September 19, 2015

உடனடியாக சர்வதேச விசாரணை ஆரம்பிக்க வேண்டும்!மட்டு.மறை மாவட்ட ஆயர்!(படங்கள் இணைப்பு)

சர்வதேச விசாரணையினை தொடர்ந்தும் இழுத்தடிக்காமல் தொடர்ந்தும் குழுக்களை அமைத்து காலத்தினை நேரத்தினை போக்காமல் உடனடியாக இந்த விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டும் என மட்டக்களப்பு,அம்பாறை மறை மாவட்டங்களின் ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை வலியுறுத்தியுள்ளார்.
இன்று மட்டக்களப்பு சார்ள்ஸ் மண்டபத்தில் நடைபெற்ற 49வது உலக தொடர்பாடல் தின நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
49வது உலக தொடலைத் தொடர்புகள் தினம் இன்று உலகளாவிய ரீதியில் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது.
இதனை முன்னிட்டு மட்டக்களப்பு மறை மாவட்ட சமூக தொடர்பு நிலையம் நடாத்திய நிகழ்வு இன்று காலை மட்டக்களப்பு சார்ள்ஸ் மண்டபத்தில் நடைபெற்றது.
குடும்பமும் தொடர்பாடலும் என்னும் தலைப்பில் இந்த ஆண்டு நடாத்தப்படும் இந்த உலக தொலைத்தொடர்பு தின நிகழ்வினை சமூக தொடர்பு நிலையத்தின் இயக்குனர் பி.ரமேஷ் கிறிஸ்டி தலைமையேற்று நடாத்தினார்.
இந்த நிகழ்வில் மட்டக்களப்பு,அம்பாறை மறை மாவட்டங்களின் ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன், மட்டக்களப்பு மறை மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களின் பங்குத்தந்தையினர் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வின்போது மறைக்கல்வி மற்றும் நாடகம்,கலை,இலக்கியம் ஆகியவற்றின் வளர்ச்சிக்கு அர்ப்பணிப்புமிக்க சேவையாற்றிய அருட்தந்தை தேவதாசன் மற்றும் கல்வி மற்றும் கலை,கூத்து ஆகியவற்றுக்கு அரும்பணியாற்றிய முத்த கலைஞர் தோமாஸ் சிங்கராஜா ஆகியோர் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.
அத்துடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் வெளியான குறும்படங்களுக்கிடையில் நடாத்தப்பட்ட போட்டியில் இந்த ஆண்டுக்கான சிறந்த குறும்படமாக மனிதம் தெரிவு செய்யப்பட்டு அதற்கான விருது வழங்கப்பட்டது.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
சர்வதேச விசாரணை என்பது எமக்கு மிகவும் அவசியமானது. கடந்த 30வருட யுத்தத்தின்போதும் யுத்தத்தின் இறுதிக்கட்டத்திலும் நடைபெற்ற கொடுமைகள் வன்முறைகள் தொடர்பில் விசாரணைகள் நடாத்தப்பட வேண்டும்.
கடந்த காலத்தில் இந்த நாட்டில் நடாத்தப்பட்ட உள்ளக விசாரணைகள்,ஆணைக்குழுக்கள் எந்தவித நீதியையும் பெற்றுத்தரவில்லை.அதனால்தான் எங்கள் குரல் சர்வதேசத்திற்கு கேட்கவேண்டும்.
ஜெனிவாக்கு கேட்கவேண்டும் என்பதற்காக இந்த சர்தேச விசாரணையினை கேட்டுக்கொண்டோம். இதற்கான கோரிக்கையினை அனைவரும் ஒன்றுபட்டு தெரிவித்தோம்.
சர்வதேச விசாரணை இந்த நாட்டுக்கு தேவை. அதனை ஜெனிவா அங்கீகரித்துள்ளது.செயலாளர் நாயகம் இது தொடர்பில் ஆற்றிய உரை எங்களை கவர்ந்தது.
இரண்டு தரப்பினரும் குற்றம் புரிந்துள்ளனர்.இதற்கு சர்வதேச மட்டத்தில் விசாரணைகள் நடைபெறவேண்டும் என்பதை அவர் புரிந்துகொண்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட மக்கள் வாழ்வுபெறவேண்டும்.எத்தனையோ தாய்மார்கள் கண்ணீர்வடித்துக்கொண்டுள்ளனர்.அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும்.
எத்தனையோ இளைஞர்கள் இன்னும் சிறைகளிலேயே பல ஆண்டுகளாக அடைத்துவைக்கப்பட்டுள்ளார்கள்.அவர்கள் விடுதலைசெய்யப்பட வேண்டும். இவ்வாறான பல காரணங்களினால்தான் சர்வதேச விசாரணை வேண்டும் என்ற கோரிக்கையினை நாங்கள் வலியுறுத்தி கூறிவருகின்றோம்.
இதனை தொடர்ந்தும் இழுத்தடிக்காமல் தொடர்ந்தும் குழுக்களை அமைத்து காலத்தினை நேரத்தினை போக்காமல் உடனடியாக இந்த விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டும் என இங்கு வலியுறுத்தி கூறவிரும்புகின்றேன்.
இதனையே அனைத்து மக்களும் விரும்புகின்றனர். இதுவே ஜேசு கிறிஸ்து கொண்டுவந்த செய்தியாகும்.உண்மை, அன்பு, நீதி. நிலைநாட்டப்பட வேண்டும்.
பாதிக்கப்பட்டவர்கள், பாதிக்கப்படாதவர்கள் என்று பார்க்காமல் அனைவரையும் இணைத்ததாக இந்த விசாரணை செய்யப்பட வேண்டும்.அனைவருக்கும் நீதிகிடைக்க வேண்டும் என்றார்.









No comments:

Post a Comment