August 17, 2015

யாழ் வல்லையில் மதுபான நிலையம், பின்னால் அரசியல்வாதிகள்!

யாழ்ப்பாண மாவட்டத்தில் மிக மிக பேராபத்தான பிரதான வீதிகளில் ஒன்றாக ஏபி 20 என்று சொல்லப்படுகின்ற பருத்தித்துறை – நெல்லியடி – யாழ்ப்பாணம்
வீதி காணப்படுகின்றது. பெரும்பாலும் இவ்வீதியில் சிறிய, பெரிய விபத்துக்கள் அடிக்கடி இடம்பெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் அண்மைய நாட்களில் இவ்வீதியில் இடம்பெறுகின்ற விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.
இதற்குக் காரணம் வல்லையை சென்றடைகின்றமைக்கு முன்பாக புதிதாக திறக்கப்பட்டு உள்ள யாழ். பீச் ஹோட்டல் அண்ட் பார் ஆகும். பாரிய விபத்துக்கள் அடிக்கடி நேரக் கூடிய மையத்தில் இது அமைக்கப்பட்டு இருக்கின்றது.
நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட பிற்பாடே இம்மதுபான நிலையம் திறக்கப்பட்டு இருக்க வேண்டும். இந்நிலையில் இதற்கான அனுமதியை மது பரிபாலன திணைக்களம் அல்லது சுற்றுலா சபை எவ்விதம் வழங்கி இருக்க முடியும்? என்கிற கேள்விக்கான பதில் வலுவான சந்தேகங்களையே தருகின்றது.இம்மதுபான நிலையம் அமைக்கப்பட்டு உள்ள இடத்துக்கு மிக மிக அருகில் இமையாணன் அரச தமிழ் கலவன் பாடசாலை, உபலி அம்மன் ஆலயம் மற்றும் இந்துச் சுடலை ஆகியன காணப்படுகின்றன.
இச்சுற்றாடலில் வாழ்கின்ற மக்களின் வாழ்க்கைக்கும், வாழ்வாதாரத்துக்கும் பாரிய அச்சுறுத்தலாக மாறி இருக்கும் இம்மதுபான நிலையத்தை மூட அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் ஒட்டுமொத்த குரலாக உள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலுக்கு பிற்பாடு இம்மதுபான நிலையத்தை மூடுவிப்பார்கள் என்று இப்பகுதி மக்கள் கங்கணம் கட்டி உள்ளனர்.

No comments:

Post a Comment