September 29, 2015

நாகூர் இந்திய அரசு பெட்ரோலிய ஆலை முற்றுகையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கைது!

“காவிரி உரிமையைப் பாதுகாத்துத் தராத இந்திய அரசே காவிரிப் படுகையிலிருந்து பெட்ரோலியத்தை எடுக்காதே“  என்ற முழுக்கத்தை
முன்வைத்து காவிரி உரிமை மீட்புக் குழுவின் சார்பில் நேற்று (28.09.2015) காலை, நாகை மாவட்டம் – நாகூர் பனங்குடி இந்திய அரசு பெட்ரொலிய ஆலை முற்றுகையிடப்பட்டதில் ஆயிரக்கணக்கான உழவர்களும் உணர்வாளர்களும் கைது செய்யப்பட்டனர்.
“காவிரி உரிமையைக் காக்காத இந்திய அரசே – காவிரி பெட்ரொலை எடுக்காதே – காவிரி எங்கள் செவிலித்தாய்! காவிரி எங்கள் குருதி ஒட்டம்“ என்பன உள்ளிட்ட ஆவேச முழக்கங்களோடு காலை 10 மணியளவில், நாகூர் – வாஞ்சூர் ரவுண்டானாவில பல்வேறு உழவர் அமைப்புகளைச் சேர்ந்த உழவர்களும், தோழர்களும் திரளத் தொடங்கினர். தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து வாகனங்களில் வந்த தோழர்களால் அச்சாலை முழுவதுமாக மக்கள் வெள்ளமாகக் காட்சியளித்தது. திட்டச்சேரி சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது.
அங்கிருந்து தொடங்கிய முற்றுகைப் பேரணிக்கு காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ. மணியரசன் தலைமை தாங்கினார்.
பேரணியின் போது, கர்நாடக முதல்வர் சித்தராமையா, நடுவண் சட்ட அமைச்சர் சதானந்த கவுடா உருவப்படங்கள் எரிக்கப்பட்டன. ஆவேச முழக்கங்களை எழுப்பியவாறு வந்த தோழர்களை ஆலையின் வாயிலில் காவல்துறையினர் தடுத்தனர். காவல்துறை தடுப்புகளை உடைத்துக் கொண்டு முன்னேறிய தோழர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர், தோழர்கள் அனைவரும் சாலையில் அமர்ந்து, சாலை மறியல் செய்தனர். காவல்துறை அனைவரையும் கைது செய்வதாக அறிவித்து, அனைவரையும் தங்கள் வாகனங்களில் ஏற்றினர்.காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கப் பொதுச் செயலாளர் திரு. காவிரி தனபாலன், தமிழக விவசாயிகள் சங்க தஞ்சை மாவட்டத் தலைவர் திரு. த. மணிமொழியன், திருச்சி மாவட்டத் தலைவர் திரு. ம.பா. சின்னதுரை, தமிழ்த் தேசியப் பேரிக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன், இந்திய தேசிய லீக் தேசிய பொதுச் செயலாளர் – முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் திரு. எம்.ஜி.கே. நிஜாமுதீன், தமிழர் தேசிய முன்னணி பொதுச் செயலாளர் திரு. அயனாவரம் சி. முருகேசன், விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சி மாநில அமைப்புச் செயலாளர் திரு. அருண் மாசிலாமணி, இந்திய சனநாயகக் கட்சி தஞ்சை மாவட்டத் தலைவர் திரு. சிமியோன் சேவியர்ராஜ், மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் முனைவர் த. செயராமன், மீத்தேன் கூட்டமைப்பு மன்னார்குடி ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் பாரதிச்செல்வன், கூடங்குளம் அணுஉலைக்கு எதிர்ப்புப் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் முகிலன், தமிழக உழவர் முன்னணிப் பொதுச் செயலாளர் திரு. தூருவாசன், துணைப் பொதுச் செயலாளர் திரு. தங்க. கென்னடி, துணைத் தலைவர் திரு. மு. கொள்ளிடம் பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் திரு. சிவப்பிரகாசம் பிள்ளை, கா.வி.பா.ச. நாகை மாவட்டச் செயலாளர் திரு. ஆர். இராசேந்திரன், கீழையூர் ஒன்றியச் செயலாளர் திரு. வீ. இராமசாமி, வேதாரணியம் வட்ட விவசாயிகள் சங்கத் தலைவர் திரு. ஒளிச்சந்திரன், ஒசூர் – தொழிலாளர் பாதுகாப்புப் பேரவை செயல் தலைவர் திரு. முரளி, மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் லேனா குமார் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் தலைவர்களும், தோழர்களும் இதில் கலந்து கொண்டு கைதாகினர்.கைதான தோழர்கள் நாகூரிலுள்ள பல்வேறு மண்டபங்களில் அடைத்து வைக்கப்பட்டு மாலை விடுதலை செய்யப்பட்டனர்.
காவிரி உரிமை மீட்புக் குழுவின் இப்போராட்டம், காவிரி உரிமை மீட்பில் உழவர்களுக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்துவதாக அமைந்தது.




No comments:

Post a Comment