September 30, 2015

அம்பாறை மாவட்ட வேலையற்ற தமிழ் பட்டதாரிகள்-ஆர்ப்பாட்டம்‏!(படங்கள் இணைப்பு)

கிழக்கு மாகாண அம்பாறை மாவட்ட வேலையற்ற தமிழ் பட்டதாரிகள் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட உண்ணாவிரதப் போராட்டம் நேற்று (29) 12.00 மணிக்கு கிழக்கு மாகாணசபைக் கட்டிடத் தொகுதிக்கு முன்பாக
நடைபெற்றது. இவ் ஆர்ப்பாட்டத்தில் அம்பாறை மாவட்ட தமிழ் பட்டதாரிகள் சங்க உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
தமக்கு நியாயம் கிடைக்கும் வரை இப்போராட்டத்தை கைவிடப்போவதில்லை எனத் தெரிவித்த இவர்கள், கிழக்கு மாகாண சபையினால் பட்டதாரிகளுக்கு வழங்கப்படும் நியமனங்கள் மாவட்ட ரீதியில் வழங்கப்படுகின்ற காரணத்தினால் அம்பாறை மாவட்ட தமிழ் பட்டதாரிகள் புறக்கணிக்கப்படுவதாகவும், கடந்த 2013ம் ஆண்டு நடைபெற்ற அபிவிருத்தி உத்தியோகத்தருக்கான பரீட்சயில் அதிகூடிய புள்ளிககள் பெற்ற தமிழ் பட்டதாரிகள் முற்றுமுழுதாக புறக்கணிக்கப்பட்டதனையும், கடந்த 2011ம் ஆண்டிலிருந்து 2014 ஆண்டு வரையிலான காலப்பகுதியில் பட்டம்பெற்ற பட்டதாரிகளுக்கு இதுவரை காலமும் எந்த விதமான நியமனங்களும் வழங்கப்படவில்லை என்பதனையும் கண்டித்தே  மேற்படி இவ் ஆர்ப்பாட்டத்தில் இவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த காலங்களில் நடாத்தப்பட்ட இரண்டு போராட்டங்களுக்கும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், இதுவிடயமாக கிழக்கு மாகாண முதலமைச்சரை நாங்கள் சந்திக்க வரும்போதெல்லாம் நாங்கள் வருவது தெரிந்து அவர் அலுவலகத்தில் இல்லாமல் போகின்றார்.இது ஒரு திட்டமிடப்பட்ட சதியாகும். எல்லா பட்டதாரிகளுக்கும் இருக்கும் உரிமைபோன்று எங்களுக்கும் இந்த ஜனநாயக நாட்டில் உரிமை இருக்கின்றது. எல்லோருக்கும் வழங்குவதுபோல் எமக்கும் விகிதாசாரப்படி நியமனம் வழங்கப்பட வேண்டும். இவ்வாறு நியமனம் வழங்கப்படாதது ஜனநாயகத்திற்கு முரணான செயலாகும்.
எனவேதான் இதனை கண்டித்து எங்களுக்கான தீர்வுகள் கிடைக்கப்பெறும் வரை இன்று முதல் உண்ணா விரதப் போராட்டத்தினை தொடர்ந்தும் நடத்தப்போவதாக குறித்த பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் தெரிவித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஓய்வூதிய வயதிலா வேலை, பட்டதாரிகள் அனைவருக்கும் பாரபட்சமின்றி வேலை வேண்டும், தமிழ் பட்டதாரிகளை புறக்கணிக்காதீர், அம்பாரை மாவட்ட தமிழ் பட்டதாரிகளை புறக்கணிக்காதே, அம்பாரை மாவட்ட பட்டதாரிகள் என்ன கிள்ளுக் கீரையா ?, தேவை தேவை நியமனம் தேவை,கல்வியியற் கல்லுாரி மாணவர்களுக்கு நியமனம் பட்டதாரிகளுக்கு இல்லையா ?, என்ற பல சுலோகங்களை ஏந்திய வண்ணம் கோசமிட்டவர்களாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் அம்பாரை மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 200 இற்கும் அதிகமான பட்டதாரிகள் கலந்துகொண்டுள்ளனர்.(எஸ்.அஷ்ரப்கான்)

 

No comments:

Post a Comment