September 26, 2015

தியாக தீபம் லெப்.கேணல்.திலீபனின் 28ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று(காணொளி இணைப்பு)

வடக்கு - கிழக்கு இணைந்த தமிழீழ விடுதலைக்காக யாழ். நல்லூரில் உண்ணாநோன்பிருந்து அஹிம்சை வழியில் போராடி தனது உயிரை ஆகுதியாக்கிய தியாக தீபம் திலீபனின் 28ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று தமிழர் தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் அனுஷ்டிக்கப்படுகின்றது.

தமிழீழத் தாயக மண்ணிலிருந்து இந்திய இராணுவம் வெளியேற வேண்டும் என்ற கோரிக்கை உள்ளிட்ட 5 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து1987 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 15 ஆம் திகதி நல்லூரில் திலீபன் என்று அழைக்கப்படும் இராசையா பார்த்தீபன் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தார். 12 நாள்கள் தொடர்ச்சியாக உண்ணாவிரதம் இருந்த அவர் செப்டெம்பர் மாதம் 26 ஆம் திகதி வீரச்சாவடைந்தார்.


“மக்கள் புரட்சி வெடிக்கட்டும் தமிழீழம் மலரட்டும்”
இது தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஒரு தனித்துவமான நாயகனாகத் தடம்பதித்து நடைபயின்ற தியாகி திலீபன் தனது உண்ணாநோன்புப் போராட்டத்தின் மூன்றாம் நாளில் அங்கு கூடியிருந்த பல்லாயிரம் மக்களின் முன்பு உரையாற்றி முடித்தபோது வெளியிட்ட இறுதி வரிகள். இவை வெறும் வார்த்தைகளால் கோர்க்கப்பட்ட வண்ண வரிகளல்ல! ஆவேசத்தில் பொங்கிய அடுக்குத் தொடருமல்ல.
இதய நாளங்களில் இரண்டற ஊறிக்கிடந்த உணர்வுப் பிழம்பிலிருந்து தெறித்த நெருப்புச் சரங்கள்! ஒவ்வொரு வினாடியும் சிறிது சிறிதாக உயிர் உருகிக்கொண்டிருந்தபோதும் இரும்பாய்ச் செறிந்துவிட்ட இலட்சிய உறுதியின் கொந்தளிப்பின் இடியோசைகள். எம்மைப் பாதுகாப்பது என்ற பேரில் அந்த மண்ணில் கால் பதித்த இந்தியா எம்மை அழிக்க வாளை ஓங்கியபோது தடுத்து உடைக்க எழுந்த உணர்ச்சிக் கனல்!
நல்லூர் வீதியில் ஒலித்த அந்த வார்த்தைகள் ஒவ்வொரு தமிழரினதும் உணர்வில் கலந்து இதயநாதமாகியது. விடுதலை காண எதையும் விலைகொடுக்கும் உணர்வாய் மாறி எமது உள்ளங்களை நிறைத்தது.
1987 செட்டெம்பர் 15 அன்று மாலைதான் அன்னையொருத்தி பொட்டிட்டு ஆசி வழங்க திலீபன் நல்லூர் ஆலய வீதியில் அமைக்கப்பட்ட மேடையில் ஏறி தனது உண்ணாநோன்புப் போராட்டத்தை ஆரம்பித்தான். ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்தான். அவன் மலையைப் புரட்டவேண்டும் எனக் கேட்கவுமில்லை? கடலைக் குடைந்து அமுதம் தரும்படி கேட்கவும் இல்லை. அவன் கேட்டதெல்லாம் போர் நிறுத்த காலத்தைப் பயன்படுத்தி ஜே.