September 29, 2015

போகிற போக்கில் அமைதிக்கான அடுத்த நோபல் பரிசு ரணில் மைத்திரி சந்திரிகா சம்பந்தனுக்கே!-த.எதிர்மன்னசிங்கம்!

இவ்வருடம் ஜனவரியில் தேர்தல் மூலம் ஒரு ஆள் மாற்றத்தை கொண்டுவந்த இந்திய அமெரிக்க அரசுகளுக்கு ஒரு ஆட்சி மாற்றத்தையும் கொண்டுவர வேண்டிய தேவை இருந்தது. இதற்காக மகிந்தரால் ஓரம் கட்டப் பட்டு தலை
மறைவாக வாசம் செய்த முன்னர் இரு தடவைகள் ஜனாதிபதி பதவி வகித்தும் தமிழ் மக்கள் மீது பல போர்களை நடத்தி புலிகளிடம் அடிவாங்கிய வருமான சந்திரிகா குமாரண துங்கா மீண்டும் தீவிர அரசியலுக்குள் இழுத்து வரப்பட்டார்.


வெளி நாடுகளில் தமிழர் பேரவையும் வெளிநாடுகளும் கூட்டாக தமக்கு எதிரான சதிகள் நடப்பதை மகிந்த ராஜபக்ஷ 2013லிருந்தே கூறி வந்தார்;. மகிந்த மீதுள்ள தமிழ் மக்களுக்கு இருந்த வெறுப்பாலும் அந்நிய நாடுகளின் புலனாய்வுத் துறையின் தீவிர எதிர்ப் பிரச் சாரத்தாலும் மகிந்தரின் பேச்சை யாரும் நம்ப வில்லை. ஆனால் 2015 ஜனவரி 8ந் தேதி நடந்த ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் மனுத் தாக்கல் செய்த போது தான் மகிந்தரின் கொடுப்புப் பல் போல விளங்கிய மைத்திரி பால சிறிசேனா புடுங்கி வெளியே எடுக்கப் பட்டது மகிந்தருக்கே தெரிய வந்தது.


மகிந்தரின் பல்லை பல் இல்லாத பாம்பான ரணிலுக்கு மாட்டிவிட்டு இலஞ்சம் ஊழலுக்கு எதிரான நல்லாட்சி என்ற பட்டை நாமத்தை சிங்கள தமிழ் மக்களின் நெற்றியில் போட்டுக் கிடைத்த தேர்தல் வெற்றியே மைத்திரி பெற்ற வெற்றி. இருவருக்கும் தனிப்பட்ட முறையில் இலஞ்சம் ஊழல் குற்றச்சாட்டுகள் உறுதிப் படுத்தப்பட்ட போதிலும் அவர்கள் இத்தேர்தல் மூலம் புனிதர்களாக ஞான முழுக்கு கொடுக்கப்பட்டனர்.

இந்தியா அமெரிக்காவைத் துச்சமாக நடத்தி சீனா வோடும் ரஷியாவோடும் நகமும் சதையும் போல விளங்கிய மகிந்தருக்கு வழங்கப்பட்ட அரசியல் மரண தண்டனை அவரது இந்தப் பதவிப் பறிப்பு. சிங்களத்தை தமிழ் மக்களோடும் புலிகளோடும் பகைளை வளர்தது மோத வைத்து சர்வ தேச அரசியலை இலங்கையில் நடத்தும் அரசுகளுக்கு மகிந்தரின் உள்ளம் தெரியாமல் இருக்க நியாயம் கிடையாது.

ஆனால் வரலாற்றைப் பதிவு செய்யும் பொழுது நிச்சயம் மகிந்தரின் உண்மை உருவம் சிலாகிக்கப்படும். காரணம் அவர் இந்திய அமெரிக்க அரசியலையோ சீனாவின் அரசியலையோ நடத்த முற்பட வில்லை. எப்படி 1958 -59 களில் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டார நாயக்கா இடது சாரிச் சிந்தனையோடு அமெரிக்க ஐரோப்பிய பெற்றோலிய நிறுவனங்கள் காப்பீட்டு நிறுவனங்களைத் தேசிய மயமாக்கியதால் படு கொலை செய்யப் பட்டாரோ அதே விதமானதே இன்றைய மகிந்தரின் பதவிப் பறிப்பும்.


