September 10, 2015

இலங்கையை துரத்தும் போர்க்குற்றம்: வெளியானது சனல் 4 ஆவணப்படம்!

இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்தக் குற்றம் மற்றும் மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பான ஆதாரங்களுடன், சனல் 4 தொலைக்காட்சி மற்றுமொரு ஆவணப்படத்தை வெளியிட்டுள்ளது.


தி சேர்ச் போஃ ஜஸ்டிஸ் � ”நீதிக்கான தேடல்” (the search for justice) எனும் இந்த ஆவணப்படம், தற்போது ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு ஆகிய மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கை தொடர்பில் ஏற்கனவே தயாரிக்கப்பட்ட நோ பயர் ஸோன் ஆவணப்பட தயாரிப்பாளரும் சனல் 4 ஊடகவியலாளருமான கலம் மக்ரேதான் இந்த ஆவணப்படத்தையும் தயாரித்துள்ளார்.

குறிப்பாக இந்த ஆவணப்படத்தில், பாதிக்கப்பட்ட மக்களின் குரல்களும், யுத்தக் குற்ற ஆதாரங்களும் உள்ளடக்கப்பட்டுள்ள நிலையில், இலங்கைக்கு இது மற்றுமொரு பேரிடியாக அமைந்துள்ளது.

யுத்தக் குற்றம் தொடர்பான அறிக்கை ஐ.நா மனித உரிமை பேரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில், அதற்கு முன்னர் இந்த ஆவணப்படத்தை ஐ.நா மனித உரிமை பேரவையில் காண்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால், யுத்தக் குற்ற விசாரணை அறிக்கையில் இது எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தப் போகின்றதென்பது புரியாத புதிராகவே இருக்கின்றது. இவ் ஆவணப்படத்தை விரைவில் தமிழ், சிங்களம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளிலும் வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தற்போது பொலிவியா, பரகுவே, ஆர்ஜென்டீனா, மெக்சிகோ, பிரேசில் ஆகிய தென்அமெரிக்க நாடுகளில் கலம் மக்ரே இந்த ஆவணப்படத்தின் முன்னோட்டத்தை காண்பித்து வருகிறார்.

இலங்கையில் யுத்தக் குற்றம் இடம்பெற்றதாக முதலில் காணொளி வடிவில் உலகிற்கு அறியப்படுத்தியது சனல் 4 ஊடகம்தான். அது குறித்த சர்ச்சை இன்னும் முடிவடையாமல் தொடரும் நிலையில், அடுத்துடுத்து கலம் மக்ரே இவ்வாறான ஆவணப் படங்களை தயாரித்து வருகின்றார்.

பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பில் சர்வதேச சமூகம் கவனம் செலுத்த வேண்டுமென்பதும், நீதி கிடைக்கவேண்டுமென்பதே அவரது நோக்கமாக உள்ளது.

No comments:

Post a Comment