ஆர். ஜெயவர்த்தனா நயவஞ்சகமான முறையில் எமது மண்ணை ஆக்கிரமிக்கும் நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்தும்படி கேட்டான். புனர்வாழ்வு என்ற பேரில் சிங்களக் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்படுவதையும் பாதுகாப்பு என்ற பேரில் புதிய பொலிஸ் நிலையங்கள் நிறுவப்படுவதையும் நிறுத்தும்படிதான் கேட்டான். விடுதலைப்புலிகள் ஆயுதங்களை ஒப்படைத்துவிட்ட நிலையில் சிங்கள ஊர்காவற்படையின் ஆயுதங்களைக் களையும் படி கேட்டான். அரசியல் கைதிகளை விடுவிக்கும்படி கேட்டான்.
இந்தியா காதில் வாங்க மறுத்தது? இலங்கை தனது ஆக்கிரமிப்பை தொடர்ந்தது. திலீபனின் உண்ணா நோன்புப் போராட்டம் வெடித்தது.
நாட்கள் ஒவ்வொன்றாக நகர்ந்தன. மெல்ல உடல் தளர ஆரம்பித்து. எனினும் மூன்றாம் நாள் மக்களுக்குத் தனது உரையை வழங்குகிறான்.
தானும் தன் முன்னால் வீரச்சாவடைந்த போராளிகளும் வானத்திலிருந்து மலரப்போகும் தமிழீழத்தைக் காண்போம் என்கிறான்.
நாட்கள் நகர நகர மரணம் அவனை நெருங்கிக்கொண்டிருக்கிறது,
இந்திய இராணுவ அதிகாரிகள் வந்து ஆசை வாரத்தை காட்டுகிறார்கள். அசைந்துகொடுக்கவில்லை திலீபன். மிரட்டிப் பார்க்கிறார்கள் அஞ்சிவிடவில்லை திலீபன். இந்திய வானொலி மூலம் பொய்களைப் பரப்புகின்றனர். பொருட்படுத்தவில்லை திலீபன்.
தலைவர் பிரபாகரன் மேடைக்கு வருகிறார். வாஞ்சையுடன் தம்பி திலீபனின் தலையை வருடுகிறார். “நீ முன்னால் போ. நான் பின்னால் வருகிறேன்” என வாழ்த்துகிறார் தலைவர். திலீபன் ஒரு புன்னகையால் தன் தலைவனின் கட்டளையை ஏற்கிறான். 10ம் நாள் மாலை வீரமகன் நினைவிழக்கிறான். மெல்ல மெல்ல அவன் ஹோமா நிலைக்குத் தள்ளப்படுகிறான்.
26 செப்டெம்பர் 1987 பன்னிரண்டாம் நாள் தியாகி திலீபனின் உயிர் பிரிகிறது. வடபகுதி முழுவதுமே நல்லூரில் திரண்டுவிட்டது போல் மக்கள் வெள்ளம் அலைமோதுகிறது. ஒவ்வொருவரும் தங்கள் குடும்பத்தில ஒருவனை இழந்துவிட்டதாக வேதனையில் துடிக்கின்றனர். அன்னையரின் அலறலும் கன்னியரின் விம்மலும் வானைப் பிளக்கிறது. ஆண்களின் கண்ணீர் வீதியில் வெள்ளமாகப் பாய்ந்து மண்ணை நனைக்கிறது. ஒட்டுமொத்த மக்களின் கோபம் காற்றையே அனல் கக்க வைக்கிறது.

எங்கும் இடம்பெற்ற அஞ்சலி நிகழ்வுகள் திலீபனின் தியாக நெருப்பில் தோய்ந்து இந்திய வஞ்சனையை வீதி வீதியாகப் போட்டு மிதிக்கின்றன.
தமிழ் மக்களுக்காக உயிரைக் கொடுத்த அவன் தமிழ் மாணவர்களுக்காகத் தன் உடலையும் கொடுக்கிறான்.
ஆம்! அவன் விருப்பப்படியே அவனின் உடல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீடத்துக்கு வழங்கப்படுகிறது.

