September 30, 2015

கல்முனை நகரில் ‘அரச ஒசுசல’ ஒன்றினை நிறுவுவதற்கு நடவடிக்கை !

பிரதேச மக்களின் நன்மை கருதி கல்முனை நகரில் ‘அரச ஒசுசல’ ஒன்றினை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரி சாய்ந்தமருது சுபீட்சம் சமூக நற்பணி மன்றம் சுகாதார பிரதியமைச்சர் பைசால் காசிம் அவர்களுக்கு அனுப்பி வைத்துள்ள மகஜரில் வேண்டுகோள் விடுத்துள்ளது.

அமைப்பின் தலைவர் எம்.ஐ.எம். அன்சார்   மற்றும் செயலாளர் ஏ.ஆர்.அஷ்பாக் அஹமட் ஆகியோர் கையொப்பமிட்டு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
தங்களுக்கு பல சேவைகளை செய்யக்கூடிய சுகாதாரத்துறை அமைச்சே வழங்கப்பட்டுள்ளது. பல தசாப்தங்களாக எமது கரையோரப் பிரதேசத்தில் ‘அரச ஒசுசல’ ஒன்று இல்லாதது பெரும் குறையாகவே உள்ளது. எமது கரையோரப் பிரதேசத்தில் வாழும் மக்கள் பல்வேறுபட்ட நோய்களுக்கு உட்பட்டவர்களாக காணப்படுவதுடன் அவர்களுக்கு தேவையான மருந்துப் பொருட்களை பெருமளவில் தனியார் பாமசிகளிலேயே கொள்வளவு செய்கின்றனர். இதற்கு பெருமளவு பணமும் தேவைப்படுகின்றது. இதனால் நடுத்தர, ஏழை வர்க்கத்தினர் பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர். ஆகவேதான் மக்கள் நலன்;;;; கருதி ‘அரச ஒசுசல’ ஒன்றினை நிறுவ வேண்டிய கட்டாயத்தேவை உருவாகியுள்ளது.
‘அரச ஒசுசல’ ஒன்றை ஆரம்பிப்பதற்கு பொருத்தமான இடம் கல்முனை நகரமாகும். காரணம், அம்பாரை மாவட்டத்தில் அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, ஒலுவில், நிந்தவூர், சம்மாந்துரை, காரைதீவு, சாய்ந்தமருது, கல்முனைக்குடி, பாண்டிருப்பு, மருதமுனை, நட்பிட்டிமுனை, மனற்சேனை, மத்திய முகாம் அதே போல் மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள நீலாவணை, கல்லாறு, களுவாஞ்சிக்குடி ஆகிய பிரதேசங்களும் கல்முனை நகரினை அன்மி;த்த பிரதேசங்களாக இருப்பதனாலாகும். அரச ஒசுசல’ ஒன்றை நிறுவும் பட்சத்தில் இப்பிரதேச மக்கள் நிச்சயமாக உச்ச பயனைப் பெறுவார்கள்.
கடந்தகால ஆட்சியில் தாங்கள் அரசின் பங்காளிகளாக இருந்தபோதிலும் கூட எதுவிதமான சேவைகளையும் மக்களுக்கு செய்யமுடியாத நிலமை இருந்தது. என்பது உணமைதான். ஆனால் தற்போது அந்நிலமை மாறி நல்லாட்சி ஏற்பட்டுள்ளதுடன் அதிகாரமும் உங்களிடம் குவிந்துள்ளது. இந்த “நல்லாட்சி யுகத்தில்” மக்களுக்கு சேவைகளை செய்ய முடியாதுவிடின் ஒருபோதும் சேவை செய்ய முடியாது. சேவைகளினூடாக நீங்கள் மக்களின் மனங்களை கவர வேண்டும். “பேச்சு பல்லக்கு தம்பி கால் நடை” என மக்கள் விமர்சனம் செய்வதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தக் கூடாது என்ற விடயத்தையும் தங்களின் கவனத்திற்கு தெரியப்படுத்துகின்றோம்.ஆகவே மக்களின் நன்மை கருதி கல்முனை நகரில் ‘அரச ஒசுசல’ ஒன்றினை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றதுடன் சுகாதார பிரதி அமைச்சராகவும் நியமிக்கப்பட்டதையிட்டு உளப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம். இம்முறை அம்பாரை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் களமிறக்கப்பட்ட மூவரும் வெற்றி பெறுவதற்கு மக்கள் வழங்கிய ஆணையானது மறைந்த மு.கா ஸ்தாபகத் தலைவருக்கு கொடுத்த கௌரவமாகும். இக்கௌரவத்தை தொடர்ந்து பாதுகாப்பது அனைத்து மு.கா பாராளுமன்ற உறுப்பினர்களினதும் தார்மீக கடமையாகும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், இதன் பிரதிகள் விளையாட்டுத்துறை பிரதியமைச்சர் சட்டத்திரணி எச்எம்.எம். ஹரீஸ், கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட், கல்முனை மாநகர முதல்வர் சட்டமுதுமானி நிஸாம் காரியப்பர் உட்பட மு.கா. வின் செயலாளர் நாயகம் எம்.ரீ. ஹஸன் அலி ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
-எஸ்.அஷ்ரப்கான்.

No comments:

Post a Comment