September 2, 2016

வெலிஓயாவை நெடுங்கேணியுடன் இணைத்து இனவிகிதாசாரத்தைக் குழப்ப முயற்சி!

முல்லைத்தீவு- வெலிஓயா பிரதேசத்தின் 3696 வாக்காளர்களை, நெடுங்கேணி, பட்டிக்குடியிருப்பு கிராமத்துடன் இணைத்து இன விகிதாசாரத்தை குழப்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
வவுனியா, நெடுங்கேணி, மருதோடை கிராமத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 
‘கடந்த காலத்தில் இந்த நாட்டை ஆட்சி செய்த தலைவர்கள் தமிழ்த் தலைவர்களையும், தமிழ் மக்களையும் ஏமாற்றியதன் விளைவாகத்தான் இந்த நாடு பாரியதொரு யுத்தத்தையும் அழிவையும் சந்திக்க வேண்டியேற்பட்டது.

அன்று மிதவாதத் தலைவர்களோடு இந்தப் பிரச்சினையைச் சுமூகமாகப் பேசித் தீர்த்திருந்தால், 30 வருட காலமாக இடம்பெற்ற யுத்தம் ஏற்பட்டிருக்காது. ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஆயுதம் தூக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்காது.

இன்றைக்கு முல்லைத்தீவு மாவட்டத்திலே, வெலிஓயா பிரதேசத்திலே இருக்கின்ற 5 கிராம சேவையாளர் பிரிவுகளுக்குரிய கிராமங்களைச் சேர்ந்த 3,696 வாக்காளர்களை வவுனியா மாவட்டத்தில் வவுனியா வடக்கின் நெடுங்கேணிப் பிரதேசத்திலுள்ள பட்டிக்குடியிருப்புக் கிராமத்துக்குள்ளே கொண்டுவந்து இணைக்கின்றார்கள்.

ஏற்கெனவே இருக்கின்ற பட்டிக்குடியிருப்புக் கிராமம் என்பது 245 தமிழ் வாக்காளர்களைக் கொண்ட ஒரு கிராம சேவையாளர் பிரிவாகும். ஒரு மாவட்டத்தில் இருக்கின்றவர்களை இன்னுமொரு மாவட்டத்தின் வாக்காளர் இடாப்பிலே இரகசியமாகப் பதிவு செய்கின்றார்கள்.

அவ்வாறு பதிவதன் மூலம் என்ன செய்ய நினைக்கின்றார்கள்? என்ன செய்ய யோசிக்கின்றார்கள்? ஆகவே, தொடர்ந்தும் கடந்த அரசாங்கத்தின் நிகழ்ச்சிநிரலையே இந்த அரசாங்கமும் நடைமுறைப்படுத்த நினைக்கிறது.’ என்றும் கூறினார்.

No comments:

Post a Comment