அவன் வாழ்ந்தபோதும் தியாகி! அவனின் செத்த வித்துடலும்கூட ஒரு தியாகக் கொடையாக வரலாறு படைத்தது.
உயிரையும் உடலையும் தன் தாயக மண்ணுக்கும் தாயக மக்களுக்கும் தந்துவிட்டு என்றும் வாழும் இறவாப் பேறு பெற்றான் திலீபன்!
ஆனால் தமிழ் மக்களைப் பாதுகாப்பதற்காகப் படையிறக்குவதாகச் சொல்லி இலங்கையில் கால் பதித்த இந்தியா ஜே.ஆர். செய்த இன ஒடுக்குமுறைக் கொடூரத்தைத் தானே பெறுப்பேற்று தன்னை அம்பலப்படுத்தியது. காந்தி தேசம் என்று மார்தட்டும் பாரதம் காந்தீய வழியில் நியாயம் கோரியபோது அதற்குக் காதுகொடுக்க மறந்து ஒரு மாவீரனை அணுவணுவாகச் சாகவிட்டு மாறாத அவமானத்தைத் தேடிக்கொண்டது. தமிழ் மக்களின் தாயக விடுதலை வேட்கைக்கு எதிராக 1987 ஒக்டோபர் 10ல் போர்ப்பிரகடனம் செய்தது இந்தியா.

உலகிலேயே முதல் முதலாக ஒரு உழைப்பாளி மக்கள் அரசியல் அதிகாரம் சோவியத் யூனியனில் உருவான அந்தப் புனிதமான ஒக்டோபர் 10 இந்தியப் பிராந்திய வல்லரசுக் கனவால் கறைப்படுத்தப்பட்டது. தமிழர் தாயகத்தின் பெருநகரங்களிலிருந்து தொலை தூரக் கிராமங்கள் வரை இந்தியப் படைமுகாம்கள் நியமிக்கப்பட்டன. எங்கும் சோதனைச் சாவடிகள் அடிக்கடி சுற்றிவளைப்புகள், முகமூடியணிந்த தலையாட்டிகளின் காட்டிக்கொடுப்புகள், காரணமற்ற கைதுகள், சொல்லொணாக் கொடுமையான சித்திர வதைகள், சிறையிடல்கள், பரந்து செறிந்த படுகொலைகள் எனப் பாரதத்தின் ஆக்கிரமிப்பில் எமது குருதி வழிந்துகொண்டிருந்தது.
செக்மென்ற் ஒன்று, இரண்டு, மூன்று, எனப் பெரும் சுற்றிவளைப்புகளை மேற்கொண்டும் எடுத்த இலக்கை எட்டமுடியாமல் பெருந்தோல்வியுடன் அவமானம் சுமந்து இந்தியப்படை வெளியேறியது.
அன்று ஆயுத ஆக்கிரமிப்புப் போரில் விடுதலைப் புலிகளை வெல்லமுடியாத இந்தியா இன்றுவரை தமிழ்மக்களுக்கு எதிராக ராஜதந்திரப் போரை தொடர்கிறது. இலங்கையில் இடம்பெற்ற இறுதிப்போர் ஐக்கியநாடுகள் மனித உரிமைகள் பேரவை எனச் சகல களங்களிலும் இந்திய அரசு தமிழ் மக்களைக் கழுத்தறுக்கும் வகையில் முனைப்புடன் செயற்பட்டு வருகின்றது. ஆனால் தமிழ் தலைவர்களில் ஒரு சிலர் இந்தியாவே தஞ்சம் என அடிவருடி அவர்களின் வஞ்சக நாணயக் கயிற்றில் ஆடி எமது உரிமைப்போராட்டத்தைப் பலவீனப்படுத்தி வருகின்றனர். எமக்கு இந்தியா தீர்வு பெற்றுத் தரும் என்ற மாயையை உருவாக்கி எமது மக்களை ஏமாற்றி வருகின்றனர்.
அவர்கள் தியாகி திலீபனை மறந்துவிட்டார்கள் என்பதே உண்மை! அவர்கள் அவனின் உயிர்க்கொடையின் மேன்மையை நினைக்கவில்லை என்றுதான் அர்த்தம். ஆனால் வரலாற்று நாயகன் திலீபன் எமது மக்களின் உணர்வில் கலந்துவிட்டவன். எமது விடுதலை வேட்கைக்கு எண்ணெயாக ஊடுவி ஒளியேற்றும் கருவி அவன். அவன் என்றும் எம்மில் கலந்திருப்பான்.

No comments:

Post a Comment