தற்போது ஏற்பட்டுள்ள சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தமிழ் மக்களின் நீண்டகால இனப்பிரச்சினைக்கான நிரந்தர அரசியல் தீர்வினை காண்பதற்கு அனைத்து தரப்பினரும் ஒருமித்து செயற்படவேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித்தலைவருமான இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக புதிய அரசியல் யாப்பு உருவாக்கப்படுமென ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவினால் கூறப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய அவர்,
பழைய அரசாங்கத்தின் போக்கிற்கு வித்தியாசமாக மனித உரிமை பேரவையின் அறிக்கையை புதிய அரசாங்கம் வேறொரு வகையில் கையாள முனைகின்றமை விரும்பத்தக்கதாகவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
பழைய அரசாங்கத்தின் போக்கிற்கு வித்தியாசமாக மனித உரிமை பேரவையின் அறிக்கையை புதிய அரசாங்கம் வேறொரு வகையில் கையாள முனைகின்றமை விரும்பத்தக்கதாகவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், மனிதாபிமானச் சட்ட மீறல்கள் குறித்த ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவக அறிக்கை தொடர்பாகவும், மனித உரிமை பேரவையில் 30வது கூட்டத்தொடரில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஆற்றிய உரை தொடர்பாகவும் கருத்து வெளியிடும் போதே எதிர்க்கட்சித்தலைவர் இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், மனிதாபிமானச் சட்டங்கள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் விசாரணை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் அல் ஹுசேன் இலங்கை தொடர்பாக இரண்டு தடவைகள் இக் கூட்டத்தொடரில் உரையாற்றியிருக்கின்றார்.
அதேநேரம் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர பல்வேறு விடயங்கள் சம்பந்தமாக நீண்ட உரையொன்றை ஆற்றியிருக்கின்றார்.
எம்மைப் பொறுத்தவரையில் இந்த நாட்டில் இடம்பெற்ற விடயங்கள் குறித்து உரிய விசாரணைகள் நடத்தப்பட்டு உண்மைகள் அறியப்பட வேண்டும். உண்மையின் அடிப்படையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயமான பரிகாரம் வழங்கப்படவேண்டும்.
கடந்த காலத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் இடம்பெறாதிருப்பதற்குரியவாறான உறுதியளிக்கப்படவேண்டும். அதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும். அதனடிப்படையில் இந்த நாட்டிலிலுள்ள அனைத்தின மக்கள் மத்தியிலும் நல்லிணக்கம் ஏற்படுத்தபடவேண்டும்.
தமிழ் மக்கள் நீண்டகாலமாக எதிர்நோக்கிவரும் இனப்பிரச்சினைக்கு ஒருமித்த இலங்கைக்குள் ஏற்றுக்கொள்ளக் கூடிய வகையிலான நியாயமான நிரந்தரமான நடைமுறைப்படுத்தக்கூடிய அரசியல் தீர்வொன்று வழங்கப்பட வேண்டும் என்பதே எமது உறுதியான நிலைப்பாடாகவுள்ளது.
இவ்வாறான நிலையில் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக புதிய அரசியல் யாப்பு உருவாக்கப்படுமென ஐ.நா மனித உரிமைப் பேரவையில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவினால் கூறப்பட்டுள்ளது.
ஆகவே பழைய அரசாங்கத்தின் போக்கிற்கு வித்தியாசமாக மனித உரிமை பேரவையின் அறிக்கையை புதிய அரசாங்கம் வேறொரு வகையில் கையாள முனைகின்றமை விரும்பத்தக்கதாகவுள்ளது.
எமது கடந்த கால அனுபவங்களின் பிரகாரம் தற்போது ஏற்பட்டுள்ள இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி எமது மக்களின் நீண்டகால இனப்பிரச்சினைகளுக்கான நியாயமான தீர்வுகளை ஒருமித்த இலங்கைக்குள் காண்பதற்காக அனைவரும் ஒருமித்து செயற்பட வேண்டும். அதற்குரிய செயற்பாடுகளை அடுத்து முன்னெடுக்கப்பட வேண்டும் என்றார்
No comments:
Post a Comment