அன்றைய கொலையை பின்னர் ஆட்சிக்கு வந்த அவரது மனையி ஸ்ரீமாவோ கூட வெளிப் படுத்த முடியாத வாறு அமெரிக்காவின் ஆதிக்கம் கால் பதித்து விட்டது. அப்போதும் தமிழரசுக் கட்சிதான் இன்றுபோல் அமெரிக்காவின் கையாக ஆட்சிக் கவிழ்ப்பு உட்பட அமெரிக்காவுக்கு உதவியது. பண்டா செல்வா ஒப்பந்தத்தை கிழித்தெறிய அமெரிக்க கையாளான ஜே.ஆர். ஆர்ப்பாட்ட ஊர்வலம் செய்வதற்கு சௌமிய மூர்த்தி தொண்டமான் தமது தோட்டத் தமிழ்த் தொழிலாளர்களை அனுப்பி உதவினார்.

ஆனால் அப்படிச்; செயற்பட்ட ஜே.ஆர்., தொண்டமான் பண்டார நாயக்காவை விடச் சிறந்தவராக நாம் பார்க்த் தலைப்பட்டு விட்டோம். பண்டார நாயக்காவின் குற்றம் சிங்களத் தேசியம் பேசியது மட்டுமே. அதே வேளையில் கொள்கை அளவிலாவது தமிழரின் உரிமையை அங்கீகரித்திருந்தார்.

உண்மையில் வடக்கு கண்டி தெற்கு என 3 அரசுகளை சமஷ்டி முறையில் ஏற்படுத்த வேண்டும் என 1920களில் முன்வைத்தவர் அவரே. இல்லை வேண்டாம் எனத் தனித் தேசம் தமிழருக்கு வேண்டும் என யாழ்பாண வாலிபர் சங்கம் போராட்டம் நடத்தியது. பின்னர் சேர்.பொன். அருணாசலத்தின் தலையீட்டால் தமிழ் இனம் தடம் மாறிப் போனது.


அக்காலத்தில் மகாத்மா காந்தி உட்பட இந்திய சுதந்திரப் போராட்டத்; தலைவர்கள் யாழில் வந்;து பண முடிப்பும் பெற்று போய் இந்திய சுதந்திரத்தைப் பெற்றார்கள். இன்று அதே சுதந்திர இந்தியா அமெரிக்காவின் அடியாளாக மாறி தமிழனை அதிகாரம் செய்கிறது. அதற்கு விலையாக என்ன வெல்லாமோ காரணம் சொல்லி எதிர்க் கட்சித் தலைவராக்கி உள்ளது.

இந்த பதவியை இயல்பாகவே தமிழ் மக்களின் வாக்குப் பலத்தால் 1977ல் பெற்ற அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் தனி ஈழம் பேசிப் பதவியைப் பெற்றுப் பின்னர் தமிழ் ஈழப் போராட்டத்தை நசுக்க ஜே.ஆருக்கு பக்க பலமாக செயற்பட்டார். அன்று உருவான 6வது அரசியல் திருத்தச் சட்டமும் பயங்கரவாத தடைச் சட்டமும் இலட்சக் கணக்கான தமிழ் மக்கள் படு கொலைகள் சொத்துப் பறிப்புகள் என இன்றும் தமிழினத்தைக் கருவறுத்து வருகிறது.

