September 29, 2015

எங்கள் இளம் சமூகத்தை வழிப்படுத்த அனைவரும் ஒன்று திரள்வது அவசியம்!

நிலத்தைப் பாதுகாத்தால் பின்னர் எதையும் கட்டி எழுப்பலாம் என்பது தந்தை செல்வநாயகத்தின் கருத்து. நாடு இருந்தால் எங்கள் இனத்தின் புகழை உலகம் பேசும் என்பது தலைவர் பிரபாகரனின் நிலைப்பாடு.

இப்போது, எங்கள் இளைஞர்களை ஒழுங்குபடுத்தி, நெறிப்படுத்தி, வழிப்படுத்தினால் அது போதும். உரிமை பற்றி பின்னர் யோசிக்கலாம் என்பதான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
யாழ்ப்பாண நகரத்தின் மையத்தில் வைத்து தனியார் கல்வி நிறுவன ஆசிரியர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார்.
திருமணம் நடந்து பன்னிரண்டு நாட்களில் இந்த நெட்டூரம் நடந்தேறியுள்ளது. மணமகன் அடித்துக் கொலை; வெளிநாட்டில் நடந்தது என்ற செய்தியை ஆச்சரியத்தோடு வாசித்து சீ… இப்படி இருக்க முடியாது என்று நினைத்த தமிழினம் இன்று அச் செய்திகளை தானே அனுபவமாக்கிக் கொண்டுள்ளது எனின் எங்கள் இளம் சமூகம் எப்படி என்று சிந்திப்பது கட்டாயமானதாகும்.
புதுமணத் தம்பதிகளாகச் சென்றவர்களோடு வாய்த்தர்க்கம் புரிந்து அவர்களைத் தாக்கி மணமகனைக் கொலை செய்கின்ற அளவில் யாழ்ப்பா ணத்தின் நிலைமை உள்ளது எனின், இதுவே எங்கள் இளம் சமூகத்தின் உச்சமான நெறிபிறழ்வைக் காட்டி நிற்கும் அடையாளமாகும்.
மாணவி வித்தியாவின் படுகொலை. அதன் பின்பான எழுச்சி என்பன வடபுலத்தில் இனிமேல் வன் கொடுமைகளுக்கு இடமே இல்லை என்ற சூழமைவை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.
ஆனால் தொடர்ந்தும் மோசமான வன்மங்கள் நாளுக்கு நாள் நடந்தேறுகின்றன. இதுதவிர, வட புலத்தில் க.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர் தரம் உள்ள பாடசாலைகளை இயக்குவித்தல் என் பது கூட ஏக்கம் நிறைந்ததாக அமைந்துள்ளது.
அதிபர்கள், ஆசிரியர்கள்; பாடசாலை மாணவர் களுக்கு எதிராக பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்கின்ற அளவில் நிலைமை வந்துவிட்டது எனில் இனியும் என்ன நடந்தால் நாங்கள் விழிப் படைவோம் என்று கேட்பதில் நியாயம் இருக்கிறதல்லவா?
அன்புக்குரியவர்களே! எங்கள் இனம் வாழ வேண்டுமாயின் பண்பாடும் ஒழுக்கமும் எச்சந்தர்ப் பத்திலும் கட்டிக் காக்கப்படவேண்டும்.
ஓர் இனம் தனது பண்பாடு, ஒழுக்கவிழுமியத்தை இழந்து போகுமாக இருந்தால், உரிமை கிடைத்தா லும் அந்த இனத்தால் உருப்பட முடியாது போகும்.
ஆகையால் எங்கள் இளம் சமூகத்தை வழிப்படுத்த அனைவரும் ஒன்று திரள்வது அவசியம். மாணவர்களிடையே ஒழுக்கம், உயர்பண்பு என்பவற்றைக் கட்டி எழுப்ப சமூகம் ஓர் அணியில் ஒன்று திரள வேண்டும். எங்கள் மாணவர்கள் மீது சமூகக் கண்காணிப்பு மிகவும் இன்றியமையாததாகும்.
நமக்கு ஏன் தேவையில்லாத வேலை என்று யார் நினைத்தாலும் அவர்களுக்கு நாம் சொல்லக் கூடியது, என்றோ ஒருநாள் உங்கள் நினைப்பு உங் களுக்கு இழைப்பை-அவமானத்தைத் தரும். அப் போது நீங்கள் துன்பப்படுவது கண்டு இந்தச் சமூகம் திரும்பிப் பாராது.
ஆகையால் எங்கள் பிள்ளைகளை நெறிப்படுத் துவது எங்கள் கடமை என்று உணர்வோம். இது விடயத்தில் தமிழ் அரசியல் தலைமைகள் அனைத் தும் ஒன்று சேர்ந்து மாநாடு கூடி ஆராய்ந்து பொரு த்தமான திட்டங்களை அமுல்படுத்த வேண்டும்.
இது விடயத்தில் வடக்கு மாகாண அரசு எந்தப் பேத மும் இல்லாது இளம் சமூகத்தை நெறிப்படுத்த வேண்டும்.
போதைப் பாவனையை ஒழித்துக் கட்ட, வேலையற்றவர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்க முன்வரவேண்டும். இல்லையேல் நாம் எல்லோரும் துன்பப்படவேண்டி வரும்.
வலம்புரி ஆசிரியர் தலையங்கம்.

No comments:

Post a Comment