January 3, 2015

எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவும் தமிழினப் படுகொலையாளியே ! எக்கனோமிஸ்ற் The Economist சஞ்சிகை அம்பலப்படுத்தியது !!




ஈழத்தமிழினத்தின் மீதான இனஅழிப்பின் சூத்திரதாரிகளில் ஒருவராக சிறிலங்கா அரசுத் தலைவர் தேர்தலில் எதிரணியின் பொதுவேட்பாளாராக களமிறக்கப்பட்டுள்ள
மைத்திரிபால சிறிசேனவும் ஒருவரென எக்கனோமிஸ்ற் The  Economist  சஞ்சிகை செய்திவெளியிட்டுள்ளது.
முள்ளிவாய்க்கால் இறுதிக்கட்டப் போரில், 2009-மே17ம் திகதி வரையிலான கடைசி இரண்டு வாரங்கள், சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சராக மைத்திரிபால சிறிசேனவே பொறுப்பு வகித்தார் என எக்கனோமிஸ்ற் தெரிவித்துள்ளது.
இக்காலப்பகுதியில் சிறிலங்காவின் அரசுத்தலைவராக இருக்கின்ற மகிந்த ராஜபக்ச வெளிநாட்டுப்பயணத்தினை மேற்கொண்டிருந்த நிலையில்அவர் வகித்திருந்த பாதுகாப்பு அமைச்சுப் பொறுப்பினை மைத்திரிபால சிறிசேனவிடமே ஒப்படைந்திருந்தார்.
சிறிலங்கா அரசுத் தலைவர் தேர்தொடர்பில் Last days of the Raj? தலைப்பிட்டு சனவரி 3ம் திகதி வெளியிடப்பட்டுள்ள கட்டுரையொன்றிலேயே இவ்விவகாரத்தினை எக்கனோமிஸ்ற் சஞ்சிகை அம்பலப்படுத்தியுள்ளது.
போரின் உச்சகட்ட காலமாக அமைந்த இக்காலப்பகுதியில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கொத்துக் கொத்தாக படுககொலை செய்யப்பட்டிருந்ததோடு புலித்தேவன், பா.நடேசன் உட்பட விடுதலைப்புலிகளின் முக்கிய தலைவர்கள் படுகொலை செய்யப்பட்டும் இருந்தனர்.
பிரித்தானியாவின் சனல்-4 தொலைக்காட்சி வெளிக்கொணர்ந்த பாலகன் பாலசந்திரன், இசைப்பிரியா உட்பட பலரும் இக்காலப்பகுதியிலேயே படுகொலைக்கு செய்யப்பட்டிருந்தனர்.
பெரும் இனஅழிபொன்றின் ஊடாக தமிழர் தேசத்தினை ஆக்கிரமித்து, தற்போது அனைத்துலகத்தின் குற்றச்சாட்டுக்க ஆளாகியுள்ள சிறிலங்காவின் இராணுவத்தளபதிகளையும் மற்றும் அரசியல் தலைவர்களையும் பாதுகாப்பேன் என மைத்திரிபால சிறிசேன சூழுரைத்து வருகின்ற சூழலில், எக்கனோமிஸ்ற் சஞ்சிகை இவ்விவகாரத்தினை அம்பலப்படுதியுள்ளமை இங்கு குறிப்பிடதக்கது.

No comments:

Post a Comment