எவ்வளவோ செய்துட்டம் இதைக் கூடவா செய்ய மாட்டோம் என்பது போல ஒவ்வொரு முறையும் 1958 முதல் தமிழரசுக் கட்சியும் அதன் பல்வேறு போலி; முகங்களாக வந்த தமிழர் விடுதலைக் கூட்டணியும் தமிழ் தேசிய கூட்டமைப்பும் இன்று தேவைப் படாத முகங்களாக வீசி எறியப் பட்டு மீண்டும் பழைய குருடியான தமிழரசுக் கட்சியே இந்திய அமெரிக்க அரசுகளின் தெரிவாக மாறிவிட்டதைக் காண முடிகிறது.

அப்படிச் செய்வதின் மூலமே திம்புவிலும் வட்டுக் கோட்டையிலும் சர்வ தேச அரங்கம் ஏறிய தமிழரின் தாயகம், தேசியம், தன்னாட்சி அதிகார மீட்புப் போராட்டம் இன்று பாம்பு தோலுரித்த சட்டை போல் கழட்டி விட சம்பந்தன் தலைமை முற்படுகிறது. அந்த இனத் துரோகப் பணியில் முக்கால் கிணறும் தாண்டி விட்ட இன்றைய நிலையில் அணையப் போகும் மெழுகுவர்த்தி தரும் இறுதிப் பெரு வெள்ளம் போல சம்பந்தனும் தமிழரசுக் கட்சியும் பிரகாசிப்பதைக் காண்கிறோம்.

ஐ.நா.சபையில் இலங்கை அரசு எதிர் நோக்கி உள்ள யம கண்டத்தைத் தாண்டும் வரை சம்பந்தன் சுமந்திரன் காட்டில் அடை மழை கொட்டும். அத்தனை எளிதாக சீனா 1956 முதல் கட்டி எழுப்பிய தனது உறவை அதற்;குப் பின்னர் நுழைந்த அமெரிக்காவும் பறித்துப் போக விடப் போவதில்லை. இந்தியாவாலும் இலங்கை அரசைச் சீனாவிடம் இருந்து துண்டிக்க வைத்து விட முடியாது.

1950 களில் சீனர்களின் புடவைக் கடைகளையும் பல் கட்டும் நிலையங்களையும் யாழ்ப்பாணம் பிரதான வீதிகளிலே கண்டு பழகிய எமக்கு சீனர்கள் எப்படி தீயவர்களாக இருக்க முடியும்? மேலும் மைத்திரி சந்திரிகா போன்ற மகிந்தர் சிந்தனை வகையறாக்களுக்கு சிங்களவர் மத்தியில் பஞ்சமே கிடையாது. ஐ.தே.கட.சியும் ரணிலும்; தோல்வி மேல் தோல்விகளைச் சந்திப்பதற்கு அவர்களின் சாதாரண மக்கள் சாரா அந்நிய மோகம் அமெரிக்காவின் பின்னால் ஓடும் கோமாளித் தனத்தை சிங்கள மக்கள் வெறுப்போடு பார்க்கிறார்கள். எனவே சீனா பற்றிய சிங்கள மக்களின் பார்வை மாற்றம் அடையாது.

சிங்களப் பொது மக்களுக்கு பொதுவுடமைக் கொள்கையே புத்த மதம் வழியாக ஊறிய கலாச்சார அறம். எனவே அவர்களை இன்றைய அமெரிக்க முதலாளித்துவ பொருளாதார உலக மயமாக்கல் வழியான ஆட்சிக்கு இழுப்பது கடினமாகலாம். இந்திய அமெரிக்க சீன இழுபறி நீடிப்பதற்கான காரணிகள் நிறைவே காணப் படுகின்றன.

இப்படியான சிக்கல் நிலையை மத்திய கிழக்கில இஸ்ரேலிய பலஸ்தீனிய பிரச்சினையில் உலகம் கண்டு வருகிறது. எத்தனையோ பேரர்கள் சமாதான உடன் படிக்கைகள் செய்தும் அங்கே ஒரு அமைதியை இதே சர்வதேசம் வர விடவில்லை காரணம் போரோ சமாதானமோ அங்கே அவர்களின் பொருளாதாரம் இடிக்கவும் இடித்ததைக் கட்டவும் வளர்ச்சி பெறுகிறது. சவப் பெட்டி வர்த்தகத்திலேயே ஊழல் செய்யும் அரசியல் வாதிகள் இருப்பதையும் நாம் மறந்துவிட முடியாது.


