September 30, 2015

இலங்கை தமிழர் பிரச்சினைகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவேன்-வைகோ!

ஈழத்தமிழர் பிரச்சினைகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த இளைஞர்களை திரட்டுவேன் என, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, தெரிவித்துள்ளார்.

மேலும் ஈரோட்டில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளதாக தமிழக ஊடகமான மாலை மலர் குறிப்பிட்டுள்ளது.
அப்போது அவர் மேலும் கூறியதாவது:–
ஐ.நா. சபையில் இலங்கையில் நடந்த தமிழர்களுக்கு எதிரான போர்க்குற்றம் குறித்து கொண்டு வரப்படும் தீர்மானம், தமிழர்களுக்கு எதிரானதாகவே அமையும்.
அத்துடன் இந்த தீர்மானத்துக்கு ரஷ்யா, அமெரிக் கா, பாகிஸ்தான், இந்தியா போன்ற நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளது. இந்த நாடுகள் ஒன்றுக்குகொன்று முரண்பாடான கொள்கைகளை கொண்டதாகும். இலங்கை தமிழர்கள் பிரச்சினையில் இந்த நாடுகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து செயல்பட்டு வருகிறது.
இலங்கை தமிழர்கள் பிரச்சினையில் நீதிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. நீதி குலைக்கப்பட்டு உள்ளது. இதை வெளியே கொண்டு வர தமிழர்கள் முன் வர வேண்டும்.
பா.ஜனதா தலைமையிலான மத்திய அரசு தனது தவறுகளை மறைக்கவே இலங்கைக்கு உதவி செய்து வருகிறது.
காங்கிரஸ் ஆட்சியின் போது இலங்கைக்கு ஆயுத உதவிகளும், தளவாட பொருட்களும் வழங்கப்பட்டது. அப்போது ஆட்சியில் இருந்த தி.மு.க.வும், பா.ம.க. நிறுவனர் ராமதாசும் வாய் திறக்கவில்லை. ஆனால் இப்போது மட்டும் இலங்கை பிரச்சினையில் அறிக்கை விட்டு வருகிறார்கள்.
அப்போதே தி.மு.க. உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் நாங்கள் அவர்களுக்கு ஆதரவாக இருந்திருப்போம். இதனால் இலங்கை தமிழர்களுக்கு எதிரான போர் தடுத்து நிறுத்தப்பட்டு இருக்கும்.
மேலும் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த 10 இலட்சம் இளைஞர்களை திரட்ட உள்ளேன். திருவாரூரில் வருகிற 5–ம் திகதி மக்கள் நலன் நாடும் கூட்டணியின் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் ம.தி.மு.க., விடுதலை சிறுத்தை, இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு ஆகிய கட்சிகள் இடம் பெறுகின்றன.
இந்த கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளது என வைகோ கூறினார்.

No comments:

Post a Comment