மனித உரிமை பேரவையில் தெரிவித்த குற்றச் சாட்டுக்கள் தொடர்பாக இலங்கையில் நீதியான விசாரணை, உள்ளகப் பொறிமுறையின் கீழ் இடம் பெறும் என மக்களுக்கோ, தமக்கோ நம்பிக்கை இல்லை என முன்னாள் நாடாளு மன்ற உறுப்பினரும், கிழக்கு மாகாண உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஜ.நா மனித உரிமைப் பேரவையின் தீ்ர்மானத்தின் பின்னர் கூட நாட்டு மக்கள் நம்பிக்கை கொள்ளக்கூடியதாக இல்லை என தெரிவித்த அவர், தமிழர் பிரச்சினை தொடர்பாக மஹிந்த அரசாங்கத்திற்கும் இன்றைய மைத்திரி அரசாங்கத்திற்கும் இடையில் எந்த விதமான வித்தியாசமும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்கள் விடயத்தில் இரு தரப்பினர்களின் குறிக்கோள்களும் ஒன்றாகக் காணப்படுவதாக தெரிவித்த அவர், மஹிந்த நேரடியாக முரண்படுவார், மைத்திரியும், ரணிலும் இணக்கப்பாடு போன்று தோற்றம் காட்டி முரண்படுவார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும் மஹிந்தவின் குற்றச் செயலுக்காகவே நாட்டு மக்கள் ஜனவரி 8 ஆம் திகதியும், ஓகஸ்ட் 17 ஆம் திகதிகளில் தமது வாக்குகள் மூலம் தண்டணை வழங்கியதாக குறிப்பிட்ட அவர்,
மக்கள் வழங்கிய தண்டனையை உறுதிப்படுத்தி சட்டரீதியான தண்டனையை வழங்க வேண்டிய ஆட்சியாளர்கள் இன்று மக்கள் தீர்ப்பிற்கு முரணாக இவர்களை பாதுகாக்கின்றார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை இலங்கை அரசு இறுதிக்கட்ட யுத்தத்தில் குற்றம் இழைத்ததற்கு சாட்சியங்கள் உண்டு எனவும், இது தொடர்பில் சர்வதேச விசாரணையோ அல்லது கலப்பு விசாரணையோ நடைபெறுமாக இருந்தால் இறுதிக்கட்ட யுத்தத்தில் கட்டளை இட்டவர்கள் தொடக்கம் யுத்தத்தில் ஈடுபட்டவர்கள் மற்றும் யுத்தத்தின் பின்னர் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டவர்களும் குற்றவாளிகள் என நிரூபிக்கக்கூடிய நிலை இன்று காணப்படுவதாக அவர் மேலும் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment