உள்ளக விசாரணையில் தமிழ்மக்களுக்கு என்றும் நம்பிக்கை இருந்ததில்லை. அதனாலேயே அன்றிலிருந்து நாம் சர்வதேச விசாரணையை வலியுறுத்திவருகின்றோம். அமெரிக்கா சொல்கின்றதென்பதற்காக நாம்அதனை
ஏற்றுக்கொள்ளமுடியாது. எனவே சர்வதேச விசாரணையை நடத்தி குற்றம்செய்தவர்களுக்கு தண்டனை வழங்கும் அதேவேளை பாதிக்கப்பட்ட தமிழ்மக்களுக்கு நீதி வழங்கப்படவேண்டும். அதனூடாக நாட்டின் நீண்டகால இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு எட்டப்படவேண்டும் என்பதே எமது நிலைப்பாடு என தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் அம்பாறைமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ.கே.கோடீஸ்வரன் (ரொபின்) தெரிவித்தார்.
அவர் இது தொடர்பாக மேலும் கூறுகையில்:
அமெரிக்கா உலகநாடுகளில் செய்துவரும் இராஜதந்திர செயற்பாடுகளை உலகறியும். இறுதியுத்தத்தில் போர் நியமங்களுக்கு அப்பால் தமிழ்மக்கள் இனப்படுகொலைசெய்யப்பட்ட சம்பவம் பாரதூரமானது. அதனை வெறுமனே உள்ளகவிசாரணை மூலம் விசாரணைசெய்தால் உரிய நீதி கிடைக்காது. அதற்காகவே அன்றிலிருந்து சர்வதேச விசாரணையைக் கோரிவருகின்றோம்.
இன்றைய ஜனாதிபதி மீது நம்பிக்கை வைத்துள்ளோம். நாட்டின் இனப்பிரச்சினைக்கு பாராளுமன்றமே தீர்வு காணவேண்டும் என்றும் கூறியுள்ளார். எனவே மக்கள் பிரதிநிதிகள் இந்த நீண்டகால பிரச்சினையைத்தீர்த்துவைக்க ஜனாதிபதி வழங்கிய இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.
காயப்பட்டவர்களுக்குத்தான் காயத்தின் வலி தெரியும். வலிகளுக்கு ஒத்தடம் கொடுத்து அடக்குவதற்கு அப்பால் அதற்கான காரணம் கண்டறியப்பட்டு நீதி கிடைக்கப்பெறவேண்டும்.எமது மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டும்.
கிழக்கில் நடைபெற்ற கொக்கட்டிச்சோலைபடுகொலை வீரமுனை,சத்துருக்கொண்டான், நற்பிட்டிமுனை, கிழக்குப் பல்கலைக்கழகம், காரைதீவுபோன்ற படுகொலைகளுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை.
காணாமல்போனோர் விவகாரமும் இழுபட்டுகொண்டுவருகிறது. வருடக்கணக்கில் விசாரணையே செல்லும்போல் தெரிகிறது. அதிலும் நீதியான தீர்வு கிடைக்கும் அறிகுறி தென்படவில்லை.
இந்நிலையில் உள்ளகப்பொறிமுறையில் நம்பிக்கை ஏற்படவில்லை. எனவே தான் சர்வதேச விசாரணையில் நம்பிக்கை கொண்டு அதனை தொடர்ச்சியாக கோரிவருகின்றோம். இன்றைய முக்கிய கால கட்டத்தில் அவை தீர்மானிக்கப்பட்டு புரை யோடிப்போயிருக்கும் இனப்பிரச்சினைக்கு இன்றைய ஜனாதிபதி தலைமையில் நிரந்தர தீர்வு காணப்படவேண்டும்.
No comments:
Post a Comment