இலங்கையின் இரண்டு பிரதான அரசியல் கட்சிகள் இணைந்து தேசிய அரசாங்கம் அமைத்திருப்பது தற்காலத்திற்கு அவசியம் என்றும், இது நாட்டிற்கு நன்மை பயக்கும் என்றும் இலங்கை நாடாளுமன்றத்தின் புதிய எதிர்க்கட்சித் தலைவர் இரா சம்பந்தன் தெரிவித்திருக்கிறார்.
இலங்கை நாடாளுமன்ற எதிர்க்கட்சித்தலைவராக நியமிக்கப்பட்ட பிறகு முதல்முறையாக நாடாளுமன்றத்தில் உரையாற்றிய சம்பந்தன், இலங்கை அரசை ஆதரிப்பதற்கு நியாயமான காரணங்கள் இருக்கும் அனைத்து விவகாரங்களிலும் தாம் அரசாங்கத்தை ஆதரிப்போம் என்று சம்பந்தர் தெரிவித்தார்.
அதேசமயம், எதிர்க்கட்சிகள் அனைத்துக்கும் தாம் முழுமையான ஆதரவை அளிக்கப்போவதாகவும், எதிர்க்கட்சிகளுடன் நெருக்கமாக ஒன்றிணைந்து இயங்கப்போவதாகவும், செயல்திறன்மிக்க எதிர்க்கட்சியாக இருக்கப்போவதாகவும் சம்பந்தர் கூறினார்.
“எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கும் அரசியல் கட்சிகள், உறுப்பினர்கள் அனைவருக்கும் ஒரு உத்தரவாதத்தை அளிக்க விரும்புகிறேன். எதிர்க்கட்சிகளின் நிலைப்பாட்டை உறுதிப்படுத்தும் விதமாக உங்கள் அனைவருடனும் இணைந்து செயற்பட நாங்கள் தயங்க மாட்டோம். தேவையேற்படும் போதெல்லாம் அரசுக்கு எதிராக நாங்கள் திறமையானதொரு எதிர்க்கட்சியாக செயற்படுவோம்”, என்றார் சம்பந்தர்.
"தமிழர் பிரச்சனைக்கு ஏற்கத்தக்க தீர்வு தேவை"
தேசிய நலனை முன் வைத்துத் தீர்க்கப்படவேண்டிய விவகாரங்கள் பல இருக்கின்றன என்று தெரிவித்த சம்பந்தர், தமிழர் விவகாரம் என்பது நீண்டகாலமாக தீர்வுகாணப்படாமல் புறையோடிப்போயிருப்பதாக கூறினார்.
இனப்பிரச்சனைக்கு தீர்வுகாண அனைவருடனும் இணைந்து செயற்பட தாம் தயாராக இருப்பதாகவும், இந்த நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் விசுவாசமாக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
“தமிழர்களின் பிரச்சனைக்கு ஏற்கத்தக்க தீர்வு காண்பது நம் அனைவரின் முதன்மையான கடமை என்பதை நான் வலியுறுத்திக்கூற விரும்புகிறேன்”, என்றார் சம்பந்தர்.
No comments:
Post a Comment