இங்கேயும் கடந்த 68 வருடங்களாக அதே நாடகம்தான் நடந்து வருகிறது. 1947ல் நாம் சுதந்திரம் அடைந்த பொழுதும் அதன் பின்னர் பல ஆண்டுகளாக எமது இலங்கை ருபாயின் மதிப்பு இந்திய ரூபாயின் மதிப்பை விடவும் ஒன்றரை மடங்கு கூடுதலாக இருந்தது. அதாவது அன்று இலங்கையின் ஒரு ரூபாய் இந்தியா ரூபாயில் ஒரு ரூபாய் 50 பைசாவாக இருந்தது.

இன்று அதே இந்திய ஒரு ரூபாயை இலங்கைக் காசில் 2.ரூபாய் 07 சதம் கொடுக்கிறோம். இதுவே போதாது என்று இந்தியாவின் சுரண்டலும் இலங்கை அரசியலில் தலையீடும் பல மடங்கு அதிகரித்து இந்தியாவின் ஒரு மாநிலம் போன்ற நிலைக்கு ஆதிக்கம் அதிகரித்து விட்டது.

இந்தியா மீதும் இன்று அமெரிக்க ஆதிக்கமே ராஜீவ் காந்தியின் கொலைக்குப் பிறகு மேலோங்கி நிற்கிறது. இதன் மூலம் ராஜீவ் காந்தி கொலையை யார் நடத்தி முடித்தது எனப் புரிவது எளிது. ஆனால் அப்படி யாரும் எளிதாக நினைத்து விடக் கூடாது என்பதற்காக அக்கொலை விசாரணை பற்றி மர்மங்கள் கவனமாக மூடி மறைக்கப் பட்டு வருகின்றன.

அப்படிச் செய்தால் மட்டுமே புலிகளையும் தமிழ் மக்களையும் அழித்தது நியாயமே எனக் காட்ட முடியம். எல்லாம் அமெரிக்காவுக்குச் சாதகமாக நடக்கும் வரை நட்பு நீடிக்கும். அமெரிக்கா தான் நினைத்த போது பியூஸைப் புடுங்கி இந்தியாவைக் கவிழ்த்து விடும் என்பதில் யாரும் சந்தேகப் படத் தேவை இல்லை.

பலஸ்தீனத் தலைவர் அரபாத்தும் இஸ்ரவேல் பிரதமர் சிமோன் பெரஸ{ம் அமெரிக்க தலைவர் ஜிம்மி காட்டர் முன்னிலையில் கைகுலுக்கி காம் டேவிட் உடன்படிக்கை செய்தனர். அதற்காக அரபாத்தும் பெரஸ{ம் அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றனர். நடந்ததோ பெரஸ் அரசியலில் காணாமல் போனார் அரபாத் பல கொலை முயற்சிகளில் தப்பி மர்மமான முறையில் கொலை செய்யப் பட்டார். பலஸ்தீன அமைதியும் காணமல் போய் விட்டது.

போகிற போக்கில் இங்கேயும் செயற்கரிய சாதனை செய்து புலிப் பயங்கரவாதத்தில் இருந்து நாட்டையும் மக்களையும் மீட்டு அமைதியை ஏற்படுத்தினார்கள் என்ற நற்சான்றோடு கூடிய அடுத்த அமைதிக்கான நோபல் பரிசை அமெரிக்கா ரணில், மைத்திரி, சந்திரிகா, சம்பந்தனுக்கு வழங்கிக் கௌரவிக்க முன்வரலாம்.

விபீடணனுக்கு முடி சூட்டியதால் அவனது மக்களுக்கு என்ன வந்தது?
-அகரம் மாதாந்த இதழுக்காக த.எதிர்மன்னசிங்கம்.

No comments:

Post a Comment