக்கவில்லை என்னும் மனப்பாங்கு ஒரு சிலரிடம் எழலாம்.
இங்குதான் ஜெனிவாவும் நியூயோர்க்கும் முட்டி மோதுகிறது. ஜெனிவாவில் ஆர்ப்பாட்டங்கள் நியாயமானது போராட்டங்கள் பெறுமதியானது.
நியூயோர்க்கை எந்தளவில் தமிழ் சமூகம் கையாண்டு இருக்கின்றது என்றால் அது நேர் நிகராக மைனஸ் என்றே கூறலாம். இதற்கும் சிலர் விமர்சனத்தை கூற முற்படலாம்.
எங்களது இராஜதந்திரமும் இரகசியமானது. அதுவும் பெறுமதியானது என. இவர்கள் கூறுவது எல்லாம் தகுமா என சிந்திக்கலாம் அதுவல்ல இன்றைய வினா.
தமிழர் தரப்பினுடைய வேலைத்திட்டங்கள் முழுமையடையாமல் செயற்பாட்டுத் தன்மை குன்றியதாக உள்ளமையை சுட்டிக்காட்டலாம்.
உலக நியதியின் அடிப்படையில் ஒரு அரசே நியூயோர்க்கையும் ஜெனிவாவையும் பயன்படுத்த முடியும். அதனையும் மீறி ஒரு இனம் அல்லது இனக்குழுமம் இந்த இரு அலைக்குள்ளும் நுழைவதனால் புத்தியும் சமயோசிதமும் மிகமிக முக்கியமானது.
இதனைச் செய்வதற்கு தமிழர்களிடம் இன்று யாருளர்.
நியூயோர்க்கில் ஜெனிவாவின் கூட்டத்தொடருக்கு ஆதரவான கூட்டத்தொடர் நடைபெற்றுவரும் சூழ்நிலையில் பாப்பரசர் உள்ளடங்கலான உலகின் முன்னணி தலைவர்கள் நியூயோர்க்கில் முகாமிட்டுள்ளனர்.
இவர்களுள் எத்தனைபேருக்கு இலங்கை என்றதொரு நாடு உள்ளதென தெரிந்தாலும் அங்கு தமிழர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டது, இழைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது என்ற உண்மை தெரியும் எனக் கேட்டால் மெளனமே நிலவும்.
இருப்பினும் ஒரு சிலர் கூறலாம் இலங்கையில் யுத்தம் நடந்ததாம் என. இன்னும் சிலரோ தற்போது அமைதி நிலையே காணக்கூடியதாக இருக்கின்றது என, ஆனால் சிலரோ அமைதியாகவே இருப்பர்.
இழைக்கப்பட்ட அநீதி பற்றி நியூயோர்க்கில் யாரும் கதைக்க முற்படுவதுமில்லை. சிந்திப்பதுமில்லை. காரணம் அதற்கேற்றார்போல அழுத்தங்களை பிரயோகிக்க யாருமில்லை.
ஜெனிவாவில் ஓரளவு வேலைத்திட்டங்கள் இருந்தாலும் நியூயோர்க்கில் தமிழர் தரப்பின் வேலைத்திட்டம் என்ன என்பதை ஒவ்வொருவரும் அவரவர் மனதுக்குள் கேட்டாலே அதன் ஆழமான அர்த்தத்தை புரிந்துகொள்ள முடியும்.
இந்த இடத்தில்தான் தமிழர் தரப்பு இன்றுவரை தெளிவின்றி தடுமாறுகிறது. தமிழரின் இன அழிப்புக்கான தீர்வு நியூயோர்க்கிலா ஜெனிவாவிலா என....
இன்னுமா தயக்கம் விரைந்து சென்று ஒற்றுமையுடன் உலகத் தமிழர் நியூயோர்க்கிலும் ஜெனிவாவிலும் ஒரே நேரத்தில் பெறுமதியானவர்களின் மூலம் வேலைத்திட்டத்தை தயார்ப்படுத்துங்கள்.
வினாக்கள் எம்மிடமே. சிந்திய குருதியும் விதைக்கப்பட்ட மாவீர விதைகளும் சிதைக்கப்பட்ட எம்மினமும் வினா தொடுப்பதற்கு முன்னர் தமிழா நீ விரைவாயா தமிழரின் தீர்வை நோக்கி நியூயோர்க்குக்கும் ஜெனிவாவுக்கும்........!
எழுத்தாக்கம்
முகில்

No comments:

Post a Comment